உங்களிடம் இருக்கும் திறமையானது உலகம் அறியாத ஒன்று. உங்கள் திறமையானது, நீங்கள் எதை இழந்தாலும் நீங்கள் இழந்ததை எல்லாம் உங்களுக்கு மீட்டுத்தரக் கூடியது. நீங்கள் உங்கள் திறமையில் நம்பிக்கை வையுங்கள். உங்கள் திறமையை இந்த உலகத்திற்கு எடுத்துக் காட்டுங்கள். அப்போதுதான் உங்களால் இந்த உலகில் வெற்றியாளனாக வர முடியும்.
அவ்வாறு இல்லாமல் நீங்கள் உங்களிடம் இருக்கின்ற திறமையை மறைத்து வைப்பதன் மூலம் நீங்கள் உங்களுக்கான சந்தர்ப்பங்களை இழக்கிறீர்கள். அதனால் உங்களின் திறமை இவ்வுலகுக்கு தெரியாமல் உங்களை ஒரு கையாலாகாத ஒருவராக இந்த உலகம் நோக்குவதற்கு நீங்களே வழிவகை செய்கின்றீர்கள்.
Have I Any Talent?
உண்மையிலேயே இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் திறமை என்பது இயற்கையாகவே இருக்கின்ற ஒரு விடயமாகும். எவருக்கும் திறமை இல்லாமல் இல்லை. உங்களுக்குள் அது மறைந்து இருக்கின்றது என்ற உண்மையை நீங்கள் ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். அவ்வாறு மறைந்து இருக்கின்ற உங்கள் திறமைகளை நீங்கள் வெளிக்கொண்டு வர வேண்டும். இவ்வாறு உங்கள் திறமைகள் எது என்று நீங்கள் அறிந்து அதனை தெரியப்படுத்துகின்ற போது தான் உங்களை ஒரு திறமைசாலியாக இந்த உலகம் அங்கீகரிக்கும்.
இவ்வாறு மறைந்து இருக்கின்ற உங்கள் திறமைகள் தவிர்க்கமுடியாத நிர்பந்த சூழ்நிலைகள் மூலம் வெளிவருகின்றன. இதனாலேயே நிர்ப்பந்தங்கள் உங்களுடைய திறமைகளை வெளிக்கொணரும் மிகச்சிறந்த சாதனங்களாக கருதப்படுகின்றது. உங்களுக்குள் இருக்கின்ற திறமைகளை உங்களால் அறிந்துகொள்ள முடியும். ஆனால் பலர் திறமைகளை உலகுக்குத் தெரியபடுத்துவதில்லை.
இந்தப் பதிவினை படித்து கொண்டு இருக்கின்ற யாராயினும், எனக்கு என்னுடைய திறமை என்னவென்பதை அறிய முடியவில்லை என்று கூறினால் நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று அர்த்தமாகும். ஏனெனில் ஒவ்வொரு மனிதருக்கும் திறமை என்பது உண்டு. ஆனால் அதை பலர் கண்டுகொள்வதில்லை. இவ்வாறு கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதால் தான் பலருக்கு தன்னுடைய திறமை என்ன என்பது தெரியாமல் போகின்றது.
எனவே உங்களுடைய பொடுபோக்கில் இருந்து விடுபட்டு உங்கள் திறமையினை அறிந்து அதனை வளர்த்துக் கொள்வதற்காக முயற்சி செய்யுங்கள். இவ்வாறு உங்கள் திறமைகள் பற்றி நீங்கள் அறிந்திருந்தும் நீங்கள் அதனை மற்றவரிடம் வெளிப்படுத்தாமல் இருப்பீர்கள் ஆயின், நீங்கள் யார் என்பதை நீங்களே மறைக்கின்றீர்கள். அதே சமயம், நீங்கள் யார் என்பதை மற்றவர்கள் அறியாமல் போவதற்கும், அவர்கள் உங்களுக்கான சந்தர்ப்பங்களை வழங்காமல் போவதற்கும் நீங்களே வழிவகை செய்கின்றீர்கள்.
உங்கள் திறமையினை வெளிப்படுத்துங்கள். உங்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்க உலகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. நீங்கள் வெளிப்படுத்தத் தவறும் போது உலகம் உங்களுக்கான சந்தர்ப்பங்களை வழங்க தவறுவதுடன், உங்களுக்கான அதே இடத்தில் வேறு ஒருவர் வருகின்றார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் தவற விடுவதனால் அவை உங்கள் வளர்ச்சியை மிக வெகுவாக குறைத்துவிடும். ஒரு முறை அப்துல் கலாம் அவர்கள் சந்தர்ப்பங்களைப் பற்றி கூறுகின்ற பொழுது, “சந்தர்ப்பங்கள் வரும் வரையில் காத்திருக்காதீர்கள். அவற்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்” என அவர் கூறினார்.
Difference Between Talent and Skill
நம்மில் பலர் தன் திறமையை வெளிப்படுத்தி அதன் மூலம் தனது வெற்றியினை இவ்வுலகுக்கு பரிசளிக்க தவருவதற்கான காரணம், திறமையும் ஆற்றலும் ஒன்று என கருதுவதாகும். இவ்வாறு திறமையையும் ஆற்றலையும் ஒன்றோடு ஒன்று கலந்து கொள்வதன் மூலம் அவர்கள் தன் திறமையை உணராது அதனை இவ்வுலகிற்கு வெளிக்காட்ட தவறுகின்றனர்.
இங்கு உங்களுக்கு ஒரு கேள்வி இருக்கலாம். ஏன் சம்பந்தமில்லாமல் திறமையையும் ஆற்றலையும் ஒன்றுபடுத்தி பார்ப்பதனால் தோல்வி ஏற்படுகின்றது என்று கூறுகின்றீர்கள் என்கின்ற கேள்வி எழலாம். இங்கு நாம் கூற வருகின்ற விடயம் என்னவென்றால், பலர் தன் திறமையை வெளிப்படுத்தாமல். தன் திறமை இதுதான் என்று நினைத்து தனது ஆற்றலை வெளிப்படுத்துகின்றனர்.
அதனால்தான் இன்று பலரது திறமைகள் இவ்வுலகுக்கு தெரியாமல் மறைந்து விடுகின்றது. உண்மையிலேயே திறமை என்பது ஆற்றல் என்பதில் இருந்து வேறுபட்டதாகும். எம்மில் பலர் திறமையும் ஆற்றலும் ஒன்று என்பதாகவே கருதுகின்றனர். மொழி அடிப்படையில் இவை இரண்டும் ஒத்தகருத்துச் சொற்களாக இருப்பினும், அடிப்படையில் அவ்விரண்டும் வேறுபட்ட சொற்களாகும்.
ஒரு விடயத்தை அறிவுபூர்வமாக பேசும்போது அதனை ஆற்றல் (SKILL) என்று பயன்படுத்துகின்றோம். அதேபோல் சிலரது திறமையை வியந்து பேசுகின்றபோது அதனை அவரது திறமை (TALENT) என வியப்போடு குறிப்பிடுகின்றோம். திறமை என்பது மனிதனுக்கு இயல்பாக கிடைப்பது எனவும் ஆற்றல் என்பது கல்வி மற்றும் பயிற்சியின் மூலம் வளர்த்துக் கொள்வது எனவும் வேறு படுத்தப்படுகின்றது.
இதுதான் திறமைக்கும் ஆற்றலுக்கும் உள்ள வேறுபாடாகும். இத்தகைய வேறுபாடு தெரியாத காரணத்தினால் தான் தன்னிடம் உள்ள ஆற்றலை திறமையாக நினைத்து அதனை வெளிக்கொணரகின்றனர். ஆனால் தன்னிடம் உள்ள உண்மையான திறமையை பலர் உணர்வதே இல்லை.
திறமை என்பது இயற்கையாக ஒருவனிடம் தோன்றுவதாகவும், நபருக்கு நபர் வேறுபடுவதாகவும் காணப்படுகின்றது. ஆனால் ஆற்றல் என்பது எல்லோராலும் பெறக்கூடிய ஒரு விடயமாகும். கல்வி மற்றும் அனுபவங்கள் என்பவற்றின் மூலம் ஆற்றலினை வளர்த்துக்கொள்ள முடியும். எனவேதான் நீங்கள் திறமைக்கும், ஆற்றலுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து வைத்திருப்பது மிக மிக அத்தியாவசியமானதாகும். இந்த புரிதல் தான் உங்களை வெற்றியாளராக மாற்றும்.
Importance of Talent
உங்களை வெற்றியாளன் ஆக்குவது உங்கள் திறமைகள்தான் தவிர, உங்கள் ஆற்றல் கிடையாது. உங்கள் ஆற்றல்கள் உங்கள் திறமையை மேம்படுத்துகின்ற ஒரு வழிமுறையே தவிர அது உங்களை நிரந்தர வெற்றியின் பக்கம் கொண்டு செல்லாது. திறமைகள் தான் ஒருவனை நிரந்தர வெற்றியின் பக்கம் அழைத்துச் செல்லும்.
இவ்வுலகில் வெற்றிபெற்ற அனைவருமே தன் திறமைகளை கொண்டு வெற்றி அடைந்தவர்கள் தான். அதன் பின்னர் தன் வெற்றியை தக்கவைத்துக் கொள்வதற்காக தேவையான ஆற்றல்களை வளர்த்துக் கொண்டு, தன்னிடம் இருக்கின்ற திறமையினை இன்னும் மேம்படுத்துவதற்காக முயற்சி செய்கின்றனர்.
உங்களது திறமைகளை நீங்கள் வெளிக்கொணர வேண்டும். அப்போதுதான் நீங்கள் அறியாத உங்களிடம் இருக்கின்ற மற்றைய திறமைகளை வெளிக்கொணருகின்ற ஓர் உன்னதமான ஆசானை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.இயல்பாக கிடைக்கின்ற திறன் திறமை (TALENT) எனப்படும். கற்றல் மற்றும் பயிற்சியின் மூலம் வளர்த்துக் கொள்கின்ற திறன் ஆற்றல் (SKILLS) எனப்படும். திறமைக்கும் ஆற்றலுக்கும் உள்ள இந்த வேறுபாட்டை நாம் அறிந்திருக்கும் போது தான் ஆற்றல் விருத்தியில் கவனம் செலுத்தும் நாம் எமது திறமையை வெளிப்படுத்தவும் தவற மாட்டோம்.
இல்லாவிட்டால் ஆற்றல்களை மாத்திரம் வளர்த்துக்கொண்டு திறமைகளை தவறவிட்டு விடுவோம். பாடுவது திறமை என்றால், இசை வாசிப்பது ஆற்றல் ஆகும். ஏனெனில் குரல்வளம் இயற்கையிலேயே ஒருவருக்கு கிடைக்கப் பெறுகின்ற ஒன்று. ஆனால், இசை வாசிக்கும் ஆற்றல் கற்றுக்கொண்டு பயிற்சி செய்வதன் மூலமே வளர்த்துக் கொள்ள முடியும். இங்கு நான் கூற வருகின்ற விடயம் உங்களுக்கு தெளிவாக புரிந்தாலே தவிர, திறமைக்கும் ஆற்றலுக்கும் உள்ள வித்தியாசத்தை உங்களால் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும்.
Finally
எனவேதான் உங்களுக்குள் ஒளிந்திருக்கும் உங்கள் திறமைகளை நீங்கள் உணர்ந்து அதனை இவ்வுலகிற்கு தெரியப்படுத்துவதன் மூலம் நிச்சயமாக நீங்கள் மிகச் சிறந்த வெற்றியாளராக வர முடியும். அவ்வாறு இல்லாது நீங்கள் பெற்றிருக்கின்ற ஆற்றல்களை மட்டுமே நீங்கள் வெளிப்படுத்த முயன்றால் அதன்மூலம் அடைகின்ற வெற்றியானது மட்டுப்படுத்தப்படுகிறது.
எனவேதான் உங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து உங்கள் திறமைகளை இவ்வுலகிற்கு வெளிப்படுத்துங்கள். அவ்வாறு நீங்கள் வெளிப்படுத்துகின்ற போது உங்களுக்கான வாய்ப்புகள் அதிகமாக கொட்டிக் கிடக்கும். அவ்வாறான வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி உங்கள் வாழ்வில் வெற்றி பெற முயற்சி செய்யுங்கள்.
-END-