3 Things You Must Focus on in Your Life - Health, Wealth, Family & Friends

  

இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் தான் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை மிக நீண்ட போராட்டம் நிறைந்த வாழ்க்கையினையே வாழ்ந்து கொண்டிருக்கின்றான். எந்தவொரு மனிதனுடைய வாழ்க்கையினை எடுத்துக் கொண்டாலும் அதில் சந்தோஷம், மகிழ்ச்சி, வெற்றி, கவலை, புறக்கணிப்புகள், அவமானங்கள், தோல்விகள், ஏற்றத்தாழ்வுகள், நம்பிக்கை, அவநம்பிக்கை போன்றே விடயங்கள் இருந்தே அமையும். அந்த வகையில் உலகில் பல கோடிக்கணக்கான மக்கள் இருந்தாலும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் இன்னொருவரின் வாழ்க்கையிலிருந்து வேறுபட்டதாகவே அமைகின்றது.


3 Things You Must Focus on in Your Life - Health, Wealth, Family & Friends

இவ்வாறு பல விடயங்களில் ஒருவருக்கொருவர் வேறுபட்டு இருந்தாலும் குறிப்பிட்ட சில விடயங்களை பொருத்தவரையில் உலகில் உள்ள எல்லோருக்கும் அது பொதுவானதாகவே காணப்படுகின்றது. அந்த வகையில் உலகில் உள்ள அனைவருக்கும் பொதுவான, அதேசமயத்தில் எல்லோரும் மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய மூன்று விடயங்களை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். சரி வாருங்கள் 3 things you must focus on in your life பதிவிற்குள் செல்லலாம்.

FOCUS ON 3 THINGS

நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய வாழ்க்கையில் மிக முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய மூன்று விடயங்கள் உள்ளன. முதலாவது உங்களுடைய ஆரோக்கியம், இரண்டாவது  உங்களுடைய செல்வம், மூன்றாவது உங்களுடைய குடும்பம் மற்றும் நண்பர்கள். இந்த மூன்று விடயங்கள் மீதும் நீங்கள் மிகுந்த கரிசனையோடு இருக்க வேண்டும். ஏனெனில் உங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்கின்ற மிக முக்கியமான காரணிகள் இவையாகும். ஆனால் இன்று நம்மில் பலர் இம்மூன்று விடயங்கள் மீது கவனம் செலுத்த தவறுகின்றோம். 


ஒருவர் பல கோடிகளுக்கு சொந்தக்காரராக இருந்தாலும் அவரிடம் ஆரோக்கியம் இல்லை என்றால் எத்தனை கோடி இருந்தும் அதில் பலன் கிடையாது. அதேபோல் என்னதான் நல்ல ஆரோக்கியம் இருந்தாலும் அவரிடம் பணம் இல்லை என்றால் சில நேரங்களில் அந்த ஆரோக்கியம் கூட வீண் என்று தோன்றக்கூடும். ஆரோக்கியம், பணம் ஆகிய இரண்டும் இருந்தும் நம்மில் அன்பு செலுத்துகின்ற குடும்ப உறவுகள் மற்றும் நல்ல நண்பர்கள் இல்லையென்றால் வாழ்க்கை வெறுத்து தனிமையே நிரந்தரமாகிவிடும். 

1. YOUR HEALTH

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் விரும்புவதே தான் இறக்கும் வரை ஆரோக்கியத்துடனும், உடல் வலிமையுடனும் இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால் பலருக்கு அவ்வாறு அமைவதில்லை. காரணம் தன் ஆரோக்கியத்தின் மீதான கவனக் குறைவாகும். ஒருவர் தன்னுடைய ஆரோக்கியத்திற்காக நேரம் ஒதுக்கவில்லை என்றால், தன் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தவில்லை என்றால் நிச்சயமாக அவருடைய வாழ்க்கை வீணாகிவிடும்.


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற ஒரு கூற்று இருக்கின்றது. உண்மையிலேயே இந்த கூற்று மிகப்பொருத்தமானதாகும். ஏனெனில் தன்னிடம் கோடிக்கணக்கான பணம் இல்லை என்றாலும் முழுமையான உடல் ஆரோக்கியம் இருக்கின்ற போது அதுவே செல்வத்தை மிஞ்சிய வரமாகும். நோய்வாய்ப்பட்டு தினமும் ஆரோக்கியத்திற்க்காக ஏங்குகின்றவர்களிடம் சென்று கேட்டால் கோடிக்கணக்கான பணத்திற்கு சொந்தக்காரனாக இருப்பதைவிட நல்ல தேக ஆரோக்கியத்துடன் இருப்பதுதான் சிறந்தது என்று கூறுவார்கள்.


எனவே உங்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்துங்கள். அதிகமாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று இரவு, பகலாக தூக்கத்தை தொலைத்து சரியான ஓய்வில்லாமல் ஆரோக்கியத்தை இழந்து பணத்தை சம்பாதிப்பதை விட, தனது ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தி தினமும் உடற்பயிற்சி செய்தல், புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்தல், அதிகமாக தண்ணீர் குடித்தல், துரித உணவுகளை முற்றாக தவிர்த்தல் போன்றே ஆரோக்கிய வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தினை மேம்படுத்தி கொள்ளலாம்.

2. YOUR WEALTH 

ஆரோக்கியத்திற்கு அடுத்து ஒரு மனிதனுக்கு மிக அத்தியாவசியமானது பணமாகும். உங்களுடைய அத்தியாவசியத் தேவைகளில் இருந்து ஆடம்பர தேவைகள் வரை நிறைவேற்ற வேண்டும் எனில் அதற்கு பணம் இன்றியமையாததாக இருக்கின்றது. உலகில் கோடிக்கணக்கான மக்கள் பல தியாகங்களை செய்து இரவு, பகலாக பாடுபடுவது இந்த பணத்தினை சேர்க்க வேண்டும் என்பதற்காகவாகும். அந்தளவுக்கு பணம் என்பது ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது.


ஆனால் பணத்தைப் பொறுத்தவரை அது எல்லோரிடமும் அதிகம் குடிபோவதில்லை. பணத்தைப் பற்றிய சரியான பொருளாதார அறிவுள்ள, பணத்தை வளர்க்கக்கூடிய தன்மை உள்ளவர்களிடம் மட்டுமே அது அதிகமாக சேர்ந்துகொள்ளும். பணத்தை நீங்கள் அதிகமாக கைவசப்படுத்த வேண்டும் என்றால் பணத்தின் பின்னால் நீங்கள் செல்லக்கூடாது. ஒருபோதும் பணத்திற்காக நீங்கள் வேலை செய்யக்கூடாது. உங்களுக்காக பணத்தை வேலை செய்விக்க வேண்டும். அப்போதுதான் உங்களால் அதிகளவான பணத்திற்கு சொந்தக்காரராக முடியும்.


இங்கே உங்களுக்கு ஒரு கேள்வி எழுந்திருக்கலாம். அது எவ்வாறு பணத்தை நமக்காக வேலை செய்ய வைப்பது? இதற்கான தெளிவான விளக்கத்தினை பெற Robert kiyosaki எழுதிய Rich Dad Poor Dad என்ற புத்தகத்தையும் Napoleon hill எழுதிய Think and Grow Rich ஆகிய இரு புத்தகங்களையும் படிக்க வேண்டும். இந்த இரு புத்தகங்களும் சரியான பொருளாதார அறிவினை உங்களுக்கு கற்றுத் தருவதோடு செல்வத்தை குவிப்பதற்கான மிகப்பெரும் ரகசியத்தையும் உங்களுக்கு கற்றுத்தரும்.

3. YOUR FAMILY & FRIENDS

ஒருவருடைய வெற்றியில் மிகப்பெரும் பங்கினை வகிப்பவர்கள் அவர்களுடைய குடும்பமும் மற்றும் அவர்களுடைய நல்ல நண்பர்களும் தான். இறுதி வரை நம்மோடு இருந்து நமக்கு தேவையான அத்தனை ஒத்துழைப்புகளையும் தந்து நமது வெற்றிக்காக போராடுகின்ற தாய், தந்தை, சகோதர சகோதரிகள், மனைவி, கணவன், பிள்ளைகள் என நல்ல குடும்பத்தை பெறுவது என்பது மிகப் பெரும் அருட்கொடையாகும். அதேபோல் உங்களுடைய வெற்றியினை தன்னுடைய வெற்றியாக கருதுகின்ற நல்ல நண்பனை பெறுவது மிகப்பெரும் பாக்கியமாகும்.


ஆனால் இன்று பலர் குடும்பங்களினதும், நல்ல நண்பர்களினதும் முக்கியத்துவத்தினை அறியாது அவர்களை புறக்கணிக்கின்றனர். அவர்களுக்கு கொடுக்கின்ற மரியாதையையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தையும் கொடுப்பதற்கு தவறுகின்றனர். என்னிடம் தேவைக்கு அதிகமாகவே பணம் இருக்கின்றது. நல்ல ஆரோக்கியம் இருக்கின்றது. பிறகு எதற்கு நான் மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டும் என்று ஏளனமாக தன் குடும்ப உறுப்பினர்களையும், நல்ல நண்பர்களையும் நினைக்கின்றனர். ஆனால் இவ்வாறு இருப்பது முட்டாள்தனமானதாகும். 


எவருடைய உதவியும் இன்றி எந்தவொரு மனிதனாலும் முன்னுக்கு வரமுடியாது. வெற்றியினை நாம் சுவைக்க வேண்டும் என்றால் பல சூழ்நிலைகளில் பிறருடைய உதவியை நாம் நாட வேண்டியிருக்கும். அவ்வாறு உதவுபவர்கள் உங்களது குடும்ப உறுப்பினராகவும் உங்கள் நம்பிக்கைக்குரிய நண்பராகவும் இருக்கும் பட்சத்தில் அவர்கள் நமக்கு உண்மைக்கு உண்மையாக உதவி புரிவார்கள். இதே மற்றவர்கள் எனில் எங்கே நாம் வெற்றி பெற்றுவிடுவோமோ, பணக்காரனாக ஆகிவிடுவோமோ என்ற பொறாமையில் வஞ்சகத் தன்மையுடனேயே உதவி செய்வர்.


எனவே உங்களுடைய குடும்ப உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கியத்துவம் செலுத்துவதோடு, நல்ல நம்பிக்கைக்குரிய நண்பர்களை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அவர்களின் உறவினை அடிக்கடி புதுப்பித்துக் கொண்டு வரவேண்டும். அவர்களை கண்ணியத்தோடும் அவர்களுக்குரிய மரியாதையோடும் நடத்த வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுயநலத்தோடு இருந்து விடக்கூடாது. ஒருபோதும் தேவைக்காக மட்டுமே அவர்களோடு பழகாதீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நல்ல நண்பர்களிடம் அன்பினை விதையுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் வெற்றி கிடைக்கும். 

FINALLY

மேலே குறிப்பிட்ட இந்த மூன்று விடயங்களும் ஒரு மனிதனுடைய வாழ்வில் மிக முக்கியமான, அதிக கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் ஆகும். இம்மூன்று விடயங்களில் ஒன்று இல்லையென்றாலும் வாழ்க்கை சிறப்பாக அமைவது கடினம். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய Health, Wealth, Family & Friends தொடர்பாக மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இவற்றுக்காக நேரம் ஒதுக்கி அதில் குறைபாடுகள் ஏதும் இருப்பின் அவற்றை திருத்தி கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.


இந்த மூன்று விடயங்களும் உங்களுக்கு நிறைவாக கிடைக்கின்ற போது உங்கள் வாழ்வில் நீங்கள் அடைய நினைக்கும் இலக்கினை அடைந்து வெற்றி பெறுவது கடிமான காரியமாக இருக்காது. ஆனால் இன்று பலர் இந்த மூன்று விடயங்கள் தொடர்பாக அலட்சிய போக்கை கடைபிடிக்கின்றனர். அதிலும் குறிப்பாக Health தொடர்பாக அதிக முக்கியத்துவத்தினை அளிக்கத்தவருகின்றனர். ஆனால் மற்ற இரண்டு விடயங்களுக்கும் இதுதான் அடிப்படை என்பதை பலர் மறந்திருக்கின்றனர்.


இன்னும் சொல்லப்போனால் பணத்தை அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஆரோக்கியத்தை இழந்து, பணத்தை அதிகம் கைவசப்படுத்தியதன் பின்னர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நல்ல நண்பர்களை புறக்கணித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் இது தவறான விடயமாகும். எனவே Health, Wealth, Family & Friends ஆகிய 3 விடயங்களிலும் கவனம் செலுத்தி வாழ்வில் வெற்றிபெற எங்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தப்பதிவு உங்களுக்கு பயனுடையதாக இருந்திருக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டுமொரு சிறந்த பதிவில் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுகின்றோம் நன்றி.

Post a Comment

Previous Post Next Post