Introduction
ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னம்பிக்கை என்பது இன்றியமையாத ஒன்றாகும். இது என்னால் முடியும் என்று ஒரு மனிதன் மனதார நம்புகின்ற போதுதான் அவ்விடயம் அவனுக்கு சாத்தியமாகின்றது. அவ்வாறல்லாமல் இது என்னால் முடியாது இதை நான் எவ்வாறு செய்வது என்று தயங்கினாலோ தன்னம்பிக்கை இழந்தாலோ அவனுக்கு அந்த விடயம் இயலாத ஒன்றாகவே காணப்படும். அவ்வாறு தன்னம்பிக்கையின் முக்கியத்துவத்தினை உணர்த்துகின்ற ஒரு குட்டி கதையினை இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.
ஒரு சிற்றரசின் இளவரசராக இருந்த ராஜா ஒருவர் ஒருமுறை படைகளோடு சேர்ந்து போரிடவந்த தன்னை விட வலிமையான, பல மடங்கு படை பலம் உள்ள பல நாட்டுப் படைகளோடு போரிட்டு அதில் வெற்றி பெற்ற தன் எதிரி நாட்டு படைகளோடு போரிடுவதற்காக தயார் நிலையில் இருந்தார்.
இந்நிலையில் தான், தன் படை வீரர்கள் போருக்கு செல்வதற்காக தயார் நிலையில் இருக்கின்றார்களா என்பதை அறிந்து கொள்வதற்காக தன் தளபதியிடம் சென்று, “என்ன தளபதியாரே நாம் இப்போரில் வெற்றி அடைந்து விடுவோமா” என அவரைப் பார்த்து தன்னம்பிக்கை மிகுந்த முகத்துடன் கேட்டார். அதற்கு மன்னரைப் பார்த்து தளபதி, “வென்று விடுவோம் என்று நினைக்கின்றேன் அரசே” என்றார்.
இதனைக் கேட்டதும் ராஜாவுக்கு பெரிய அதிர்ச்சி. தன்னுடைய படை வீரர்களில் இருந்து படைத்தளபதி வரை இந்தப் போரில் நாம் வென்று விடுவோம் என்று சந்தேகிக்கின்றனர் என ராஜாவுக்கு மிகுந்த மன வருத்தம். ஏனெனில் இந்தப் போரில் நாம் நிச்சயமாக வென்று விடுவோம் என்று மன்னர் நம்பினார். அவருக்கு இருந்த நம்பிக்கை அவரது படை வீரர்களுக்கோ அல்லது படைத் தளபதிக்கோ இருக்கவில்லை. இதனால் செய்வதறியாது தன் மந்திரியாரிடம் சென்று ஆலோசனை கேட்கவே, அவரும் சிறந்த ஆலோசனை ஒன்றை மன்னருக்கு கூறினார்.
தன் மந்திரியார் கூறிய ஆலோசனைப்படியே தான் போருக்குச் செல்வதற்கு முன்பு துறவி ஒருவரை சந்திக்கின்றார் மன்னர். அவ்வாறு துறவியை மன்னர் சந்தித்தபோது மன்னருக்கு ஒரு நாணயத்தை தன்னுடைய ஆசீர்வாதமாக கொடுக்கின்றார். இந்த நாணயத்தை எடுத்துக்கொண்டு தன் படைத்தளபதி மற்றும் படை வீரர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, துறவி ஒருவர் நமக்கெல்லாம் ஆசிர்வாதம் தந்துள்ளார். அவர் தந்துள்ள இந்த நாணயம் தான் நமது வெற்றி, தோல்வியை தீர்மானிக்க போகின்றது என்று அவர்களிடம் கூறினார். இதனைக் கேட்ட படைத் தளபதிக்கு அல்லது படைவீரர்களுக்கு எதுவும் புரியவில்லை. இந்த நாணயம் எப்படி நமது வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் என்று ஆவலோடு இருந்தனர்.
இந்நிலையில் போருக்குச் செல்வதற்கான நாளும் வந்தது. அதன்படி மன்னர் தன் படைத்தளபதி மற்றும் படை வீரர்களை அழைத்துக்கொண்டு போருக்காக சென்று கொண்டிருக்கின்ற வேளையில் வழியில் உள்ள கோவில் ஒன்றின் அருகில் நிறுத்தி பிரார்த்தனைகளை செய்து விட்டு துறவி தனக்கு தந்த அந்த நாணயத்தை எடுத்து தளபதியாரிடமும் தன் வீரர்களிடமும் காட்டிய படியே, “இப்போது நான் இந்த நாணயத்தை சுழற்ற போகிறேன். அதில் விழுவது தலையாக இருந்தால் நமக்கு இந்தப் போரில் வெற்றி கிடைக்கும். அவ்வாறு இல்லாமல் பூ விழுந்தால் இந்தப்போரில் நாம் தோற்று விடுவோம் என்று துறவி கூறியிருக்கின்றார். இதனை யாராலும் மாற்ற முடியாது. நாம் வெற்றி பெறுவதா? இல்லையா? என்பதை இந்த நாணயம் தான் தீர்மானிக்கப் போகின்றது” என்று கூறியபடியே நாணயத்தை சுழற்ற ஆரம்பித்தார் மன்னர்.
இவ்வாறு மன்னர் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்த தளபதியும், வீரர்களும் அந்த நாணயத்தை சுழற்றுகின்ற போது தலை விழுமா? இல்லை பூ விழுமா? என்று மிகுந்த ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் மன்னர் சுழற்றியபோது தலை விழுந்தது. இதனைப் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்த வீரர்கள் அனைவரும் உற்சாகத்தில் நாம் இந்த போரில் வென்று விடுவோம் என்று கூச்சலிட தொடங்கினர். அதேபோல் தளபதியும் மிகுந்த சந்தோஷத்துடனும் தன்னம்பிக்கையுடனும் நாம் நிச்சயமாக இந்தப் போரில் வெற்றி அடைந்து மகுடம் சூடுவோம் என்று நெஞ்சை நிமிர்த்தியவாறு மன்னரிடம் கூறினார்.
இவ்வாறு தளபதியாரும், வீரர்களும் கூறுவதனை கேட்ட மன்னருக்கு மிகுந்த சந்தோஷம். இந்த சந்தோஷத்துடனே போருக்குச் சென்றவர்கள், எதிரி நாட்டுப் படைகளோடு போரிட்டு அதில் வெற்றி பெற்றதோடு வெற்றிவாகையும் சூடினர். இவ்வாறு வெற்றி பெற்றதனால் மிகுந்த உற்சாகத்திலும், கொண்டாட்டத்திலும் வீரர்களும், தளபதியும் இருந்தனர். பின்னர் மன்னரை நோக்கி வந்த தளபதியார் மன்னரிடம் “நாம் வெல்வது விதியில் எழுதப்பட்ட ஒன்று. இதனை யாராலும் மாற்ற முடியாது” என்று மார்தட்டி பேசினார்.
இதனைக் கேட்ட மன்னர் தளபதியாரைப் பார்த்து ஒரு கேலிச் சிரிப்பு ஒன்றை சிரித்துவிட்டு, துறவி தந்ததாக கூறிய நாணயத்தினை அவரிடம் கொடுத்தார். இவ்வாறு மன்னர் தந்த அந்த நாணயத்தினை பார்த்த தளபதிக்கு ஒரே அதிர்ச்சி. ஏனெனில் அந்த நாணயத்தின் இரண்டு பக்கங்களிலும் தலையே காணப்பட்டது. இவ்வாறு நாணயத்தின் இரு பக்கங்களும் தலையாக காணப்பட்டதனை பார்த்த தளபதிக்கு தான் ஆரம்பத்தில் இந்தப் போரில் தோற்று விடுவோம் என்று சந்தேகப்பட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்து வெட்கி தலை குனிந்தார்.
Finally
இந்தக் கதை மூலம் உங்களுக்கு ஒரு விடயம் தெளிவாகி இருக்கும். நாம் எந்த ஒரு விடயத்தை செய்கின்ற போதிலும் அதில் தன்னம்பிக்கையும், நாம் அதில் வெற்றி பெறுவோம் என்ற எண்ணமும் நமக்குள் இருக்க வேண்டும். அப்போது தான் அந்த செயலில் நம்மால் வெற்றி பெற முடியும். நாம் செய்கின்ற அந்த செயல் பார்ப்பதற்கு கடினமாகவும், செய்வதற்கு இயலாத காரியமாகவும் காணப்படுமிடத்து அதனை பார்த்து பயப்படுவதோ அல்லது தன்னம்பிக்கை இழப்பதோ ஆரோக்கியமான விடயம் அன்று.
அது எவ்வளவு கடினமான ஒன்றாக இருந்தாலும் முதலில் அதை நம்மால் செய்ய முடியுமா என்று பார்ப்பதை விட்டுவிட்டு அதனை செய்து பார்க்க வேண்டும். நம்மால் முடிந்தளவு முயற்சியினை செலுத்த வேண்டும். அதிலும் தன்னம்பிக்கையை இழக்காமல் அதனை செய்ய வேண்டும். இந்தக் கதையின் மூலமும் அதுதான் உங்களுக்கு கூறப்பட்டுள்ளது.
மன்னர் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை கொண்டு இருந்தாலுமே எதிரி நாட்டுப் படைகளின் படை பலத்தையும், வீரத்தையும் பார்த்து படைத் தளபதியும், படைவீரர்களும் பயந்தனர். தன்னம்பிக்கை இழந்தனர். ஆனால் மன்னரோ சாதுரியமாக அவர்களின் மனதை மாற்றி அவர்களிடம் தன்னம்பிக்கையடையச் செய்து அதன் மூலம் போரில் வெற்றி அடையச் செய்தார். தன்னம்பிக்கை என்பது இக்கதையின் மட்டுமல்ல உங்கள் வாழ்க்கையிலும் வெற்றியைக் கொண்டுவரும்.
-END-