INTRODUCTION
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் தோல்வி என்பது இன்றியமையாத ஒன்றாகும். எத்தகைய தோல்விகள் வந்தாலும், முயற்சியாளர்கள் அந்த தோல்விகளை பார்த்து பயப்படுவதில்லை.
மாறாக, அந்த தோல்விகளில் இருந்து பல பாடங்களை கற்றுக் கொள்வதோடு, அந்த தோல்விகளை உலகமே போற்றக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய வெற்றியாக மாற்றி அமைக்கின்றனர். இது ஒவ்வொரு முயற்சியாளனுக்கும் உரிய தனித்துவமான தன்மையாகும்.
ஆனால் தோல்விகளைக் கண்டு பயப்படக்கூடிய சாதாரண மனிதர்கள் அதனை எவ்வாறு வெற்றியாக மாற்ற முடியும் என்கின்ற ரகசியத்தை மறந்துவிடுகின்றனர். உண்மையிலேயே ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மிகப் பெரிய முயற்சியாளன் ஒளிந்திருக்கிறான். அவனை நாம் ஒவ்வொருவரும் தட்டி எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
எனவே தோல்விகளைக் கண்டு பயப்படாமல் அந்த தோல்விகள் நமக்கு எதை கற்றுத் தருகின்றன?, நமக்கு எந்த ரகசியத்தை சொல்ல வருகின்றன? என்பதை புரிந்து கொண்டு அதனை வெற்றியாக மாற்ற கூடிய செயலில் இறங்க வேண்டும்.
WHICH WINS? WHICH FAILED?
முதலில் நாம் அனைவரும் எது வெற்றி? எது தோல்வி? (Which wins? Which failed?) என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். நினைத்ததை அடைந்தால் அது வெற்றி.நினைத்ததை அடைய முடியா விட்டால் அதுவே தோல்வியாகும். முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது “தோல்வி என்பது நாம் செய்த செயல்கள் சரி இல்லை” என்பதை நினைவூட்ட வந்த நிகழ்வு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இதில் நாம் தோற்கவில்லை. நான் செய்த செயல்கள் சரியில்லை என்பதுதான் அதன் அர்த்தம். எனவே நம் வாழ்க்கை அகராதியில், “நான் தோற்றுவிட்டேன்” என்ற சொல்லை முதலில் கடலில் தூக்கி எறிய வேண்டும்.
குழந்தை ஒன்று நடக்க முயற்சி செய்யும் போது பலமுறை கீழே விழுந்து தான் எழுந்து நடக்கக் கற்றுக் கொள்கிறது. எந்த குழந்தையாவது நான் நடக்க முயற்சிக்கும் போது 50 முறை விழுந்து விட்டேன். எனவே இனி நடப்பது எனக்கு ஒத்து வராத விஷயம் என முடிவெடுத்து இருக்கின்றதா? 50 முறை என்ன 500 முறை தான் கீழே விழுந்தாலும் எழுந்து நடந்தே தீருவேன் என்ற உற்சாகம் குழந்தைகளுக்கு இருப்பதால் புதிய புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள அவை ஆர்வமாக உள்ளது.
SUCCESS DOES NOT COME EASILY
நாம் சைக்கிளோ, ஸ்கூட்டரோ, காரோ கற்றுக் கொள்ளும் பொழுது ஒரே முயற்சியில் அவற்றை கற்றுக் கொள்வதில்லை. பலமுறை கீழே விழுந்து, அடிபட்டு தான் அவற்றை கற்றுக் கொள்கிறோம். இப்படி எந்தத் திறமையையும் ஒரே முயற்சியில் நாம் கற்றுக் கொள்வதில்லை. ஆனால் தொழிலுக்கு வந்த பிறகு “தோல்வியே வரக் கூடாது” என்று நினைக்கிறோம்.
நண்பர்களே! நாம் ஒரு ஊருக்கு காரில் போனால் மேடு, பள்ளங்கள், மழை டயர் பஞ்சர், புயல், கூட்ட நெரிசல் என பல்வேறு தடைகள் வருகின்றன. இவற்றையெல்லாம் கடந்துதான் நாம் அந்த ஊருக்குச் சென்று சேருகிறோம். அதற்காக நாம் பயணத்தை ரத்து செய்து விடுவதில்லை. திரும்பி வந்து விடுவதும் இல்லை.
தடைகளை கடந்து அந்த இடத்தை இறுதியில் அடைகிறோம். அதுபோலத்தான் நாம் செய்கின்ற தொழிலிலும் பல்வேறு பிரச்சனைகள், சங்கடங்கள், போட்டிகள், நஷ்டங்கள், தோல்விகள், இழப்புகள் போன்றவை ஏற்பட தான் செய்யும். தொழிலில் வெற்றி பெற அந்தத் தடைகளை எல்லாம் கடந்து, அந்த தோல்விகளை எல்லாம் எதிர்கொண்டு தான் செல்ல வேண்டி இருக்கின்றது.
ACHIEVERS
சாதனையாளர்களின் சரித்திரத்தை நீங்கள் திரும்பிப் பார்த்தால் அவர்கள் அதிகளவான தோல்விகளை சந்தித்து அவற்றையெல்லாம் கடந்து தான் இத்தகைய மாபெரும் வெற்றியினை அடைந்திருக்கிறார்கள்.
சாதாரண மனிதர்கள் தோல்விகளால் தன் முயற்சியிலிருந்து பின் வாங்கி விடுகின்றனர். இதனை வள்ளுவர் (Valluvar), “இடைக்கண் முரிந்தார் பலர்” என குறிப்பிட்டுள்ளார். வெற்றியாளர்கள், சாதனையாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் அடைந்த பலன்கள்-பயன்கள் நிறையவே வரலாற்றில் சொல்லப்பட்டிருக்கின்றது. எழுதப்பட்டிருக்கின்றது. ஆனால் அவர்கள் பட்ட கஷ்டங்கள், தோல்விகள், இன்னல்கள், அவர்கள் அனுபவித்த கெட்ட இரவுகள், அவமானங்கள், சிந்திய வியர்வை போன்றவை பற்றி மிகச் சிறிதளவே சொல்லப்பட்டிருக்கின்றது.
அதனால்தான் இன்று தோல்விகளைக் கண்டு தன் முயற்சியில் இருந்து பின் வாங்க கூடிய பலர் வெற்றி அடைந்தவர்களை பார்த்து, “அவர்கள் மிக இலகுவாக வெற்றியின் பக்கம் ஈர்க்கப்பட்டு விட்டனர்” என்று அவர்களைப் பார்த்து பொய் சாட்டு கூறுகின்றனர்.
STABLE FOUNDATION
எந்தளவுக்கு வெற்றியின் அளவு பெரியதாக இருக்கிறதோ? அந்தளவுக்கு நாம் சந்திக்க இருக்கின்ற போராட்டங்களும் பெரிதாக இருக்கும். கட்டிடத்தின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க அதன் அஸ்திவாரத்தின் ஆழமும் அதிகம்தானே.
அஸ்திவாரம் தோண்டிக் கொண்டிருக்கும் பொழுதும், அதனுள்ளே சுவர் எழுப்பிக் கொண்டிருக்கும் பொழுதும் வெளி உலகுக்குத் தெரியாது. அந்த சமயத்தில் வெளி உலகம் உங்களைக் கேலி செய்யலாம் அல்லது மதிக்காமல் இருக்கலாம். அவர்கள் பார்வையில் கட்டிடம் மேலே வந்தால்தான் வெற்றி என்று அதனை நினைப்பார்கள்.
ஆனால் நண்பர்களே! நீங்கள் இதுவரை சாதிக்காமல் இருந்தால், தோல்வி அடைந்திருந்தால் அஸ்திவாரம் தோண்டிக் கொண்டு இருக்கின்றீர்கள் என்பதுதான் அதன் அர்த்தம். அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம். இப்பொழுது நீங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களால் நிச்சயமாக உயர்ந்த கட்டிடத்தை கட்ட முடியும்.
ஒரு விவசாயி நெல் விதைத்தால் 3 மாதத்தில் அறுவடை செய்யலாம். ஆனால் மாமரம் அல்லது தென்னை மரம் வைத்தால் சில வருடங்கள் காத்திருக்க தான் வேண்டும். ஆனால் அதன் பலன் பல வருடங்கள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும். ஆகவே நீங்கள் பெரிய வெற்றியடைய தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள்.
REASONS FOR FAILURE
ஒவ்வொரு முறையும் மனிதர்கள் தோல்வியடையும்போது விஞ்ஞான பூர்வமாக அதற்கான காரணங்களை ஆராய வேண்டும். தோல்விக்கு என்ன காரணம்? எதில் குறை? என்ன குறை? என்பதை தீர்க்கமாக பார்க்க வேண்டும்.
அதாவது குறை தொழில் அறிவிலா? அணுகுமுறையிலா? திறமையிலா? அல்லது எனக்கு வியாபார விற்பனை உத்திகள் சரியாக தெரியவில்லையா? போட்டியா? உலக நிலவரம் தெரியவில்லையா? தரமான வாடிக்கையாளர் சேவையானது போதவில்லையா? தொடர்ச்சியான வளர்ச்சி இல்லையா? கணக்குகளில் சரியில்லையா? தொழில் ஈடுபாடு அல்லது அக்கறை இல்லையா? நன்கு கவனிக்கவில்லையா? என பல கோணங்களில் விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
முன் அனுபவம் உள்ளவர்களிடமும், ஆலோசகர்களிடமும் ஆலோசனை பெற வேண்டும். குறைகளை கண்டுபிடித்து சரி செய்து மீண்டும் முயற்சி செய்ய வேண்டும். நாம் நினைத்த வெற்றியினை அடைகின்ற வரை மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டும்.
மேலும் ‘எத்தனை தோல்விகள் வந்தாலும் காரணத்தை கண்டுபிடித்து வெற்றியடையாமல் விடமாட்டேன்’ என்ற மன உறுதி உடையவர்களுக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.
THE LESSON OF FAILURES
மனித வாழ்வில் தோல்விகள் என்பவை விழிப்புணர்வை ஊட்ட வந்தவை. நமக்கு எச்சரிக்கை உணர்வை உருவாக்க வந்தவை. அதற்குப் பிறகு, ‘விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்’ என்ற நிலை வரும்.
வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களும், நஷ்டங்களும், தோல்விகளும் வலியை வேதனையை கொடுத்தாலும் பின்னர் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி நமக்கு வெற்றிபெற துணைபுரிகிறது. மனித வாழ்க்கைச் சரித்திரத்தில் வெற்றியால் பெற்ற அறிவினை விட, தோல்வியினால் பெற்ற அறிவும், விழிப்புணர்வும் தான் அதிகம்.
வெயிலில் இருந்து நிழலுக்கு போனால் சுகம். இருளிலிருந்து ஒளிக்கு போனால் சுகம். இப்படி தோல்வியடைந்து-சங்கடமடைந்து வெற்றிபெற்றால் அதனுடைய சந்தோஷமே தனி. மனிதர்கள் ஏன் இமய மலையில் (Himalayas) ஏறுகின்றார்கள்? அதில் எத்தனை சிக்கல்கள், சோதனைகள், சாதாரண வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. தடைகளும் இல்லை.
ஆனால் இமயமலை ஏறும் பொழுது எவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றைக் கடந்து மலை உச்சிக்குச் சென்றுவிட்டால், அந்த சாதனையே சுகமானது, மகிழ்ச்சியானது. ஆகவே, நண்பர்களே! தோல்விகளைக் கடந்து அந்தச் சாதனைச் சந்தோஷத்தை அடைவோம். அதுவே நமக்குப் பேரானந்தம்.
SO WHAT?
இனிமேல் உங்கள் வாழ்வில் எது நடந்தாலும் இன்று முதல் இந்த கேள்வியை கேட்டுக் கொள்ளுங்கள். அந்தக் கேள்வி அதனால் என்ன? (So What?) தோல்விகளால் ஏற்படுகின்ற பாதிப்புகளை நினைத்து எனக்கு கவலை இல்லை. எது வேண்டுமென்றாலும் நடக்கட்டும். அதன் விளைவுகள் எதுவாக இருந்தாலும் நான் சந்திக்க தயார் என்று உறுதியாக நில்லுங்கள்.
அதை தாங்கிக் கொள்ள நான் தயார் என்ற மன உறுதியுடன் இருப்பவர்கள் எந்த சங்கடங்களும், தோல்விகளும்,பிரச்சினைகளும் எந்தத் தீங்கையும் அவர்கள் வாழ்வில் செய்துவிடமுடியாது. இதனை வள்ளுவர், “இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படா தவர்” என்று கூறுகிறார். அதாவது இடையூறுகளை கண்டு மன உறுதியுடன் உள்ள அறிவாளிகள், தங்களிடம் வந்த இடையூறுகளை துன்பப்படும் அளவுக்கு செய்து விடுகின்றனர் என்பதாகும்.
IGNORENCE
இன்று நம்மில் பலர் தோல்விகளை சந்தித்த பின்னர், இது அது காரணமாக இருக்குமோ? அல்லது அது காரணமாக இருக்குமோ? என்றெல்லாம் தவறாக அங்கும், இங்கும் ஓடுகின்றனர். சில முறை தோற்றவுடன் மனதில் குழப்பம் அடைந்து அறிவுபூர்வமாக சிந்திக்காமல் உணர்வுபூர்வமாக மனம் கலங்கி விடுகின்றனர்.
ஆனால் Thomas Alva Edison, மின்சார பல்பைக் கண்டுபிடிக்க 999 முறை தோல்வியுற்றார். “லேட்டக்ஸ்” என்ற கெமிக்கலை கண்டுபிடிக்க 16999 முறை தோல்வியுற்று 17,000 ஆவது முறை தான் கண்டுபிடித்தார். அவர் ஒவ்வொரு தோல்வியின் போதும் விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து தொடர்ந்ததால், வெற்றியடைய முடிந்தது. அவர் மட்டும் ஒரு சில தோல்விகள் வந்தவுடன் உணர்வுபூர்வமாக சிந்தித்து இருந்தால் நிலைமை என்ன ஆகியிருக்குமோ தெரியவில்லை.
Nothing Can Stop It
உண்மையான வெற்றியாளனுக்கும், முயற்சியாளனுக்கும் வெற்றியினை கொண்டுவருவதற்கு அவனின் முயற்சிதான் கைகொடுக்க வேண்டுமே தவிர உணர்வுகள் அல்ல. உண்மையிலேயே இறைவனின் அருள் நமக்கு இருக்கும் போது நமக்கு வருகின்ற வெற்றியினை தடுப்பதற்கு எந்த சக்தியாலும் முடியாது என்பது பல அறிஞர்களின் கருத்தாகும்.
தாமஸ் அல்வா எடிசன் போன்ற அறிஞர்களின் வாழ்க்கையில் எத்தனை முறை அவர்கள் தோல்வி வந்தாலும் அத்தனை முறையும் அந்த தோல்வியில் இருந்து எதையாவது ஒன்றை கற்றுக் கொண்டு அதன் மூலம் வெற்றி அடைந்துள்ளனரே தவிர, தோல்வியை கண்டு அவர்கள் துவளவில்லை.
FINALLY
எனவே உங்கள் வாழ்வில் தோல்விகள் ஏற்படுகின்ற போது அந்த தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் தொடர்ச்சியாக முயற்சி செய்யுங்கள். முடிந்தவரை உங்கள் தோல்விகளிலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்ளுங்கள்.
தோல்விகளை முன்மாதிரியாகக் கொண்டு மிகச்சிறந்த வெற்றியை நோக்கி தொடர்ந்து தன்னம்பிக்கையோடு பயணியுங்கள். உங்கள் வாழ்வில் நீங்கள் பெற்ற தோல்விகள் அனைத்தும் ஒரு நாளில் மிகப்பெரிய வெற்றியாக உங்கள் கண்முன் வந்து நிற்கும். அப்போது உணர்வீர்கள் இந்த வெற்றிக்கு அடித்தளமே நீங்கள் அன்று பெற்ற தோல்விகள் தான் என்பதை. நன்றி..
-END-