Motivational Short Story in Tamil - Tactical Idea | Smart Work

 


இன்று நாம் ஒவ்வொருவருமே தவிர்க்க முடியாத பல பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டு வருகின்றோம். அவ்வாறு நாம் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளில் பல பிரச்சினைகள் மீள முடியாத வண்ணம் நம்மை சிக்க வைக்கின்ற பிரச்சினைகளாகவே வருகின்றன. 

ஆனால் உண்மை என்னவென்றால் நமக்கு எத்தகைய பிரச்சினைகள் வந்தாலும் அப்பிரச்சினைகளை கண்டு பயப்படாமல் சரியான தந்திரோபாய முடிவுகளை எடுப்போமேயானால் நமக்கு வந்திருக்கின்ற பிரச்சினைகளைக் கூட நமக்கு சாதகமான மாற்றிக்கொள்ள முடியும்.

Motivational Short Story in Tamil

அதேபோல் கடின உழைப்பை மட்டுமே வழங்கி குறைந்த வெளியீட்டை பெறுவதைவிட புத்திசாலித்தனத்தோடு எமது வேலைகளை நாம் செய்வோமேயானால் குறைந்த உழைப்பில் உழைப்பில் கூட பெருமளவான வெளியீட்டினை பார்க்க முடியும்.


அதாவது Hard Work செய்வதற்கு பதிலாக Smart Work செய்தால் மிகப்பெரும் வெற்றியினை அடையலாம் என்பதாகும். தந்திரோபாய யோசனை மற்றும் Smart Work பற்றிய Motivational Short Story ஆக இந்தப்பதிவு இருக்கப்போகின்றது.


இந்தப் பதிவில் நாம், நமது தலைக்குமேல் பிரச்சினைகள் வருகின்ற போது செய்வதறியாது திகைத்து நிற்பதை விட தந்திரோபாய யோசனை மூலம் அந்த பிரச்சினையை சமாளிக்க முடியும் என்பதனையும், அதிக கடின உழைப்பினை வழங்குவதற்கு பதிலாக புத்தி சாதுரியமாக வேலை செய்து எவ்வாறு வெற்றி பெறுவது என்பதனையும் பார்க்க இருக்கின்றோம். எனவே வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம். 

TACTICAL IDEA

ஒருமுறை அரசறொருவர் வேட்டையாடுவதற்காக காட்டுக்குள் சென்ற போது தன்னுடைய செல்ல பிராணியான நாயினையும் கூடவே அழைத்து சென்றார். அவ்வாறு சென்றவர் நாயினை ஓரிடத்தில் கவனமாக இருக்குமாறு சொல்லிவிட்டு வேட்டைக்கு சென்று விட்டார். ஆனால் நாயோ பக்கத்தில் பறந்துகொண்டிருந்த வண்ணத்துப் பூச்சிகளை பிடிக்கும் வண்ணம் துரத்திக் கொண்டே சென்றது. இவ்வாறு சிறிது தூரம் சென்ற நாய் தான் வழி தவறி வந்து விட்டதை உணர்ந்து கொண்டது.


இதனால் செய்வதறியாது திகைத்த நாய் அங்குமிங்குமாக அலைந்து திரிந்தது. அப்போது தூரத்தில் இருந்து யாரோ வருவது போன்ற ஒரு பிம்பம் தோன்றவே உடனே யாரென்று பார்க்க அங்கே உறுமிக் கொண்டு பெரிய தோற்றத்தில் வருவது ஒரு புலி என்று அந்த நாய்க்கு விளங்கியது. வருவது ஒரு புலி என்பதை பார்த்த அந்த நாய் பயத்தில் நடுங்கி போனது. 


எப்படியோ புலி தன் அருகே வந்தால் தன்னை கொன்று விடும் என்று உணர்ந்துகொண்ட நாய் மிகவும் சாமர்த்தியமான முறையில் மிகவும் தந்திரமாக திட்டமொன்றை போட்டது. அத்திட்டத்தின்படி தான் நிற்கும் இடத்தில் இருந்த சில எலும்புத் துண்டுகளை எடுத்துக் கொண்டு புலி வருகின்ற பாதையை நோக்கி தன் முதுகை காட்டிக் கொண்டு எலும்பு துண்டுகளை உண்பது போல பாசாங்கு காட்டியது அந்நாய்.  


இந்நிலையில் நாய் ஒன்று இருப்பதை கண்ட அப்புலி நாயின் அருகே வர தொடங்கியது. புலி தன்னருகே வருவதை உணர்ந்த நாய் மிகவும் சத்தமாக, “ஆஹா! என்ன ருசி. அருமையாக இருக்கின்றது. இன்னும் ஒரு புலியின் மாமிசமும், எலும்புத்துண்டுகளும் கிடைத்தால் நன்றாக இருக்கும்” என்று எலும்புத் துண்டுகளை கடித்தவாறே தன் நாக்கினை மேலும் கீழுமாக வளைத்தது. இதனைக் கேட்ட புலிக்கு பயம் தலைக்கேறியது.


நாய் சொன்னதைக் கேட்ட புலிக்கு பயம் ஏற்பட்டு உண்மையிலேயே அந்த நாய் ஒரு புலியை தான் தின்று கொண்டிருக்கின்றது என்று எண்ணி அந்த இடத்தை விட்டு பயந்து ஓடியது. இவ்வாறு புலி அந்த இடத்தை விட்டு பயந்து ஓடியதை பார்த்த அந்த நாய், “அப்பாடா! தப்பிவிட்டோம். இல்லையென்றால் நம்மை புலி தின்று இருக்கும்” என்று எண்ணி சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருந்தது. 


இவை அனைத்தையும் மேலே நின்று கொண்டு குரங்கு ஒன்று பார்த்துக் கொண்டிருந்தது. நாய் தன்னுடைய தந்திரோபாய திட்டத்தின் மூலம் புலியை ஏமாற்றி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்ததை பார்த்த குரங்கு, இதனை உடனடியாக சென்று புலியிடம் கூறி எப்படியாவது நல்ல பெயர் வாங்கி விட வேண்டும் என்று எண்ணியது. உடனே அவ்விடத்தை விட்டு சென்று புலியிடம் போய் உண்மையைக் கூறியது. 


குரங்கு சொல்வதைக் கேட்ட புலிக்கு கோபம் தலைக்கேறியது. “என்னது! அந்த நாய் கூறியது எல்லாம் பொய்யா? என்னை ஏமாற்றவா அது அவ்வாறு செய்தது. என்ன தைரியம் அந்த நாய்க்கு. இதோ பார் நான் உடனே சென்று அந்த நாயை என்ன பண்ணுகிறேன் என்று பார். நான் யார் என்பதை அந்த நாய்க்கு காட்டுகிறேன்” என்று ஆவேசமாகக் கூறியவாறு நாய் இருக்கும் இடத்தை நோக்கி சென்றது புலி.


புலியை ஏமாற்றிய சந்தோசத்தில் ஆடிக்கொண்டிருந்த நாய்க்கு ஒரு பேரதிர்ச்சி. மீண்டும் தன்னை நோக்கி புலி வருவதை பார்த்த நாய், இந்த முறை எதைச் சொல்லி புலியை ஏமாற்றுவது என்று தெரியவில்லை. ஆனால் புலியோடு சேர்ந்து கொண்டு குரங்கொன்று வருவதை பார்த்த அந்த நாய்க்கு உடனடியாக இன்னுமொரு சமயோசிதமான திட்டம் தோன்றியது. இந்த முறை சற்று வித்தியாசமாக முயற்சி செய்தது நாய். 


Tactical Idea

முன்னர் போன்றே புலிக்கு முதுகை காட்டிக் கொண்டு உட்கார்ந்த நாய், புலி தன் அருகே வருவதை உணர்ந்ததும் முன்னரை விட மிகவும் சத்தமாக தன் குரலை உயர்த்தி, “அடடா! நாம் நல்ல தரமான புலியொன்றை பிடித்துக்கொண்டு வருமாறு குரங்கு ஒன்றை அனுப்பினோமே. இன்னும் காணவில்லையே. அந்த குரங்கிடம் நீ ஒரு புலியை என்னிடம் கூட்டி வந்தால் உனக்கும் அதில் பாதி கிடைக்கும் என்று சொன்னேனே. அப்படியிருந்தும் ஏன் இன்னும் காணவில்லை” என்று நன்றாக புலிக்கு கேட்கும்படி மிகவும் சத்தமாக கூறியது அந்நாய்.   


இதனை முழுமையாக கேட்ட அப்புலி குரங்கை பார்த்து கோபமாக, “என்னது என்னில் பாதி உனக்கு தேவையா? உன்னுடைய நரித்தனத்தை நீ என்னிடம் காட்டுகிறாயா? இரு உன்னை நான் என்ன செய்கிறேன் பார்” என்று தன் முழு கோபத்தையும் குரங்கின் மேல் காட்டியது. இதனை வாய்ப்பாக கருதிய நாய் அந்த இடத்தை விட்டு மெல்ல நகர்ந்து சென்று தன் உயிரை காப்பாற்றிக் கொண்டது. 

SMART WORK 

விறகு வெட்டியான இரு நண்பர்கள் ஒரு முறை அடர்ந்த காட்டுப் பகுதிக்கு விறகுகளை வெட்டுவதற்காக ஒன்றாகவே வேலைக்கு சென்றனர். வேலைக்கு சென்ற அந்த நாள் முழுவதும் இருவருமே வேறு வேறு இடங்களில் சென்று விறகுகளை வெட்டி விட்டு வேலை முடிந்ததும் ஒன்றாகக் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர்.


அப்போது முதலாவது நண்பர் இரண்டாவது நண்பரை விட மிகவும் அதிகமான அளவில் விறகுகளை வெட்டியிருந்தார். ஆனால் இரண்டாவது நண்பரோ முதலாவது நண்பரை குறைந்த அளவே விறகுகளை வெட்டியிருந்தார்.


இவ்வாறு முதலாவது நண்பன் தன்னை விட அதிகமாக விறகுகளை வெட்டியதை பார்த்ததும் அவருக்கு சற்று ஆச்சரியம். எவ்வாறு அவனால் மட்டும் இவ்வளவு அதிகமாக விறகுகளை வெட்ட முடிந்தது. சரி நாளை பார்த்துக்கொள்ளலாம். அவரை விட அதிகமாக நான் வெற்றி காட்டுகிறேன் என்று மனதுக்குள் நினைத்தவாறே தூங்கச் சென்றார் இரண்டாவது நண்பர்.


அடுத்த நாள் விடிந்தது. விடிந்ததும் வழமை போன்று இருவரும் காட்டுக்குச் சென்று வெவ்வேறு பகுதிகளாக பிரிந்து விறகுகளை வெட்ட ஆரம்பித்தனர். அவ்வாறு விறகுகளை வெட்டி தன்னுடைய முழுமையான வேலைநேரம் முடிந்ததும் இருவரும் நேற்று போன்றே இன்றும் ஒன்றாகக்கூடி கதைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த முறையும் முதலாவது நண்பர் இரண்டாவது நண்பரை விட அதிகமான அளவில் விறகுகளை வெட்டியிருந்தார். 


ஆனால் இந்த முறை தயங்காமல் முதலாவது நபரிடம், எவ்வாறு நீ என்னை விட அதிகமாக விறகுகளை வெட்டுகிறாய்? என்று கேட்டு விட்டார். அதற்கு அம் முதலாவது நபர் நான் தொடர்ச்சியாக விறகுகளை வெட்டுகிறேன் என்று பதிலளித்தார். இதனைக் கேட்ட இரண்டாவது நண்பர் ஓய்வில்லாமலா தொடர்ச்சியாக வெட்டுகிறாய்? என்று கேட்டார். அதற்கு அவர் இல்லை இல்லை இடையிடையே அதிகளவில் ஓய்வு எடுத்துக் கொள்வேன் என்று கூறினார். 


இவ்வாறு கூறுவதை கேட்ட இரண்டாவது நண்பர் அடுத்த நாள் வேலைக்குச் சென்றதும் இடையிடையே அதிகமாக ஓய்வு எடுத்து விறகுகளை வெட்டினார். ஆனால் இந்த முறையும் முதலாவது நண்பரை விட குறைந்த அளவே அவரால் வெட்ட முடிந்தது. இதனை பார்த்து அவருக்கு அதிகமாக கோபம் வந்தது. ஏன் என்னால் மட்டும் முடியவில்லை. அவன் என்னதான் செய்கின்றான் என்று நாளை பார்த்தே ஆக வேண்டும் என்று தனக்குள் நினைத்துக் கொண்டார்.


Smart Work

அடுத்த நாள் வேலைக்கு சென்றதுமே இருவரும் வெவ்வேறு பகுதிகளுக்கு பிரிந்து செல்வது போன்று சென்றனர். ஆனால் இந்தமுறை இரண்டாவது நண்பர் முதலாவது நண்பரை பின்தொடர்ந்து சென்று அவர் என்னதான் செய்கின்றார் என்று பார்த்துக் கொண்டிருந்தார். அவ்வாறு முதலாவது நண்பரை நோட்டமிட்டு கொண்டிருக்கும் போது முதலாவது நண்பர் தன்னைவிட அதிகளவில் விறகுகளை வெட்டுவதற்கான விடை அவருக்கு பலப்பட்டது.


ஆம் தன்னுடைய ஓய்வு நேரத்தில் ஓய்வெடுக்காமல் தன்னுடைய கோடாரியை தீட்டிக் கொண்டிருந்தார் முதலாவது நண்பர். அவரது இத்தகைய செயல் தான் தன்னைவிட அதிக அளவில் விறகுகளை வெட்டுவதற்கு காரணம் என்பதை அப்போது கண்டுகொண்டார் இரண்டாவது நண்பர். இதன் பின்னர் அவர் தன்னுடைய ஓய்வு நேரத்தில் கோடாரியை தீட்டி அவரைவிட அதிகளவில் விறகுகளை வெட்டத் தொடங்கினார். 

FINALLY

இந்த இரண்டு கதைகளின் மூலமும் நீங்கள் ஒரு விடயத்தை புரிந்து கொண்டிருப்பீர்கள். எத்தகைய பிரச்சினைகள் நமக்கு வந்தாலும், நம்முடைய உயிரே போகும் அளவுக்கு அந்த பிரச்சினை இருந்தாலும் நாம் அந்த இடத்தில் மிகவும் தந்திரமான முறையில் யோசித்து மிகவும் புத்திசாலித்தனமாக செயற்படுவோம் ஆனால் எத்தகைய பிரச்சினையாக இருந்தாலும் அதனை நம்மால் இலகுவாக வென்றுவிட முடியும்.


அதேசமயம் எப்போதும் கடின உழைப்பை மட்டுமே செலுத்தினால் நம்மால் முன்னுக்கு வர முடியும் என்பது கிடையாது. கடின உழைப்பை விட மிகவும் புத்திசாலித்தனமாக செயற்படுவதுதான் நம்மை மிகப்பெரிய வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். அதாவது Hard Work செய்வதைவிட Smart Work செய்வது தான் நம்மை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு செல்லும். குறிப்பாக நாம் இங்கே சொல்ல வருவது Hard Work ஓடு சேர்ந்த Smart Work இனைத்தான்.


நிச்சயமாக இந்த Motivational Short Story உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நாங்கள் நினைக்கின்றோம். அவ்வாறு பிடித்திருந்தால் உங்களது குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்களிடம் இந்த பதிவை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அதே சமயம் இங்கு குறிப்பிட்ட விடயங்களை உங்கள் வாழ்வில் எடுத்து நடக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். மீண்டும் ஒரு சிறந்த பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுகின்றோம்.

Post a Comment

Previous Post Next Post