ஓர் கிராமம் ஒன்றில் சிறுவன் ஒருவன் வீடு வீடாகச் சென்று பொருட்களை விற்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அப்போது திடீரென்று ஒருநாள் அவனுக்கு கடுமையாக பசி எடுத்து விட்டது. சுற்றும் முற்றும் பார்க்கிறான். அவனுக்கு தன் பசியை போக்கி கொள்வதற்கான எந்த ஒரு வழியும் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி யாருடைய வீட்டிலாவது சென்று உண்பதற்கு ஏதாவது இருக்குமா? என்று கேட்கலாம் என்று முடிவு செய்கிறான்.
அவ்வாறு ஒரு வீட்டருகே சென்று அந்த வீட்டின் கதவைத் தட்டுகின்றான். சிறிது நேரத்தில் அந்தக் கதவை திறந்தவாறு ஒரு பெண்மணி வருகிறாள். அவ்வாறே கதவை திறந்து வந்த பெண்மணி வெளியில் சிறுவன் ஒருவன் இருப்பதை பார்த்து அவனிடம் என்ன வேண்டும் என்று கேட்கிறாள். அவ்வாறு கேட்டதும், அந்தச் சிறுவன் எனக்கு பசிக்கின்றது ஏதாவது தர முடியுமா? என்று கேட்க நினைக்கின்றான். ஆனாலும் அவனது வெட்கம் அவனை தடுக்கின்றது. ஆனாலும் வேறுவழியின்றி பசியின் கொடுமை காரணமாக, “குடிப்பதற்கு தண்ணீர் தர முடியுமா?” என்று தடுமாறியபடியே கேட்கின்றான்.
இவ்வாறு சிறுவன் கேட்டதை பார்த்த அப்பெண்மணி, அவன் மிகுந்த பசியுடன் இருக்கின்றான் என்பதை உணர்ந்து கொள்கிறார். இதனால் வீட்டிற்குள் சென்று குடிப்பதற்காக இருந்த பாலினை, ஒரு டம்ளரில் ஊற்றி வெளியே எடுத்து வந்து அவனிடம் கொடுக்கிறாள். அப்பாலினை வாங்கிய சிறுவன் அதனை முழுமையாக குடித்துவிட்டு, அப் பெண்மணியிடம் நான் உங்களுக்கு எவ்வளவு பணமாக தர வேண்டும் என கேட்கிறான்.
இதைக் கேட்ட அப்பெண்மணி அச்சிறுவனிடம், “அன்பின் காரணமாக செய்யப்படுகின்ற எந்தவொரு உதவிக்கும் பணம் தேவையில்லை” என்று கூறியபடியே அச்சிறுவனை பார்த்து சிரித்தார். இத்தனை கேட்ட அச்சிறுவனுக்கு மிகுந்த சந்தோசம். மனதார நன்றி கூறியவாறே அச்சிறுவன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். அப்பெண்மணியும் சிரித்த முகத்துடன் அவனை வலி அனுப்பி வைத்தாள்.
இவ்வாறே சில வருடங்கள் உருண்டு ஓடின. வீடு வீடாக பொருட்களை விற்று வந்த அச்சிறுவனோ நன்றாக படித்து மிகப்பெரிய டாக்டராக ஆகினான். அதன் பின்னர் பல நோயாளிகளுக்கு மருத்துவம் செய்து அவர்களுடைய உயிரை காப்பாற்றி மிகப்பெரும் சேவையினை செய்து வந்தான்.
இந்நிலையில்தான் வைத்தியசாலையில் அவன் சேவையில் இருக்கின்றபோது மிகத் தீவிரமான நோயினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கின்ற பெண்மணி ஒருவரை பார்ப்பதற்காக செல்கிறார். அவ்வாறு பார்க்கச் சென்றவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஆமாம் அங்கு நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்காக இருந்தது, எந்தவித எதிர்பார்ப்புமின்றி தன்னுடைய சிறுவயதில் பசியால் தவித்த போது தனக்கு உதவி செய்த அப்பெண்மணி ஆவார்.
இதனால் முழு ஈடுபாட்டோடு அப்பெண்மணிக்கான சகல வித சிகிச்சையும் தானே முன்வந்து மிகவும் அக்கறையோடு செய்து கொடுத்தார். அது மட்டுமின்றி தன் தாயைப்போல அவரை அரவணைத்து கவனித்துக் கொண்டார். இந்நிலையில் சிகிச்சைகள் அனைத்தும் முடிந்ததன் பின்னர் வைத்தியசாலை நிர்வாகம் பெண்மணியிடம் நீண்டதொரு விலைப்பட்டியலை அவரிடம் அனுப்பியது. இந்த விலைப்பட்டியலை பார்த்த அப்பெண்மணிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் இருந்தார். ஏனெனில் அவரிடம் அந்தளவுக்கு பணம் இருக்கவில்லை.
நிலைமை இவ்வாறிருக்க சிகிச்சைக்கு பின் சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு அப்பெண்மணியின் அறைக்கு வந்த டாக்டர் அப்பெண்மணியிடம், “நான் சிறுவனாக இருக்கும் போது பசியின் காரணமாக உங்களிடம் உதவி கேட்டு வந்தேன். நீங்கள் அதனை மறுக்காமல் எந்தவித எதிர்பார்ப்புமின்றி உங்கள் வீட்டில் இருந்த பாலினை தந்து என் பசியை போக்கினீர்கள். அத்தோடு என்னை அன்பாகவும், மலர்ந்த முகத்துடனும் வழியனுப்பி வைத்தீர்கள்.
அன்று நீங்கள் செய்த உதவிக்கு இன்று நான் செய்யப்போகின்ற கைமாறுதான் இது. இன்று நான் உங்களுக்கு செய்த இந்த சிகிச்சையானது என்னால் மனமுவந்து செய்யப்பட்ட ஒரு சிகிச்சையாகும். அத்தோடு இந்த சிகிச்சைக்கான முழு கட்டணத்தையும் உங்களுக்கு தள்ளுபடி செய்கிறேன். அதாவது இந்த சிகிச்சைக்காக நீங்கள் எந்த ஒரு பணத்தையும் வைத்தியசாலை நிர்வாகத்திற்கோ அல்லது எனக்கோ செலுத்த வேண்டிய அவசியம் இல்லை”. என்று மலர்ந்த முகத்துடன் கூறினார்.
இவ்வாறு அவர் கூறியதைக் கேட்ட அப்பெண்மணி என்ன சொல்லுவதென்றே தெரியாமல் திகைத்து போயிருந்தார். என்றோ ஒருநாள் தான் செய்த சிறு உதவி இன்று எனக்கு இந்தளவுக்கு மிகப்பெரிய உதவி செய்யும் என்று அவர் சற்றும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அந்த டாக்டரை பார்த்து கண்ணீர் மல்க நன்றி கூறியவாறு வைத்தியசாலையில் இருந்து விடைபெற்றார்.
FINALLY
இங்கு குறிப்பிட்டுள்ள இந்த கதை உங்களுக்கு மிகவும் உத்வேகம் அளிக்க கூடியதாகவும், அதே சமயத்தில் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று நினைக்கின்றோம். நிச்சயமாக இந்த கதை உங்களுக்கு ஒரு விடயத்தை நினைவூட்டி இருக்கும். நாம் செய்கின்ற ஏந்தவொரு உதவியாக இருந்தாலும் அது வீண் போவதில்லை. நிச்சயமாக அது நாம் எதிர்ப்பார்க்காத நேரத்தில் நமக்கு இரட்டிப்பாக கிடைக்கும்.
எனவே நீங்கள் உங்கள் வாழ்வில் செய்கின்ற எந்தவொரு நல்ல விடயத்தினையும் அற்பமாக நினைத்து தள்ளிப் போடாதீர்கள். நிச்சயமாக நீங்கள் விதைக்கின்ற ஒவ்வொரு நல்ல விடயமும் நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அதிலும் குறிப்பாக இந்த இடத்தில் எனக்கு யாராவது உதவி செய்ய மாட்டார்களா என்று நினைக்கின்ற இக்கட்டான சூழ்நிலைகளில் மிகப் பெரும் உதவியாக வந்து நிற்கும்.
அதே சமயத்தில் நீங்கள் விதைப்பது தீய விடயமாக இருந்தால் நிச்சயமாக அது உங்களுக்கு இரண்டு மடங்காக வந்தே தீரும். எனவே முடிந்தவரை நல்ல விடயங்களையும், பிறருக்கு உதவி செய்யும் விடயங்களையும் செய்து கொள்ளுங்கள். இன்னுமொரு சிறந்த பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுகின்றோம்.