இன்று நம்மில் பலர் அவர்களுடைய ஒரு நாளை தொலைக்காட்சி பார்ப்பதற்கும் தொலைபேசி மூலம் இணைய உலாவல் மேற்கொள்வதற்கும், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் அதிகமான மணித்தியாலங்களை கழிப்பதற்குமே பயன்படுத்து கின்றனர்.
ஆனால் வாழ்வில் வெற்றி பெற்ற அதிகமான மில்லியனர்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் தொலைக்காட்சிகள் பார்ப்பதில்லை, பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் தேவையற்ற அளவு மணித்தியாலங்களை கழிப்பதில்லை என்பதனையும் எம்மில் எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கின்றனர்.
அவ்வாறான அத்தனை மில்லியனர்களிலும் கிட்டத்தட்ட 86 சதவீதத்தினர் வாசிப்பினை தங்கள் பொழுதுபோக்காகவும், தங்கள் மனதுக்குப் பிடித்த விடயமாகவும் வைத்து வந்துள்ளனர். குறிப்பாக Microsoft போன்ற மிகப்பெரும் நிறுவனத்தின் ஸ்தாபகரான Bill Gates வருடத்துக்கு 50 புத்தகங்கள் படிப்பதனை வழக்கமாக கொண்டுள்ளதுடன் அதற்காக ஒரு நாளைக்கு மூன்று மணித்தியாலங்கள் செலவிடுகின்றார்.
அதுமட்டுமன்றி Tesla நிறுவனத்தின் தலைவரான Elon Musk, Alibaba நிறுவனத்தின் தலைவரான Jack Ma மற்றும் Warren Buffett போன்ற மிகப் பெரும் அறிஞர்கள் எல்லாம் வாசிப்பதன் மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். உண்மையிலேயே வாசிப்பு என்பது உங்களை முழு மனிதனாக மாற்றுகின்ற மற்றும் உங்களுடைய குணாம்சங்களை விருத்தி செய்கின்ற தனித்துவமான ஒரு பழக்க வழக்கமாகும்.
இவ்வாறு நீங்கள் தொடர்ச்சியாக வாசிப்பதைவழக்கமாக கொண்டிருப்பீர்கள் ஆயின் நிச்சயமாக நீங்களும், பில்கேட்ஸ், எலான் மஸ்க், வாரன் பஃபட், ஜாக் மா போன்ற மில்லியனர்களின் வரிசையில் இடம் பிடிக்கலாம். அவ்வாறு உங்கள் வாழ்வை மாற்றக் கூடிய, மிகச் சிறந்த சுய முன்னேற்றத்திற்கு உதவக்கூடிய தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள Top 10 Self Help Books பற்றி இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
1. THINK AND GROW RICH
சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள் (Think And Grow Rich) என்ற புத்தகமானது நெப்போலியன் ஹில் (Napoleon Hill) என்பவரால் 1937 இல் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகமானது மிகச்சிறந்த தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் சுய முன்னேற்றத்திற்கான புத்தகமாக விளங்குகின்றது.
பிரபல தொழிலதிபரும் மற்றும் சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள் என்ற புத்தகம் வருவதற்கு மிகப் பிரதான காரண கர்த்தாவாகவும் இருந்த ஆண்ட்ரூ கார்னகியின் (Andrew Carnegie) ஆலோசனையின் கீழ் இந்தப் புத்தகத்தை நெப்போலியன் ஹில் உருவாக்கினார்.
இதுவரை 100 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகளை விற்று தீர்த்துள்ளது இந்தப் புத்தகம். அதுமட்டுமன்றி நெப்போலியன் ஹில் எழுதிய புத்தகங்களில் அதிகம் விற்பனையான புத்தகமாக இது திகழ்கின்றது.
இந்தப் புத்தகமானது வாழ்வில் வெற்றி பெற்ற, மில்லியன் கணக்கான சொத்துக்களை தன் வசப்படுத்திய பல்வேறு நபர்களை நேரடியாகச் சென்று அவர்களைச் சந்தித்து, அவர்கள் எவ்வாறு இந்தப் பணத்தை தன்வசப்படுத்தினார் என்பதனை கேட்டறிந்து சுமார் 20 வருடகால அயராத முயற்சிக்கு பின் வெளியிடப்பட்ட செல்வத்தை குவிப்பதற்கான ஒரு அற்புதமான புதையல் ஆகும்.
இந்தப் புத்தகத்தில் நெப்போலியன் ஹில் செல்வத்தை குறிப்பதற்கான 14 கொள்கைகளை “சாதனைகளின் தத்துவமாக” வகைப்படுத்தி உள்ளார். இப்புத்தகத்தைப் படித்து நீங்களும் அந்த 14 கொள்கைகளை உங்கள் வாழ்வில் செயல்படுத்தினால் நிச்சயமாக உங்களையும் இந்த புத்தகம் ஒரு மில்லியனர் ஆக மாற்றும். ஏனெனில் இப்புத்தகமானது பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை மாற்றி அவர்களை மிகச்சிறந்த மில்லியனராக ஆக்கியுள்ளது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
2. RICH DAD POOR DAD
பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை (RICH DAD POOR DAD) என்ற புத்தகமானது ராபர்ட் கியோசாகி (Robert Kiyosaki) என்பவரால் 1997 இல் வெளியிடப்பட்டது. இந்த புத்தகமானது நிதி தொடர்பான அறிவினை முழுமையாக கற்றுக்கொண்டு செல்வ வளங்களை எவ்வாறு தன் வசப்படுத்துவது என்பதனை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
இதனை அவர் தன் சொந்த வாழ்க்கையின் மூலம் தன்னுடைய சொந்த தந்தையான ஏழை தந்தை மற்றும் தன் நண்பரின் தந்தையான பணக்கார தந்தை என்பவர்களின் வெவ்வேறு வகையான கண்ணோட்டங்களில் மூலம் வாசகர்களுக்கு எடுத்துரைக்கின்றார் ராபர்ட் கியோசாகி.
பணத்திற்காக வேலை செய்யாது, பணத்தை தனக்காக எவ்வாறு வேலை செய்ய வைப்பது என்பதனை தெளிவாக இப்புத்தகம் எடுத்துரைக்கின்றது. பணத்தை அதிகளவில் தன்வசம் ஈர்க்க நினைக்கின்ற ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய நிதி தொடர்பான புத்தகம் இதுவாகும்.
இந்தப் புத்தகத்தில் ராபர்ட் கியோசாகி தன் ஏழை தந்தை மூலம், அதிக அளவில் பணத்தை ஈர்ப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டும், நன்றாக படித்து ஒரு அரசாங்க வேலையில் சேர வேண்டும், சரியான நேரத்துக்கு வரிகளை உரிய முறையில் கட்டிவிட வேண்டும், அதிக ஆபத்துக்கள் நிறைந்த முதலீடுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் போன்ற பணத்தை பற்றிய போதுமான அறிவு இல்லாத சாதாரண மக்களின் மூட நம்பிக்கைகளை தகர்த்தெரிகின்றார்.
அதேபோல் தன் பணக்கார தந்தையின் மூலம், அதிகளவு பணத்தை ஈர்ப்பதற்கு கடினமாக உழைக்க தேவையில்லை, நிதி தொடர்பான அறிவினை முழுமையாக கற்று அதன்படி செயல்படுவதோடு, பணத்திற்காக வேலை செய்யாமல் பணத்தை தனக்காக வேலை செய்து கொள்ளும் கலையை கற்றுக் கொள்வதன் மூலம் மற்றும் சொத்துக்களை அதிகரிக்கச் செய்து, பொறுப்புக்களை குறைத்து நிலையான முதலீடுகளில் (Real Estate) முதலீடு செய்வதன் மூலம் பணக்காரராக முடியும் என்பதனை நிறுவிக் காட்டுகின்றார்.
இதுவரை 109 க்கும் மேற்பட்ட நாடுகளில் 51 க்கும் மேற்பட்ட மொழிகளில் 32 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகளை விற்று தீர்த்துள்ளது இந்தப் புத்தகம். இந்தப் புத்தகமானது ஒவ்வொரு முயற்சியாளர் இடமும் கட்டாயம் இருக்க வேண்டிய நிதி தொடர்பான அறிவினை கட்டியெழுப்ப கூடிய மிகச்சிறந்த புத்தகமாகும்.
3. 7 HABITS OF HIGHLY EFFECTIVE PEOPLE
அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள் (7 Habits Of Highly Effective People) என்ற புத்தகமானது ஸ்டீபன் ஆர். கோவியினால் (Stephen R. Covey) 1989 இல் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தை வணிக மற்றும் சுய முன்னேற்றத்திற்கான புத்தகமாக ஸ்டீபன் ஆர். கோவி (Stephen R. Covey) எழுதியுள்ளார்.
இந்தப் புத்தகத்தில் ஸ்டீபன் ஆர். கோவி மிகவும் ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கவழக்கங்களை குறிப்பிடுகிறார். அதில் முதல் மூன்று பழக்கங்களும் சுதந்திரத்தை அடைவதற்கு உதவுவதோடு, அடுத்த மூன்று பழக்கங்கள் ஒன்றுக்கொன்று சார்ந்து இருப்பதை அடைய உதவும். இறுதியாக உள்ள ஏழாவது பழக்கம் இந்த சாதனைகளை எல்லாம் பராமரிப்பதற்கு உதவும்.
இந்தப் புத்தகத்தில் ஸ்டீபன் ஆர். கோவி குறிப்பிட்டுள்ள 7 பழக்க வழக்கங்களையும் படித்து அதனை எமது வாழ்வில் நெறிமுறையாக செயற்படுத்தும் போது நிச்சயமாக மிகவும் ஆற்றல் வாய்ந்த மனிதர்களாக நாமும் உருவாக முடியும்.
இதுவரை உலகின் பல்வேறு நாடுகளில் 35 க்கும் மேற்பட்ட மொழிகளில் 25 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகளை விற்று தீர்த்துள்ளது இந்தப் புத்தகம். அதுமட்டுமன்றி இந்த புத்தகமானது சுய முன்னேற்றத்திற்கான மிகச் சிறந்த புத்தகமாக திகழ்வதோடு 21 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த புத்தகமாகவும் இது கருதப்படுகிறது.
4. HOW TO WIN FRIENDS AND INFLUENCE PEOPLE
நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி? (How To Win Friends And Influence People) என்ற புத்தகமானது டேல் கார்னகியினால் (Dale Carnegie) 1936 இல் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகமானது உங்கள் சமூக மற்றும் தொடர்பாடல் திறனை அதிகரிக்க உதவுவதோடு, மற்றவர்கள் உங்களை நேசிப்பதற்கும் மற்றும் நீங்கள் வெற்றியாளராக உருவாவதற்கும் இந்த புத்தகமானது உங்களுக்கு வழிவகை செய்யும். அதுமட்டுமன்றி இந்த புத்தகமானது ஒவ்வொரு வெற்றிகரமான மனிதனிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்றாகும்.
இதுவரை 30 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகளை விற்று தீர்த்துள்ளது இந்தப் புத்தகம். 2011 ஆம் ஆண்டு டைம் இதழின் மிகவும் செல்வாக்குமிக்க 100 புத்தகங்களின் வரிசையில் இந்தப் புத்தகமானது 19 ஆவது இடத்தினை பெற்றது. இன்று வரை பல கோடி மக்களின் வாழ்வினை முன்னேற்றியதுடன் மிகச்சிறந்த சுய முன்னேற்றத்துக்கான புத்தகமாகவும் இது திகழ்கின்றது.
5. THE SECRET
இரகசியம் (The Secret) என்ற புத்தகமானது ரோண்டா பைர்ன் (Rhonda Byrne) இனால் 2006ல் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகம் ஆரம்பத்தில் 2006 இல் திரைப்படமாகவே வெளியிடப்பட்டது. திரைப்படத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்த காரணத்தினால் அந்த ஆண்டே (2006) புத்தகமாகவும் வெளியிடப்பட்டது.
இப்புத்தகம் ஆனது ஈர்ப்பு விதியின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். எண்ணங்கள்தான் நமது வாழ்வை தீர்மானிக்கின்றன என்கின்ற இரகசியத்தை இப்புத்தகம் குறித்து நிற்கின்றது. ஒருவர் எதை நினைக்கின்றாரோ அதுவாகவே ஆகிவிடுகின்றார் என்பதே இப்புத்தகத்தின் ரத்தினச் சுருக்கமாகும்.
இதுவரை உலகின் பல்வேறு நாடுகளில் 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் 30 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகளை விற்று தீர்த்துள்ளது இந்தப் புத்தகம். இந்தக் கட்டுரையினை வாசிக்கின்ற ஒவ்வொருவரும் இந்த புத்தகத்தை தன் வாழ்வில் ஒரு முறையாவது படிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் ஆகும்.
ஏனெனில் இந்த புத்தகத்தின் தலைப்பிற்கு ஏற்றவாறு இந்த புத்தகம் மிகப்பெரிய ரகசியங்களை உள்ளடக்கியுள்ளது. உங்கள் வாழ்வை மாற்றக்கூடிய அளவுக்கு மிக உன்னதமான கருத்துகளையும் கொண்டுள்ளது.
6. THE POWER OF POSITIVE THINKING
நேர்மறை சிந்தனையின் வியத்தகு சக்தி (The Power Of Positive Thinking) என்ற புத்தகமானது நார்மன் வின்சென்ட் பீலே (Norman Vincent Peale) என்பவரால் 1952 ல் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகமானது உங்களை எவ்வாறு நம்புவது?, உங்கள் கவலைகளை எவ்வாறு இல்லாமல் செய்வது? மற்றும் உங்கள் அணுகுமுறையை மாற்றுவதன் மூலம் எவ்வாறு உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்துவது என்பதனை பற்றி இப்புத்தகம் விவரிக்கின்றது.
இந்தப் புத்தகமானது வாசகர்களுக்கு அதிகளவில் நம்பிக்கை ஊட்டுகின்ற மற்றும் உத்வேகம் அளிக்கின்ற ஒரு சிறந்த புத்தகமாக திகழ்கின்றது. இதுவரை உலகின் பல்வேறு நாடுகளில் 40 க்கும் மேற்பட்ட மொழிகளில் 5 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகளை விற்று தீர்த்துள்ளது இந்தப் புத்தகம்.
7. EAT THAT FROG
காலை எழுந்தவுடன் தவளை (Eat That Frog) என்ற புத்தகமானது பிரைன் டிரேஸி (Brian Tracy) என்பவரினால் 2001 இல் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தில் பிரைன் டிரேஸி நேரத்தை சரியாக முகாமைத்துவம் செய்து எமது வேலைகளை மிக விரைவாக செய்து முடிப்பதற்கான 21 வழிமுறைகளை குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில் எம்மில் அதிகமானோர் காலை எழுந்தவுடனே அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை தவளையின் வேகத்தில் செய்து வருகின்றனர். அவ்வாறு உங்கள் வேலைகளை நீங்கள் செய்து முடிப்பதற்கு அதிக நேரம் உங்களுக்கு எடுக்கின்றது என்றால் இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள அந்த 21 வழிமுறைகளை பின்பற்றி மிக விரைவாக உங்கள் வேலைகளை செய்து கொள்ள முடிவதோடு, உங்கள் நேரத்தையும் முகாமைத்துவம் செய்துகொள்ள முடியும். இதுவரை உலகின் பல்வேறு நாடுகளில் 40 க்கும் மேற்பட்ட மொழிகளில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகளை விற்று தீர்த்துள்ளது இந்தப் புத்தகம்.
8. THE ALCHEMIST
ரசவாதி (The Alchemist) என்ற புத்தகம் பிரேசிலைச் (Brazil) சேர்ந்த பிரபல எழுத்தாளர் பௌலோ கொய்லோ (Paulo Coelho) என்பவரினால் 1988 இல் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தில் பௌலோ கொய்லோ ஆண்டலூசியாவை சேர்ந்த ஆடு மேய்க்கின்ற சாண்டியாகோ (Santiago) என்ற சிறுவன் எகிப்தில் உள்ள புதையல் ஒன்றினைத் தேடி செல்வதனை மையமாகக்கொண்டு இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.
சாண்டியாகோ தனக்கு அடிக்கடி கனவில் வந்த “எகிப்துக்கு நீ சென்றால் அங்கு ஒரு புதையல் கிடைக்கும்” என்ற கனவினை அடிப்படையாகக் கொண்டு, அதனை அடைவதற்காக ஸ்பெயினில் (Spain) உள்ள தனது வீட்டிலிருந்து எகிப்து நோக்கி பயணிக்கிறான்.
அப்படி அவன் புதையலைத் தேடி பயணிக்கின்ற வேலையில் சந்திக்கின்ற கஷ்டங்கள், துன்பங்கள் மற்றும் இறுதியில் புதையலை அடைந்தானா? இல்லையா? என்பதனை மிகவும் அழகாக இப்புத்தகத்தில் கூறியுள்ளார் பௌலோ கொய்லோ.
இப்புத்தகத்தை ஒரு சாதாரண கதை வடிவில் பௌலோ கொய்லோ எழுதியிருந்தாலும், இதில் மக்கள் தங்கள் வாழ்வின் எந்த நேரத்திலும் தங்கள் கனவினை நனவாக்கும் சக்தி வாய்ந்தவர்கள் என்கின்ற விடயத்தினை மிக அழுத்தமாகக் கூறியுள்ளார்.
இந்தப் புத்தகம் தனது கனவினை துரத்தி அதனை அடைய நினைக்கும் ஒவ்வொரு வருக்கும் மிகவும் உதவக் கூடிய ஒரு அற்புதமான சுய முன்னேற்றத்துக்கான சிறந்த புத்தகமாக காணப்படுகின்றது. இதுவரை உலகின் பல்வேறு நாடுகளில் 80 க்கும் மேற்பட்ட மொழிகளில் 65 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகளை விற்று தீர்த்துள்ளது இந்தப் புத்தகம்.
9. WHO MOVED MY CHEESE?
என் சீஸை நகர்த்தியது யார்? (Who moved my Cheese?) என்ற புத்தகமானது ஸ்பென்சர் ஜான்சன் (Spencer Johnson) என்பவரால் 1998 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தில் இரண்டு எலிகள் மற்றும் இரண்டு மனிதர்களின் கதாபாத்திரங்களைக் கொண்டு ஓர் அருமையான உங்கள் தொழில் வாழ்க்கை மற்றும் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய மிகச்சிறந்த சுய முன்னேற்ற புத்தகத்தினை உருவாக்கியுள்ளார்.
பல மனிதர்களின் அலட்சியப் போக்கினை இப்புத்தகம் இரு மனிதர்களின் கதாபாத்திரங்கள் மற்றும் இரண்டு எலிகளின் கதாபாத்திரம் மூலம் மிகச் சிறப்பாக விவரிக்கின்றது. இப் புத்தகமானது வாழ்வில் வெற்றி பெற துடிக்கும் ஒவ்வொருவரிடமும் கட்டாயமாக இருக்க வேண்டிய ஒரு புத்தகம் ஆகும். உலகின் பல்வேறு நாடுகளில் 37 க்கும்மேற்பட்ட மொழிகளில் சுமார் 26 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகளை இப்புத்தகம் விற்று தீர்த்துள்ளது.
10. THE POWER OF NOW
இப்பொழுது (The Power Of Now) என்ற புத்தகமானது எக்கார்ட் டோலே (Eckhart Tolle) என்பவரால் 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தை எக்கார்ட் டோலே (Eckhart Tolle) வாழ்க்கைக்கான சிறந்த வழிகாட்டியாக வடிவமைத்துள்ளார்
எக்கார்ட் டோலே இப்புத்தகத்தில் இப்பொழுது இக்கணம் நாம் வாழ்கின்ற வாழ்க்கையின் முக்கியத்துவத்தினையும், கடந்த காலத்தில் நடந்த விடயங்களை நினைத்து நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை தவற விடுவதையும் மற்றும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என நினைத்து நிகழ்காலத்தை தவற விடுவதையும் பற்றி விவரித்துள்ளார்.
இந்தப் புத்தகம் ஓப்ரா வின்ஃப்ரேவினால் (Oprah Winfrey) பரிந்துரைக்கப்பட்ட புத்தகமாகும். இதுவரை உலகின் பல்வேறு நாடுகளில் 30 க்கும் மேற்பட்ட மொழிகளில் 3 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகளை விற்று தீர்த்துள்ளது இந்தப் புத்தகம்.
Very useful thank you for great service
ReplyDelete