Self Confidence - How Self Confidence will change your life in Tamil

இவ்வுலகில் உங்களை யார் கைவிட்டாலும் உங்களை கைவிடாத ஒன்றையொன்று இந்த உலகில் இருக்கின்றது என்றால் அது உங்களுடைய நம்பிக்கை தான். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ள விட்டால் இந்த உலகம் உங்களை நம்பாது. உங்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாது. எவன் ஒருவன் தன்னை முழுமையாக நம்பி, தன்னுடைய திறமையை நம்பி களத்தில் இறங்குகின்றானோ அவனால் நிச்சயமாக வாழ்வில் வெற்றி பெற முடியும். தன்னம்பிக்கை உள்ள எந்த ஒரு மனிதனையும் எத்தகைய பெரிய தோல்விகளாலும் தோற்கடிக்க முடியாது.

Self Confidence - How Self Confidence will change your life in Tamil

நம்பிக்கை என்பது சாதனையாளர்களின் தவிர்க்க முடியாத இயல்பாக இருக்கின்றது. என்னுடைய இலக்கினை என்னைவிடச் சிறப்பாக இவ்வுலகில் யாராலும் செய்து காட்ட முடியாது என்கின்ற கர்வம் தான் தன்னம்பிக்கையின் மிகப்பெரிய சக்தியாகும். நிச்சயமாக உன்னால் எதுவும் முடியும். உன்னால் முடியாதது எதுவுமே இவ்வுலகில் இல்லை. மனிதன் என்பவன் எதையும் சாதிக்க பிறந்தவன். அதிலும் நீ! சாதிப்பதற்காக பிறந்தவன். நிச்சயமாக உன்னால் முடியும்! உன்னை நம்பு!.. உன்னை நம்பு!..


வாழ்க்கையானது ஒவ்வொருவருக்கும் வாய்ப்புகளை தரக்கூடியது. வாய்ப்புகளை சரியாக, சரியான நேரத்தில் பயன்படுத்திக்கொள். வாய்ப்புகளை தவறவிட்டு விட்டு எனக்கு வந்த வாய்ப்புகளும் வரவில்லை, அப்படி வந்த வாய்ப்புக்கள் யாவும் மிகவும் குறுகியவை அல்லது எனக்கு வாய்ப்புக்களே வரவில்லை என்று வீண்பேச்சு சொல்வதை விட்டுவிட்டு உன் மீது நம்பிக்கை கொண்டு உன்னுடைய இலக்கை நோக்கி ஓடு.


அவ்வாறு நீ உன்னுடைய இலக்கை நோக்கி ஓடவில்லை என்றால் உன்னுடைய இலக்கினையும், இடத்தினையும் அடைந்து கொள்வதற்கு அதே பாதையில் வேறொருவர் ஓடிக் கொண்டிருப்பார். அவருக்கு முன் நீ உன்னுடைய இலக்கினை அடைய வேண்டுமென்றால் தன்னம்பிக்கை என்ற ஆயுதத்தை உன் கூட அழைத்துச் செல். நிச்சயமாக அது வாழ்க்கையில் நீ வெற்றியடைவதற்கு மிகுந்த உதவியாக இருக்கும். 


ஆனால் இன்று பலர் தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம் என்கின்ற பெயரில் சில தவறான பழக்க வழக்கங்களை செய்து கொண்டு வருகின்றனர். இதனால் வெளிப்படையாக என்னதான் தான் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று கூறினாலும் கூட அடுத்தடுத்த முயற்சிகள் மிகப்பெரும் தோல்வியிலேயே போய் முடிகின்றது. எந்தளவுக்கு என்றால் அடுத்த எந்த முயற்சியும் எடுக்க முடியாத அளவுக்கு அவர்களுடைய முயற்சிகள் அனைத்தும் தோற்றுவிடுகின்றன. இதற்கு காரணம் தன்னம்பிக்கையை சரியாக புரிந்து கொள்ளாமை ஆகும். 


தன்னம்பிக்கை என்பது பிறர் சொல்லி வருவது அல்ல. அது உங்களுக்குள் தானாக எழுகின்ற, சூரியனைப் போன்றது. எத்தகைய சங்கடமான சூழ்நிலைகள் உங்களை சூழ்ந்து இருந்தாலும் உங்களுக்குள் இருக்கின்ற தன்னம்பிக்கை உங்களை எப்போதும் விருட்சமான சூரியன் ஆகவே உலகுக்குக் காட்டும். அடுக்கடுக்கான தோல்விகள் உங்களை நோக்கி வந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி உங்கள் முகத்தை பொன்சிரிப்பிலும், வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடனும் உங்கள் மனதை வைத்திருப்பது இந்த தன்னம்பிக்கை தான்.


தன்னம்பிக்கை என்பது இவ்வுலகில் எவ்வளவு பணம் கொடுத்தாலும், எங்குமே வாங்க முடியாத ஒன்றாகும்.  அத்தகைய தன்னம்பிக்கையை உங்களுக்குள் ஏற்பட வேண்டுமென்றால் தன்னம்பிக்கை ஏற்படுகின்ற செயற்பாடுகளில் நீங்கள் ஈடுபட வேண்டும். நேர்மறையாக சிந்திக்க கூடிய சூழலில் நீங்கள் வாழவேண்டும். நேர்மறையாக சிந்திக்கத் தெரியாத, எதிர்மறையாக சிந்திக்கின்ற மக்களோடு சேர்ந்திருப்பதை விட்டும் விலகி இருக்க வேண்டும். அதாவது அவர்களுடனான பழக்கத்தினை குறைத்து கொள்ள வேண்டும். 


எதிர்மறையாக சிந்திக்கக் கூடிய நபர்களை விட்டு நீங்கள் விலகி இருக்க வேண்டும். நேர்மறை எண்ணங்கள் உங்களை அதிகம் சூழ்ந்து கொண்டிருக்கும் போது, நிச்சயமாக உங்களுக்குள் இருக்கின்ற அந்த Vibration நேர்மறையாக இருக்கும் (Positive Vibration). இதன் மூலம் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரித்து உங்களது இலக்கினை அடைந்து கொள்வதற்கு இயலுமாக இருக்கும். அதேபோல் தன்னம்பிக்கை என்பது நிச்சயமாக உங்களை வெற்றியாளராக மாற்றும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 


ஆனால் இன்று பலர் தன்னம்பிக்கையை வர வழைத்துக் கொள்வதற்காக எந்த முயற்சியையும் எடுத்துக் கொள்வதில்லை தோல்விகள் தொடர்ச்சியாக வருகின்ற போது அவர்கள் மன அழுத்தத்தினால் மேலும் மேலும் தோல்விக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அந்த நேரங்களில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கான எந்தவொரு முயற்சியிலும் அவர்கள் இறங்குவதில்லை. மாறாக தாழ்வு மனப்பான்மையையே தனக்குள் அதிகரித்துக் கொள்கின்றனர். உங்களது தன்னம்பிக்கையினை அதிகரித்துக் கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள். 


தன்னம்பிக்கை தொடர் வெற்றியின் மூலம் ஏற்படுவதில்லை. தொடர்ச்சியான தோல்வியின் மூலம் ஏற்படுவதாகும். எந்தளவுக்கு உங்கள் வாழ்வில் தோல்விகளை சந்திக்கிண்றீர்களோ அந்தளவுக்கு உங்களது தன்னம்பிக்கையும் உங்களுக்கு அதிகரிக்கும். அதிகளவான தோல்விகள் தான் நான் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற ஒரு வெறியினையும், ஊக்கத்தினையும் உங்களுக்கு கொடுக்கும். நிச்சயமாக தோல்விதான் உங்களை ஒரு நிரந்தர வெற்றியாளராக செதுக்கும்.


என் வாழ்வில் எந்த தோல்வியையும் நான் இதுவரை பார்த்ததில்லை. இனி மேலும் பார்க்க மாட்டேன். ஆனால் நான் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன் என நீங்கள் கூறினால் அது தன்னம்பிக்கை கிடையாது. தன்னம்பிக்கை என்பது எத்தனை தோல்விகள் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி நான் வெற்றி பெறுவேன் என்று நீங்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்தீர்களே அதுதான் தன்னம்பிக்கையாகும்.


உங்களுக்கு பெற்றோர்களும், குடும்பத்தாரும் மற்றும் நண்பர்களும் உதவி செய்து கொண்டிருக்கையில் நீங்கள் சொகுசாகவும், இலகுவாகவும் உணர்ந்தால் அதன் பெயர் தன்னம்பிக்கை கிடையாது. தன்னம்பிக்கை என்பது உங்களுக்கு உதவுவதற்கு யாருமே இல்லாத போது நீங்கள் தனியாளாக நின்று பல்வேறு பிரச்சினைகளை சுமந்தவாறு உங்கள் இலக்கினை அடைந்து கொள்கிறீர்களே அதன் பெயர்தான் தன்னம்பிக்கை ஆகும். 


நீங்கள் நினைக்கின்ற காரியம் எல்லாம் நீங்கள் நினைத்தபடியே சரிவர நடந்து கொண்டிருக்கையில், நான் நம்பிக்கையுடன் இருக்கின்றேன் என்பது தன்னம்பிக்கை கிடையாது. மாறாக நீங்கள் நினைக்காத மிக மோசமான தோல்விகளையும், விளைவுகளையும் நீங்கள் சந்திக்கின்ற போது அது உங்களுக்கு விருப்பமில்லாததாக இருந்தாலுமே அதையெல்லாம் சரி செய்து நீங்கள் உங்கள் இலக்கினை அடைகின்றீர்களே அதன் பெயர்தான் தன்னம்பிக்கை ஆகும்.


நீங்கள் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு முயற்சியும் நீங்கள் திட்டமிட்டபடி வெற்றி அடைந்தால், அப்போது நான் வெற்றி அடைந்து விட்டேன். எனது நம்பிக்கை பலித்து விட்டது என்பது உங்கள் தன்னம்பிக்கை கிடையாது. உங்கள் தன்னம்பிக்கை என்பது நீங்கள் திட்டமிட்டபடி எந்தவொரு வெற்றியையும் அடையாது அதற்கு பதிலாக மிகப் பெரிய தோல்வியை சந்திகின்றீர்கள். அப்போதும் மனம் தளராது உங்கள் முயற்சியை தொடர்ந்து என்னுடைய இலக்கை அடைந்தே தீருவேன் என்று ஒற்றைக்காலில் நின்று இறுதியில் அதனை அடைகின்றீர்களே அதுதான் தன்னம்பிக்கை ஆகும்.


இவ்வாறு தன்னம்பிக்கைக்கான மிகச்சிறந்த உதாரணங்களைக் கூறிக் கொண்டே போகலாம். ஆனால் நிச்சயமாக இந்த உதாரணங்கள் உங்களுக்குள் தன்னம்பிக்கை ஏற்படுத்துமா? என்றால் நிச்சயமாக எங்களுடைய பதில் இல்லை என்றுதான் கூற வேண்டும். இது உங்களுக்கு படிப்பினையாக இருக்குமே தவிர தன்னம்பிக்கை என்பது உங்களுக்குள் ஏற்பட வேண்டும் என்றால் உங்களுடைய எண்ணமும், செயற்பாடும்தான் அதனை தீர்மானிக்கும்.


நீங்கள் எத்தகைய சூழலில் இருக்கின்றீர்கள். எதன் மீது அதிக ஆர்வம் காட்டுகிறீர்கள். உங்கள் மனநிலை எப்படி பட்டது. நீங்கள் நேர்மறையாக சிந்திக்க கூடியவரா? இல்லை, எதிர்மறையான சிந்தனைகளை அதிகம் வைத்திருப்பவரா? என்பதைப் பொருத்துதான் உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்க முடியும். நிச்சயமாக வாழ்வில் ஒருமுறையேனும் வெற்றியை சுவைக்க வேண்டும் என்று ஆவலோடு இருக்கின்ற எந்த ஒரு முயற்சியாளனும் தன் தன்னம்பிக்கையை விட்டுக்கொடுக்க ஒருபோதும் முயல மாட்டான்.


தன்னம்பிக்கை (Self Confidence) என்பது வெற்றியாளர்களுக்கு மட்டுமே உரித்தான மிகப் பெரிய வரமாகும். நீங்கள் எந்த ஒரு வெற்றியாளரையும் வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை புரட்டிப் பார்த்தால் அவர்கள் அனைவரும் பல்வேறான தோல்விகளை அடைந்த பின்னரும், தான் வெற்றியடையும் வரை தன்னுடைய முயற்சியினை தொடரப் போகிறேன் என்று சொன்னவர்கள். அவர்கள் சொன்னது போலவே செய்தும் காட்டி இருக்கின்றார்கள். உதாரணமாக தாமஸ் அல்வா எடிசன். இன்று உலகமே மின்விளக்குகளால் மிளிர்ந்து கொண்டிருப்பதற்கு அவருடைய அந்த தன்னம்பிக்கையும், விடா முயற்சியுமே காரணம்.


அதேபோல் இன்று உள்ளவர்களில் எலான் மஸ்க்கை குறிப்பிடலாம். தன்னுடைய இலக்கும் தன்னுடைய எண்ண ஓட்டமும், இந்த கால மக்களுக்கு ஒன்றாத ஒன்றாக இருப்பினும் எப்படியாவது அந்த இலக்கை அடைந்தே தீருவேன் என்று ஒவ்வொரு முறை கேட்கும்போதும் சொல்கின்றார். அதேபோல் தான் சந்திக்கின்ற அனைத்து தோல்வியிலிருந்தும் பாடத்தை கற்று மீண்டும் அம்முயற்சியை புதுப்பித்துக் கொண்டு தன்னுடைய இலக்கை நோக்கி பயணிக்கின்றார். அதுதான் உண்மையான தன்னம்பிக்கை.


உங்களுடைய இலக்கை அடையும் வரை முயற்சி செய்வது தான் தன்னம்பிக்கை ஆகும். இடையில் வருகின்ற தோல்விகள், அவமானங்கள் போன்றவைகளை நீங்கள் கருத்தில் கொள்ளக்கூடாது. ஒரு பயணம் செய்கின்றபோது எவ்வாறு மேடு, பள்ளம் என ஏற்ற இறக்கங்கள் வருமோ அது போல, நம்முடைய இலக்கை நோக்கி நாம் பயணிக்கும் போதும் இத்தகைய ஏற்ற இறக்கங்கள் வருவது சகஜமான ஒன்றே. இவ்வாறு தோல்விகளும், அவமானங்களும், ஏமாற்றங்களும் உங்கள் முயற்சியை நீங்கள் முன்னெடுக்கின்ற போது வரவில்லை என்றால், நீங்கள் இப்போது செய்து கொண்டிருக்கின்ற முயற்சி வீணானதாகும். 


எனவே நீங்கள் அடைய நினைக்கின்ற முழுமையான இலக்கினை சுவைக்கும் வரை உங்கள் முயற்சியினை தொடர வேண்டும். உங்களால் உங்களுடைய இலக்கினை அடைய முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்குள் எழ வேண்டும். உங்களால் முடியும் என்ற நம்பிக்கையும் உங்கள் இலக்கிய முழுமையாக அடையும் வரை எந்தவித தடங்கல்கள் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி நீங்கள் உங்கள் முயற்சியை தொடர்ந்து அதில் வெற்றி பெறுகின்ற வெற்றி பெருவதற்கு பெயர்தான் தன்னம்பிக்கை ஆகும். 


இந்த பதிவின் மூலம் நீங்கள் தன்னம்பிக்கையின் முக்கியத்துவத்தினையும் (Important of Self Confidence), எது தன்னம்பிக்கை, எது தன்னம்பிக்கை இல்லை என்பதனையும், தன்னம்பிக்கை எவ்வாறு உங்கள் வாழ்வில் மாற்றத்தினை ஏற்படுத்தும் (How Self Confidence will change your life) என பல்வேறு விடயங்களை அறிந்து கொண்டிருப்பீர்கள். இந்த பதிவு உங்களை ஊக்கப்படுத்தி இருந்தால் உங்களுக்குப் பிடித்தமான இன்னொரு நபருடன் இந்தப் பதிவினை பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் ஒரு நல்ல பதிவில் உங்களை சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுகின்றோம்.

Post a Comment

Previous Post Next Post