INTRODUCTION
ஒவ்வொரு மனிதனுடைய வெற்றிக்கான படிகளும் முதன் முதலில் அவன் அடைகின்ற தோல்விகளில் இருந்தே தொடங்குகின்றன. ஏனெனில் தன் வாழ்வில் மிகப்பெரும் வெற்றியை சுவைத்த அத்துணை சாதனையாளர்களின் வாழ்விலும், அவர்களின் அதிகமான நேரங்களில் மிகப்பெரும் தோல்விகளையே சந்தித்துள்ளனர்.
ஆனால் அவர்கள் எத்தகைய தோல்வியை சந்தித்தாலும் அத்தகைய தோல்விக்கான காரணங்களை அறிந்து கொண்டு அதற்கு எதிராக போராடி இவ்வுலகம் அடைய முடியாத வெற்றியினை அவர்கள் அடைந்துள்ளனர். ஒருமுறை தோமஸ் அல்வா எடிசன், “நான் தோல்வியடையவில்லை. பத்தாயிரம் தடவைகள் இவ்வாறு செய்தால் அதனை செய்ய முடியாது என்பதை கற்றுக் கொள்ளவே செய்தேன்” என குறிப்பிட்டார்.
இவ்வாறு வரலாற்றில் இடம் பிடித்த ஒவ்வொரு சாதனையாளர்களும் அவர்கள் தன் வாழ்வில் சந்தித்த தோல்விகள் மூலம் படிப்பினை பெற்றுக் கொண்டதோடு, அவர்கள் அடைந்த வெற்றிக்கும் அது தூணாக அமைந்தது.
ஆனால் இன்று பல மக்கள் தான் அடைகின்ற தோல்வியின் மூலம் தன் முயற்சியை விட்டு விடுவதோடு மீண்டும் மீண்டும் அந்த தோல்விக்கான காரணங்களை அறியாமல் அதனை தொடர்ச்சியாக செய்து கொண்டு வருவதன் மூலம் அவர்கள் தொடர்ச்சியாக தோல்வியையே சந்தித்து வருகின்றனர்.
உண்மையில் நாம் அனைவரும் தோல்விக்கான காரணங்களை சரியாக அறிந்து கொண்டு அத்தகைய தவறுகளை திருத்திக் கொள்வோம் ஆனால் நிச்சயம் வெற்றியினை சுவைப்பது அவ்வளவு கடினமாக இருக்காது. அவ்வாறு தோல்வியினை ஏற்படுத்தக்கூடிய மிகப் பிரதானமான 20 காரணியை (Top 20 Reasons for Failure in your Life) இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். இதனை முழுமையாக வாசித்து நாம் அடைந்த எல்லா தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவோம்.
1. சரியான குறிக்கோள் மற்றும் லட்சியம் இன்மை
வாழ்வில் அடைவதற்கான சரியான குறிக்கோள் மற்றும் இலட்சியம் இல்லாத ஒருவருக்கு வெற்றிக்கான வாய்ப்பே கிடைக்காது. ஏனெனில் வாழ்வில் முன்னேற விரும்பாத பல மக்கள் எந்தவித குறிக்கோளும், லட்சியமும் இல்லாமலேயே தனது வாழ்வை நடத்தி வருகின்றனர். இத்தகையவர்களுக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகவே காணப்படும்.
நீங்கள் உறுதியான லட்சியத்தையும் குறிக்கோள் இணையும் நோக்காகக் கொண்டு உங்களுடைய பயணத்தை நீங்கள் அமைக்கவில்லை என்றால் உங்களால் வெற்றியினை வைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்து விடும். எனவே ஒரு சரியான இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு உங்கள் பயணத்தை தொடருங்கள்.
2. விடாமுயற்சி இன்மை
நம்மில் அதிகமானவர்கள் ஒரு முயற்சியை தொடங்குகின்ற போது அதனை சிறப்பாக துவங்குகிறோம். ஆனால் படிப்படியாக அந்த முயற்சியை செயல்படுத்தி வருகின்றபோது தோல்விக்கான முதலாவது அறிகுறிகள் தென்பட்ட உடனேயே அந்த முயற்சியினை கைவிடுகின்றோம்.
ஆனால் விடாமுயற்சியினை தனது தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படுபவர்கள் இறுதியில் தோல்வியை தோல்வி அடையச் செய்கின்றனர்.
3. சுய ஒழுக்கமின்மை
வெற்றியடைவதற்கு சுய ஒழுக்கம் என்பது இன்றியமையாததாகும். சுய ஒழுக்கம் ஆனது சுய கட்டுப்பாட்டின் மூலம் ஏற்படுகின்றது. சுய ஒழுக்கம் என்பது இல்லையெனில் பிரச்சினைகள் வரும்போது நீங்கள் உங்கள் முயற்சியை கைவிட்டு விடுவீர்கள்.
சூழ்நிலைகள் கட்டுப்படுத்துவதற்கு முன்னர் உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாதெனில், நீங்கள் உங்களாலேயே தோற்கடிக்க படுவீர்கள்.
4. முடிவெடுக்கும் திறன் இன்மை
வெற்றியாளர்கள் முடிவெடுப்பது மற்றும் தீர்மானங்களை மேற்கொள்வதில் விரைவாக செயற்படுகின்றனர். ஆனால் அவற்றை மாற்றுவதில் மெதுவாக செயல்படுகின்றனர்.
தோல்வியாளர்கள் தீர்மானங்களை மேற்கொள்வதில் மெதுவாக செயல்படுவதோடு அவற்றை அடிக்கடி மாற்றவும் செய்கின்றனர். இவ்வாறு தீர்மானம் எடுக்கும் திறன் இன்மை மற்றும் அவற்றை அடிக்கடி மாற்றுதல் என்பவை தொடர்ச்சியான தோல்விகளுக்கு வழிவகை செய்யும்.
5. போதுமான கல்வியறிவின்மை
கல்லூரி பட்டப் படிப்பினை முடித்தால் மட்டும் போதுமான கல்வி அறிவினை பெற்றுக் கொள்ள முடியாது. அதையும் தாண்டிய அனுபவ அறிவு தான் கல்வியறிவு ஆகும். அதாவது சுயமாக நாம் பெற்றுக் கொள்கின்ற அறிவினை இது குறிக்கின்றது.
இவ்வாறு எழுத்து அறிவினை மட்டும் பெற்றிருப்பது கல்வி அறிவு அல்ல. மாறாக, நாம் பெற்றிருக்கின்ற அறிவினை விடா முயற்சியுடனும் திறமையாகவும் செயல்படுத்துவது தான் உண்மையான அறிவாகும்.
நீங்கள் பெற்றிருக்கின்ற கல்விக்காக உங்களுக்கு சம்பள வழங்கப்படுவதில்லை. மாறாக நீங்க அந்த அறிவினைக் கொண்டு எவ்வாறு செயற்படுகின்றீ்ர்கள் என்பதற்காகவே உங்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது.
6. சூழல் ரீதியான தாக்கங்கள்
நாம் சிறுவயதில் சந்திக்கின்ற குடும்ப சூழல் மற்றும் புறச்சூழல் என்பவற்றில் உள்ள எதிர்மறையான விடயங்கள் நமது வாழ்விலும் பிரதிபலிக்கின்றன.
ஏனெனில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் பலர் தங்கள் குழந்தைப் பருவத்தில் அல்லது இளமைப் பருவத்தில் மோசமான சூழலில் வளர்ந்ததன் காரணமாக முறையற்ற தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அவ்வாறான மனப்பாங்கினை பெறுகின்றனர். எனவே முடிந்தளவு எதிர்மறையான சூழலிலிருந்து நாம் விலகி இருந்தால் மட்டுமே வெற்றியினை அடைய முடியும்.
7. பயம்
தோல்வியை கண்டு பயப்படுவது வெற்றிக்கான நமது பாதையை முடக்குகிறது. இவ்வாறு தோல்வியை கண்டு பயப்படுவதானது வெற்றி அளிக்கக் கூடிய பல முயற்சிகளை செய்வதை விட்டும் நம்மை தடுக்கின்றது. இதனால் முயற்சி செய்வதை விட்டும் நாம் விலகி இருக்கின்றோம்.
இவ்வாறு தோல்வியை கண்டு பயப்படுவதை விட்டுவிட்டு எமது முயற்சியை நாம் தொடர்ச்சியாக செய்து வரும்போது குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் நாம் கொண்டுள்ள பயம் நம்மை விட்டு விலகி வெற்றியினை நம் அருகில் கொண்டு வரும்.
8. உடல்நலக்குறைவு
எந்த ஒரு நபரும் சிறந்த ஆரோக்கியம் இல்லாமல் வெற்றியினை சுவைப்பது என்பது முடியாத காரியம். எனவே முடிந்தவரை நமது ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவது தோல்வியில் இருந்து நம்மை பாதுகாத்து வெற்றியின் பக்கம் அழைத்துச் செல்லும்.
முறையான உடற்பயிற்சி இன்மை, தவறான சிந்தனை அல்லது எதிர்மறையாக சிந்தித்தல், முறையற்ற சுவாச பழக்கம் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் காற்று போதுமான அளவு இல்லாமை, ஆரோக்கியத்திற்கு எதிரான உணவு வகைகளை அளவுக்கு அதிகமாக உண்ணுதல் என்பவற்றினால் இவ்வாறான ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுகின்றது.
9. அதிக காலம் எடுத்தல்
தோல்விக்கான காரணிகளில் இது மிகப் பிரதானமான காரணம் ஒன்றாகும். காலம் தாழ்த்தல் என்ற பழக்கமானது வெற்றிக்கான நமது வாய்ப்பினை கெடுப்பதற்காக காத்துக் கொண்டிருக்கின்றது. நம்மில் பெரும்பாலானவர்கள் தோல்வி அடைவதற்கான காரணம், நாம் ஏதாவது ஒரு விடயத்தை செய்யும் போது அதற்காக சரியான நேரத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றோம்.
ஒருபோதும் யாருக்கும் சரியான நேரம் என்பது அமையாது. எனவே உங்கள் முயற்சிகளை இப்போதே தொடங்குங்கள். இப்போது உங்கள் கைவசம் இருக்கின்ற வசதிகளை வைத்து உங்கள் முயற்சியை நீங்கள் தொடங்குங்கள். காலப் போக்கில் உங்கள் முயற்சி வெற்றியடைய செய்வதற்கான பல வழிகளை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.
10. மூலதனம் இன்மை
முதன்முதலில் வியாபாரத்தில் இறங்குபவர்கள் தோல்வி அடைவதற்கான மிகப் பிரதானமான காரணம் இதுவாகும். ஏனெனில், நாம் செய்கின்ற முதல் முயற்சியில் முதல் தோல்வியினை சந்திக்கின்ற போது அதனை சமாளிப்பதற்கான மனபலம் என்பவற்றோடு பணபலமும் இருக்க வேண்டும். அப்போது தான் அத்தொழிலில் தொடர்ச்சியாக நம்மால் நீடித்து செல்ல முடியும்.
11. ஒத்துழைக்கும் திறன் இன்மை
வெற்றியினை அடைவதற்கு மற்றவர்களுடன் சேர்ந்து ஒத்துழைக்கும் திறனானது மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் மற்றவர்களின் கருத்துக்களை உள்வாங்கி அவர்களை மதித்து செயல்படுவதன் மூலம் நமக்கான வெற்றியினை அவர்களே தேடித்தர வழிவகை செய்வர்.
அவ்வாறு இல்லாது மற்றவர்களை எதிர்த்து அவர்களோடு சரியான முறையில் ஒத்துழைக்காமல் இருந்தால் நிச்சயமாக தோல்வியே நமக்கு கிட்டும்.
12. தவறான பழக்கவழக்கங்கள்
அளவுக்கு அதிகமாக உண்ணுதல், மது அருந்துதல் மற்றும் போதை மருந்துகளை உபயோகித்தல் என்பவற்றில் மித மிஞ்சிய ஈடுபாடு காணப்படுமாயின், இவை உங்களை அழிவுக்கு இட்டுச் செல்லும்.
இதில் ஏதாவது ஒன்றில் நீங்கள் அளவுக்கு அதிகமாக ஈடுபாடு காட்டினால் உங்களுடைய வெற்றிக்கு அது தடையாக அமைந்து விடுவதோடு, ஒரு நிரந்தர தோல்வியாளனாகவும் உங்களை மாற்றி விடும்.
13. கவனக்குறைவு
எந்த ஒரு விடயத்திலும் அரைகுறையாக செயற்படும் ஒருவர் எப்போதும் சிறப்பாக இருக்க முடியாது. இவ்வாறு அரை குறையாக செயற்படுவதை விட்டு விட்டு உங்களுடைய முயற்சிகள் அனைத்தையும் ஒரே ஒரு திட்ட வட்டமான இலக்கின் மீது குறி வையுங்கள்.
இவ்வாறு உங்கள் கவனம் சிதறுகின்ற போது உங்களுடைய இலக்கினை அடைய முடிவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். இதனால் உங்கள் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே செய்கின்ற விடயங்களை முடிந்தளவு மிகுந்த கவனத்துடன் செய்து கொள்ளுங்கள்.
14. தவறான தொழிலை தெரிவு செய்தல்
எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களுக்கு விருப்பமில்லாத வேலை ஒன்றில் உங்களால் சிறப்பான வெற்றியை ஒரு போதும் பெறமுடியாது. நீங்கள் விரும்புகின்ற மற்றும் நீங்கள் இதயபூர்வமாக நேசிக்கின்ற ஒரு வேலையினை தேர்ந்தெடுப்பது உங்கள் வெற்றிக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.
சில தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் பணம் அல்லது சூழல்களின் காரணமாக உங்களுக்கு விருப்பமில்லாத வேலையினை ஒரு குறிப்பிட்ட காலம் வரை நீங்கள் செய்கின்ற போதிலும், உங்கள் இலக்கினை அடைவதற்கான திட்டங்களை நீங்கள் உருவாக்க வேண்டும்.
15. தவறான வியாபார கூட்டாளிகளை தெரிவு செய்தல்
வியாபாரம் ஆனது தோல்வி அடைவதற்கு மிகப் பிரதான காரணம் இதுவாகும். நாம் வேலையினை தேடுகின்ற போது அந்த நிறுவனத்தின் தலைவர் உத்வேகம் ஊட்டக்கூடிய, புத்திசாலித்தனமான, வெற்றிகரமான தலைவராக இருக்கவேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
அதுபோலவே நம்மோடு வியாபார கூட்டாளிகளாக இருக்கின்றவர்களும் சிறந்த அறிவு உள்ளவர்களாகவும், தீர்மானம் மேற்கொள்ள கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.
ஏனெனில், நாம் யாருடன் அதிகளவில் தொடர்பில் இருக்கின்றோமோ அவர்களது பண்புகளை நாமும் சுவீகரித்துக் கொள்கின்றோம். நமது வியாபாரக் கூட்டாளிகள் மதிப்புமிக்க பண்பு நலன்களை கொண்டிருப்பார்கள் ஆயின் நாமும் அத்தகைய பண்புகளை அடைந்து கொள்வோம்.
16. தவறான வாழ்க்கை துணையை தேர்வு செய்தல்
இந்த தவறை நாம் செய்கின்ற போது நம் வியாபாரத்தில் மட்டுமன்றி நமது முழு வாழ்க்கையிலும் நாம் தோற்றுப் போக வேண்டியிருக்கும். திருமண உறவு என்பது இரண்டு நபர்களிடையே மிகவும் அன்னியோன்யமான ஒரு தொடர்பை ஏற்படுத்துகின்றது.
இந்த உறவு இணக்கமாக இல்லை என்றால் தோல்வி நிச்சயமாக நம்மைப் பின் தொடரும். இது நமது இலட்சியத்தை வேரோடு அழிக்கின்ற தோல்வியாகவும் அமையும்.
17. நேர்மையின்மை
சில தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக நேர்மையின்றி நீங்கள் நடந்து கொள்ளக்கூடும். ஆனால் நீங்கள் வேண்டுமென்றே நேர்மையின்றி நடந்துகொள்வதை தேர்ந்தெடுக்கின்றபோது, வெற்றிக்கான வாய்ப்புகள் உங்களுக்கு அறவே இல்லாது போய்விடும். இவ்வாறு தொடர்ச்சியாக நேர்மையின்றி நீங்கள் நடக்கின்ற போது உங்கள் மதிப்பு மற்றும் சுதந்திரத்தை இழந்து நிரந்தர தோல்வியில் நீங்கள் நிற்கக்கூடும்.
18. அளவுக்கதிகமான எச்சரிக்கை
எந்த ஒரு விடயத்திலும் துணிந்து இறங்காத ஒரு நபர் மற்றவர்கள் விட்டுச்சென்ற மிகுதியை தான் பின்பற்ற வேண்டியிருக்கும். ஏனெனில், போதுமான எச்சரிக்கை இன்றி நடந்து கொள்வது எந்த அளவுக்கு மோசமானதோ அதே அளவு அளவுக்கதிகமான எச்சரிக்கையுடன் செயற்படுவதும் மோசமானதுதான். எனவே இத்தகைய இரண்டு நிலையில் இருந்தும் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
19. சிந்திப்பதற்கு பதிலாக ஊகிப்பது
பெரும்பாலானவர்கள் சிந்திப்பதற்கு தேவையான உண்மையான தகவல்களை சேகரிப்பதற்கு அக்கறை காட்டுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் சோம்பேறிகளாக இருக்கின்றனர்.
சிந்தித்து செயல்படுவதற்கு பதிலாக ஊகங்களின் மூலமாக உருவாக்கப்படும் அபிப்ராயங்களை மீது செயல்படுவதை அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். இது நிச்சயமாக தோல்வியின் பக்கம் கொண்டு செல்லும்.
20. சேமிக்கும் பழக்கம் இன்மை
ஏழ்மை குறித்து நீங்கள் பயந்தால் உங்களால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. உங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையினை தொடர்ச்சியாக சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
இவ்வாறு நீங்கள் சேமிப்பது பிற்காலத்தில் உங்களுக்கு ஏற்படுகின்ற இடர்களின் போது உதவக் கூடியதாக இருக்கும். அவ்வாறு நீங்கள் சேமிக்க வில்லை என்றால் உங்களுக்கு கொடுக்கப்படும் ஊதியத்தை ஏற்றுக்கொண்டு கிடைத்த வேலையை வைத்துக்கொண்டு திருப்தியாக வாழ வேண்டியிருக்கும்.
FINALLY
இங்கு மேலே குறிப்பிட்ட 20 காரணிகளும் தோல்விக்கு வழிவகுக்கின்ற மிக முக்கியமான காரணிகளாகும். எனவே இந்த இருபது காரணிகளை கொண்டு இனி வருகின்ற உங்களின் ஒவ்வொரு படியையும் வெற்றிப்படிகள் ஆக மாற்றுங்கள்.
நிச்சயம் உங்களது வாழ்விலும் வெற்றிகள் உங்களை அரவணைத்துச் செல்லும். இந்தப் பதிவினை வாசிப்பதோடு மட்டும் அன்றி இதில் குறிப்பிட்ட அனைத்து செயற்பாடுகளையும் உங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி வெற்றி பெற Tamil Motivations சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.