ஒருவர் புத்திசாலியாக இருப்பதற்கான 10 அறிகுறிகள் என்ன?
ஒவ்வொரு நாளும் நாம் பல நபர்களை சந்திக்கின்றோம். பல நபர்களோடு நாம் தொடர்பில் இருக்கின்றோம். அவ்வாறு நீங்கள் சந்திக்கின்ற அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது உங்களிடம் நீங்கள் புத்திசாலியாக இருக்கின்றீர்கள், உங்களின் பழக்க வழக்கங்கள் அனைத்தும் ஒரு புத்திசாலியிடம் இருப்பதைப் போன்றே உள்ளது என்று உங்களை யாராவது பாராட்டி உள்ளார்களா?
ஆம்,எனில் அதற்காக முதலில் உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். உண்மையில் நம் எல்லோருக்குமே நான் புத்திசாலியாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதிலும் குறிப்பாக நம்மை பிறர் புத்திசாலி என்று பாராட்டும் அளவுக்கு நாம் இருக்க வேண்டுமென்ற ஆசை ஒவ்வொருவருக்கும் கட்டாயமாக இருந்திருக்கும். ஆனால் அது நம் எல்லோர் வாழ்விலும் நடப்பதில்லை. அதற்கு காரணம் நமது முட்டாள்தனமான சில செயற்பாடுகளும் பழக்க வழக்கங்களுமே ஆகும்.
இந்தப் பதிவில் நாம் ஒருவர் புத்திசாலியாக இருப்பதற்கான 10 அறிகுறிகளை பார்க்க இருக்கின்றோம். நிச்சயமாக இந்த அறிகுறிகளில் உங்களிடம் குறைந்தபட்சம் ஐந்து இருந்தாலே நீங்கள் புத்திசாலியாக இருப்பதற்கான தகைமையை வளர்த்து கொண்டுள்ளீர்கள் என்பதே அர்த்தமாகும். சரி வாருங்கள் அத்தகைய 10 அறிகுறிகளைப் பற்றி காண்போம்.
1. தன் பலம் மற்றும் பலவீனத்தை அறிதல்
உங்களுடைய பலம் எது? பலவீனம் எது? என்பதை உங்களால் அறிய முடியுமாக இருப்பின் நீங்கள் புத்திசாலியாக இருக்கின்றீர்கள் என்பது அர்த்தமாகும். ஏனெனில், புத்திசாலியாக இருப்பவர் முதலில் தன்னைப் பற்றி அறிந்தவராக காணப்படுவார்.
என்னுடைய பலவீனம் எது? நான் எதில் கெட்டித்தனமாக இருக்கின்றேன்? எந்த விடயங்களை என்னால் செய்ய முடியும்? நான் எந்த விடயத்தில் சிறப்புத் தேர்ச்சி உடையவனாக இருக்கிறேன்? போன்ற தன்னுடைய பலத்தினை அவர்கள் அறிந்து வைத்திருப்பர். அதேபோல் தன்னுடைய பலவீனம் எது? எந்த விடயம் என்னை என்னுடைய இலக்கிலிருந்து தூரம் ஆக்குகின்றது? எது என்னை அதிகமாக தோல்வியின் பக்கம் அழைத்துச் செல்கின்றது? போன்ற தன்னுடைய பலவீனங்களை பற்றியும் அறிந்து வைத்திருப்பர்.
இவ்வாறு தன்னுடைய பலம், பலவீனம் என்பவற்றினை அறிந்து வைத்திருக்கின்ற ஒருவராலேயே வெற்றியை நோக்கி பயணம் செய்ய முடியும். நிச்சயமாக ஒவ்வொரு புத்திசாலியினதும் மிகப் பிரதானமான அறிகுறி இதுவாகும். அதுமட்டுமன்றி பிறருடைய பலம், பலவீனம் எது என்பதனை பற்றியும் அவர்கள் அறிந்து வைத்திருப்பர். ஆனால் ஒருபோதும் அதனை வெளியில் சொல்ல மாட்டார்கள். தனக்கு எதுவும் தெரியாதது போலவே காட்டிக் கொள்வர்.
2. குறைவாக பேசுதல்
புத்திசாலிகள் அதிகம் பேசுபவர்களாக இருக்க மாட்டார்கள். தனக்குத் தேவையான இடத்திலேயே அன்றி, மற்ற இடங்களில் பெரும்பாலும் மௌனமாகவே இருப்பர். ஏனெனில் ஒருவர் அதிகம் பேசுகின்ற போது தன்னை மறந்து பல விடயங்களை பேசிவிடுவார். குறிப்பாக பிறரை பற்றி புறம் பேசுதல், பிறர் குறைகளை அம்பலப்படுத்துதல் போன்ற விடயங்களை தன்னை மறந்து ஈடுபடுவர்.
இதன் காரணமாகவே புத்திசாலிகளாக இருப்பவர்கள் அதிகம் பேசுவதில்லை விரும்ப மாட்டார்கள். இந்த பதிவினை வாசிக்கின்ற யாராவது அதிகம் பேசுவார்கள் ஆக இருப்பின் முடிந்த வரை தேவையற்ற இடங்களில் அதிகம் பேசுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் நிச்சயம் அது உங்களுக்கு சாதகமாகவே அன்றி சாதகமாக அமையாது.
3. தன் இலட்சியத்தை நோக்கி செயல்படுதல்
புத்திசாலிகள் தன் பொழுதுபோக்கு அம்சங்களை கூட தன் இலட்சியங்களுடன் தொடர்புபட்டதாகவே செய்வர். தான் செய்கின்ற பொழுது போக்கு அம்சங்கள் கூட தன்னுடைய இலக்கினை தொடர்புபடுத்தியதாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாகவும், ஆசையாகவும் இருக்கும். அப்போதுதான் அவர்களுடைய இலக்கினை முறையாக அடைந்து கொள்ள முடியும். அது மட்டுமன்றி அதில் நிலையாகவும் இருக்க முடியும் என்பதனை அறிந்து வைத்திருக்கின்றனர்.
எனவே உங்கள் பொழுதுபோக்கு அம்சங்களை கூட உங்கள் இலட்சியங்களுடன் தொடர்புடையதாகவே வைத்திருங்கள். வீணான உங்கள் இலட்சியத்திலிருந்து உங்களைத் திசை திருப்பக்கூடிய விடயங்களில் இருந்து முடிந்தவரை விலகி இருங்கள். இவ்வாறு உங்கள் பொழுதுபோக்கு அம்சங்களை உங்கள் இலட்சியங்களுடன் தொடர்புபடுத்துகின்ற போது காலப்போக்கில் உங்கள் இலட்சியங்களை மிக விரைவாக அடைந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
4. தோல்வியைக் கண்டு அஞ்சாதிருத்தல்
புத்திசாலிகள் தோல்வியைக் கண்டு துவண்டு போகாமல் தன்னுடைய அடுத்த வேலைக்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். அவர்கள் தன் வாழ்வில் அடைகின்ற ஒவ்வொரு தோல்வியையும் தன் வெற்றிக்கான ஒரு படியாகவே பார்க்கின்றனர்.
நாம் எந்த அளவுக்கு தோல்வியினை அதிகம் சந்திக்கின்றோமோ அந்த அளவுக்கு நமது வெற்றியானது பெரிதாக இருக்கும் என்பதில் அவர்கள் நம்பிக்கை கொள்கின்றனர். அதுமட்டுமன்றி பிறர் அடைகின்ற வெற்றியையும் அங்கீகரிப்பார்கள். அவர்கள் மீது அக்கறை உடையவர்களாக இருப்பார்கள்.
5. பிரச்சினைகளில் இருந்து விலகி இருத்தல்
புத்திசாலிகள் எப்போதுமே பிரச்சினைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஏனெனில் ஒவ்வொரு பிரச்சினையும் தேவையில்லாத மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக தன்னோடு தொடர்புபடாத அல்லது தனக்குத் தேவையில்லாத பிரச்சினைகளில் மூக்கை நுழைத்தல் போன்றவற்றை அவர்கள் ஒருபோதும் செய்ய விரும்புவதும் இல்லை, செய்வதும் இல்லை. அவ்வாறு அடுத்தவர்களின் பிரச்சினைகளில் அல்லது தேவையில்லாத பிரச்சினைகளில் மூக்கை நுழைத்தல் உங்களுக்கு பிடிக்காது என்றால் நீங்கள் புத்திசாலியாக இருக்கின்றீர்கள் என்பதே அர்த்தமாகும்.
6. வீணான செயற்பாடுகளிலிருந்து விலகி இருத்தல்
அதாவது அதிகளவு ஸ்மார்ட்போன் (Smart Phone) பாவனை, இன்டர்நெட் பாவனை, சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவழித்தல், நண்பர்களோடு அதிக நேரம் அரட்டை அடித்தல், தேவையில்லாத பயணங்களில் ஈடுபடுதல், நடிகர்-நடிகைகள், அரசியல்வாதிகளுக்காக தேவையில்லாமல் சண்டை போடுதல், திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களை (Web Series) அதிகளவு பார்வையிடுதல் போன்ற வீணான செயற்பாடுகளில் இருந்து விலகி இருப்பவர்களாகவே புத்திசாலிகள் காணப்படுவர்.
இவ்வாறான வீணான செயற்பாடுகளை புத்திசாலிகள் வெறுப்பவர்களாகவே காணப்படுகின்றனர். ஏனெனில் இவை அனைத்தும் எந்த விதத்திலும் அவர்களுக்கு நன்மையினை அளிக்கப் போவதில்லை. மாறாக எதிர் விளைவினையே அது ஏற்படுத்தும். எனவே இத்தகைய செயற்பாடுகளிலிருந்து முடிந்த வரை ஒதுங்கி இருப்பவர்களாக காணப்படுவர்.
7. தொலைநோக்கு பார்வை உடையவர்களாக இருத்தல்
புத்திசாலிகள் எந்த ஒரு விடயத்தையும் தொலைநோக்கு பார்வையுடன் செய்கின்றவர்களாக காணப்படுவர். அவர்கள் எந்தவொரு விடயத்தினை செய்கின்ற போதிலும் அதற்கான பதிலை மிக விரைவில் எதிர்பார்க்க மாட்டார்கள். ஏனெனில் மிக விரைவாக கிடைக்கின்ற எதுவும் நிலைத்து நிற்காது என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்.
அதனால்தான் எந்த ஒரு செயலை செய்கின்ற போதும் அதனை ஒரு தொலைநோக்கு பார்வையுடன் செய்கின்றனர். எந்தளவுக்கு என்றால் பூங்காவில் அமர்ந்து கொண்டிருக்கின்ற போதும் தன் அருகில் இருக்கின்ற ரோஜாப்பூவின் அழகினை ரசிக்காமல் தூரத்தில் இருக்கின்ற ஆலமரத்தில் எத்தனை விழுதுகள் இருக்கின்றன என்று ஆராய்பவர்களாக காணப்படுவர்.
8. தீய பழக்கங்கள் மற்றும் நடவடிக்கையில் இருந்து விலகியிருத்தல்
புத்திசாலிகள் எப்போதும் தீய பழக்கங்களிலிருந்து விலகி இருப்பவர்களாகவும் அவ்வாறான தீய பழக்க வழக்கங்கள் தன்னோடு ஒட்டிக்கொள்ளாமல் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் காணப்படுவர். அதிலும் குறிப்பாக மது அருந்துதல், புகைபிடித்தல், கஞ்சா மற்றும் இதர போதை வஸ்துக்களை பாவித்தல் மற்றும் அதற்கு அடிமையாதல் போன்றவற்றிலிருந்து மிகவும் ஜாக்கிரதையாக இருந்து கொள்வார்கள். அதேபோல் பெண்களுடனான தவறான பழக்க வழக்கங்களில் இருந்து விலகி இருப்பார்கள்.
அதேபோல் தவறான வழியில் வியாபாரம் செய்து அதன் விளைவாக வியாபார தந்திரங்கள் மற்றும் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள். தவறான வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவரே இவ்வாறான முறையற்ற வியாபாரத் தந்திரங்கள் மற்றும் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வார்கள். புத்திசாலிகள் முறையான வகையிலேயே வியாபாரங்களை மேற்கொள்வர்.
9. எதனையும் கூர்ந்து கவனித்தல்
புத்திசாலிகள் எந்தவொரு விடயத்தினையும் கூர்ந்து கவனிப்பவர்களாகவே இருப்பர். அவர்களிடம் நீங்கள் ஏதாவது முக்கியமான விடயத்தினை கூறினால், அப்போது அவர்கள் தன் புருவத்தை லேசாக நெரித்து, கண்களை சுருக்கி நீங்கள் சொல்வதை கூர்ந்து கவனிப்பவர்களாக இருப்பர்.
இது புத்திசாலிகள் இடம் காணப்படுகின்ற மிகப் பிரதானமான அறிகுறிகளில் ஒன்றாகும். ஏனெனில் எந்த ஒரு விடயத்தினையும் கூர்ந்து கவனிக்கிற போது அது நம்முடைய ஆழ்மனதில் பதிந்துவிடும். இதனால் அவ்விடயத்தினை செயல்படுத்துவது மிக இலகுவானதாக இருக்கும்.
10. நேரத்தினை முறையாகப் பயன்படுத்துதல்
நேரம் என்பது இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைத்திருக்கின்ற இன்றியமையாத செல்வமாகும். ஆனால் இன்றைய உலகில், பெரும்பாலான மனிதர்கள் நேரத்தினை சரியாகவும், வினைத்திறனாக பயன்படுத்த தவறுகின்றனர்.
ஆனால் புத்திசாலிகள் அவ்வாறல்ல. தன்னுடைய நேரத்தை சரியான முறையில் முகாமைத்துவப்படுத்தி, செய்து முடிக்க வேண்டிய காரியங்களை காலம் தாழ்த்தாது உடனே செய்து முடிக்க கூடியவர்களாக இருப்பர்.
தான் செய்கின்ற வேலையை குறித்த நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்றால் அந்த நேரத்திற்குள் முடிக்க கூடியவர்களாக இவர்கள் காணப்படுவர். “இன்று நேரமில்லை. இதை நாம் நாளை முடிக்கலாம் அல்லது அதற்கு அடுத்த நாள் முடிக்கலாம்” என்பது போன்ற சாட்டுப்போக்கு காரணங்களை புத்திசாலிகள் ஒருபோதும் கூறுவதில்லை.
இறுதியாக
இங்கே குறிப்பிட்ட இந்த பத்து அறிகுறிகளும் புத்திசாலி ஒருவரிடம் இருக்க வேண்டிய மற்றும் இருக்கக்கூடிய பண்புகளாகும். இவை அல்லாத இன்னும் சில அறிகுறிகளும் காணப்படுகின்றன.
ஆனால் மேற்குறிப்பிட்ட இந்தப் பத்து அறிகுறிகளும் மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. இந்த பத்து அறிகுறிகளில் குறைந்தது 5 உங்களிடம் இருந்தால் நீங்களும் ஒரு வகையில் புத்திசாலிதான்.
இங்கே குறிப்பிட்ட அறிகுறிகளில் இருக்கின்ற அறிகுறிகளை இன்னும் மேம்படுத்துவதற்கு முயற்சி செய்யுங்கள். அத்தோடு இங்கு குறிப்பிட்டவற்றில் உங்களிடம் இல்லாத பழக்கவழக்கங்கள் ஏதாவது இருந்தால் அதனை உங்களிடம் கொண்டு வருவதற்கு முயற்சி செய்யுங்கள். நிச்சயமாக நீங்களும் புத்திசாலிகள் போன்று மாறலாம். மீண்டும் ஒரு நல்ல பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுகின்றோம் நன்றி.