இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஒரு விடையத்தை துரத்துகின்றான் என்றால் அது வெற்றி தான். வாழ்வில் வெற்றி அடைவது என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத ஒன்று. இவ்வுலகில் மொத்தமாக சுமார் 7.8 Billion மக்கள் இருக்கின்றனர்.
ஆனால் அவர்களில் தன் வாழ்வில் வெற்றி அடைந்தவர்களை எடுத்துக் கொண்டோமேயானால் விரல் விட்டு எண்ணி விடலாம். அதாவது உலகின் 90% சதவீதமான செல்வ வளமானது மொத்த சனத்தொகையில் 5% சதவீதமான மக்களிடமே இருக்கின்றது. உண்மையில் இதனை கேட்கும்போது மிகவும் கவலைக்குரியதாக இருந்தாலும் இதுதான் நிதர்சனமான உண்மையாகும்.
அந்த 5% சதவீதமான சனத்தொகையினரிடம் உலகின் 90% சதவீதமான செல்வ வளம் இருப்பதற்கு எது காரணமாக இருந்திருக்கும் என்பது பற்றி மிகுதி 95% சதவீதமான மக்கள் சிந்திப்பதும் இல்லை. அது பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை. தான் இவ்வுலகில் பிறந்து விட்டேன். அதனால் நான் வாழ்ந்தே ஆக வேண்டும் என்று எந்தவித குறிக்கோளும் இல்லாமல் ஏனோ, தானோ என்று தனது வாழ்க்கையை வாழ்கின்றனர்.
12 HABITS FOR SUCCESS
ஆனால் நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வெற்றியடைந்த மனிதர்களின் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தோமேயானால் அவர்களுக்கு என்று தனித்துவமான கொள்கைகளை அவர்கள் தன் வாழ்வில் பின்பற்றி இருப்பார்கள்.
அவர்கள் பின்பற்றிய அந்த பழக்கவழக்கங்கள் தான் இன்று அவர்களை இந்த 5% சதவீதமான பில்லியனர்களில் ஒருவராக அவர்களை மாற்றியுள்ளது. அது மட்டுமன்றி மிகவும் ஆளுமையுள்ள தான் பணிபுரிகின்ற துறையில் மிகப்பெரும் வெற்றியாளனாக வருவதற்கும் அத்தகைய பண்புகள் தான் அவர்களுக்கு உதவியுள்ளது.
அவ்வாறு அவர்கள் தங்கள் வெற்றிக்காக பின்பற்றிய 12 பண்புகளை இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். இந்த பன்னிரெண்டு பண்புகளையும் உங்கள் 40 வயதிற்குள் நீங்கள் கடைபிடிப்பீர்கள் என்றால் உங்களால் வெற்றி அடைவது என்பது மிகவும் இலகுவான காரியமாக இருந்துவிடும்.
அது மட்டுமன்றி இந்த பன்னிரெண்டு பண்புகளையும் மேலே குறிப்பிட்ட 5 சதவீதமான பில்லியனர்கள் தன் வாழ்வில் வெறுமனே பண்புகளாக மட்டுமன்றி அதனை தன் வாழ்வின் கொள்கைகளாக தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
எனவே நீங்களும் அத்தகைய பண்புகளை கொள்கைகளாக உங்கள் வாழ்வில் பின்பற்றி வருவதன் மூலம் நீங்களும் சிறந்த வெற்றியாளனாக வருவதற்கு இவ்வுலகம் வழிவகை செய்யும். சரி வாருங்கள் அத்தகைய சிறந்த வெற்றிக்கான பண்புகளை வரிசையாகப் பார்ப்போம்.
1. சொந்தக் காலில் நிற்பது
அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை என மற்றவர்களின் உதவியை நாடி இருக்காமல்உங்கள் சொந்தக் காலில் நிற்கின்ற அளவுக்கு நீங்கள் நல்ல நிலையை அடைந்து இருத்தல் வேண்டும். இவ்வாறு யாருடைய உதவியும் இன்றி ஜெயித்துக் காட்டுவது என்பதே ஒரு பெரிய கவுரவம் தான்.
2. தோல்வியில் இருந்து பாடம் கற்றல்
தோல்வியின் மூலம் கற்றுக்கொள்ளும் பாடத்தினை நீங்கள் வேறு எங்கும் கற்றுக்கொள்ள முடியாது. தோல்வி என்பது உங்களை ஒழுங்கமைக்கின்றன் ஒரு சிறந்த ஆசானுக்கு ஒப்பானதாகும். உங்கள் வாழ்வில் ஒரு முறையேனும் நீங்கள் தோல்வியினை சந்தித்துவிட வேண்டும்.
இல்லையெனில் 30 வயதை கடந்து நீங்கள் சந்திக்கின்ற பிரச்சினைகளை உங்களால் கையாளுவதற்கு மிகவும் கடினமாக இருக்கும். ஏனெனில் ஒரு தோல்விதான் நீங்கள் பிரச்சினைகளை சந்திக்கும் போது அவற்றிலிருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவுகின்ற மிகச்சிறந்த ஆயுதம் ஆகும் .
3. முதலீடுகளை அதிகம் செய்தல்
நாம் சம்பாதிக்கின்ற பணத்தினை வருமானம் ஈட்டுகின்ற வகையில் சிறந்த முதலீடு ஒன்றில் முதலீடு செய்துவிட வேண்டும். அதனை வீணாக செலவு செய்யாமல் நமது வருங்காலத்திற்காக சேமித்து வைக்க வேண்டும்.
இவ்வாறு நீங்கள் செய்வது உங்களை மிகப்பெரும் பிரச்சினைகளிலிருந்து பாதுகாப்பதற்கு உதவுவதுடன், இன்று மிகப்பெரும் செல்வந்தர்களாக இருக்கின்றவர்கள் எல்லாம் அதிகமாக முதலீடு செய்யும் பழக்கம் உடையவர்களாகவே இருந்துள்ளனர்.
4. நேரத்தினை சிறந்த முறையில் பயன்படுத்துதல்
நேரம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய பொக்கிஷமாகும். ஆனால் இதன் முக்கியத்துவத்தினை அறியாத பலர், தனது நேரத்தை வீணாக செலவு செய்கின்றனர்.
அவ்வாறு அல்லாமல் நேரத்தினை நாம் அனைவருமே அளந்து செலவு செய்யவேண்டும். 30 வயதிற்கு மேல் நேரத்தை வீண் விரயம் செய்வது என்பது உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரும் பேரிழப்பாக அமையும்.
5. துறை சார்ந்த அறிவினை பெற்றிருத்தல்
நீங்கள் உங்கள் துறை சார்ந்த படிப்பில் முழுமை அடைந்து இருக்கவேண்டும். பி.எச்.டி முடிப்பதுதான் முழுமையான படிப்பு என்றில்லை. இன்றைய நிலவரப்படி உள்ள அப்டேட்களை நீங்கள் என்னவென்று தெரிந்து வைத்திருத்தலே போதுமானதாகும்.
ஒவ்வொரு நாளும் உங்கள் துறையில் என்ன என்ன மாற்றங்கள் நிகழ்கின்றது என்பது பற்றி நீங்கள் எப்பொழுதும் அப்டேட் உடன் இருக்க வேண்டும். இதுதான் உங்களை உங்கள் துறையில் மிகச் சிறந்த வெற்றியாளராக மாற்றும்.
6. சிறப்புத் தேர்ச்சி அடைதல்
நீங்கள் செய்கின்ற வேலையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். உங்களிடம் யாராவது குறிப்பிட்ட வேலையை தந்தால் அதில் நீங்கள் திறமையானவராக இருக்க வேண்டும்.
எந்தளவுக்கு என்றால், குறித்த வேலையினை உங்களிடமே தவிர வேறு யாரிடமும் கொடுக்கக் கூடாது என்று பிறர் நினைக்கும் அளவுக்கு நீங்கள் அந்த வேலையில் சிறப்பு தேர்ச்சி உடையவராக இருக்க வேண்டும்.
7. தனித்துவமாக இருத்தல்
எந்த சந்தர்ப்பத்திலும் மற்றவர்களுக்காக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள கூடாது. ஏனெனில், உங்கள் தனித்துவத்தை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் எவ்வாறு விரும்புகின்றீர்களோ அவ்வாறே நீங்கள் வாழவேண்டும். மற்றவர்களுக்காக, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்காக உங்களின் சுயத்தை நீங்கள் இழக்க கூடாது.
அதேபோல் உங்களிடம் தவறான பழக்கவழக்கங்கள் இருந்தால் நீங்கள் அதை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் உங்களிடம் உள்ள நல்ல பழக்கவழக்கங்களை மற்றவர்களுக்கு பிடிக்காது என்பதற்காக ஒருபோதும் மாற்றிக் கொள்ளாதீர்கள்.
8. உண்மையான நட்பு
எல்லோருக்கும் உண்மையான நட்பு அமைவது என்பது மிகவும் அரிதான ஒரு விடயமாகும். உண்மையான நட்பு என்பது எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் அல்லது எவ்வளவு பெரிய வெற்றி நம்மை வந்தடைந்தாலும் உங்கள் அருகில் நின்று உங்களுக்காக பேசக்கூடிய ஒரு தோழமை ஆகும்.
எந்த எதிர்பார்ப்புமின்றி உங்களுக்காக, உங்களோடு இறுதிவரை வருகின்ற ஓர் தோழமையை நீங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது உங்கள் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது.
9. தீய பழக்கங்களிலிருந்து விடுபடல்
நீங்கள் புகை பிடிப்பவராகவோ, மது அருந்துபவராகவோ, கெட்ட வார்த்தைகளை அதிகம் பேசுபவராகவோ அல்லது பெண்கள் விடயத்தில் தவறாக நடப்பவராகவோ இருந்தால் உங்களது 30 வயதிற்குள் இவ்வாறான தீய பழக்க வழக்கங்களில் இருந்து விலகிவிட வேண்டும்.
அவ்வாறு எந்த கெட்ட பழக்க வழக்கங்களும் உங்களுக்கு இல்லையெனில், உங்களுக்கு நீங்களே ஒரு கைதட்டல் போட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒருவரை இந்த உலகம் கேலி, கிண்டல் செய்ய தவறுவதில்லை.
10. பேரார்வம்
இங்கு பேரார்வம் என்பது உங்களின் வேலையை குறிக்கிறது. அதாவது, ஆரம்பத்தில் வேலை செய்தாக வேண்டும் என்பதற்காக ஏதாவது ஒரு வேலையில் நீங்கள் சேர்ந்து இருக்கலாம். ஆனால் அந்த வேலை தற்காலிகமானதே. நீங்கள் உங்களுடைய முப்பதாவது வயதில் உங்களுக்கு பிடித்த தொழில் அல்லது துறை அல்லது வேலையொன்றில் சேர்ந்து விட வேண்டும்.
ஏனெனில் அதுதான் நீங்கள் அடைய நினைத்த இலக்காகும். அந்த இலக்கை நீங்கள் அடையும் போதுதான் நீங்கள் வெற்றி அடைந்ததாக அர்த்தம். அவ்வாறு சந்தர்ப்ப சூழ்நிலையால் நீங்கள் வேறு வேலையை செய்தாலும் உங்கள் இலக்கினை அடைய வேண்டுமெனில் இந்த பேரார்வம் உங்களை சூழ்ந்து இருக்க வேண்டும்.
11. அனைவரோடும் ஒத்துப் போதல்
எப்பொழுதுமே ஒரு வேலையினை பிறரது உதவியின்றி தனியாக செய்வது என்பது கடினமான ஒன்றாகும். ஆனால் பிறரோடு அதிகளவில் பிரச்சினை படுகின்ற ஒருவரால் இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது குறித்த வேலையினை அவரால் வெற்றிகரமாக செய்வது என்பது கடினமான ஒன்றாக அமையும்.
எனவே நீங்கள் உங்கள் துறையில் வெற்றியடைய வேண்டுமென்றால் குறைந்தபட்சமாக உங்களது 30 வயதிற்கு மேல் நீங்கள் ஒரு நெட்வொர்க் போன்று நீங்கள் வேலை செய்கின்ற இடத்திலும், உங்கள் குடும்பத்திலும் ஒற்றுமையாக வாழவேண்டும். இவ்வாறு நீங்கள் செய்வது உங்களை பல நிலைகள் உயர்வதற்கு உதவி புரியும்.
12. உலகம் சுற்றும் வாலிபன்
குறைந்தபட்சமாக அருகில் உள்ளே சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்காவது நீங்கள் ஒரு முறையேனும் சென்றுவந்து விட வேண்டும். இவ்வாறு இயற்கையின் அழகை நீங்கள் அதன் மூலம் உங்களுக்கு பல வகையில் நன்மை கிடைப்பதோடு, மன அமைதியும் பெறுவீர்கள். புதிய இடம், புதிய கலாச்சாரம் உங்களை நீங்களே மெருகேற்றிக் கொள்ள புத்துணர்ச்சி அடைய பெருமளவு உதவி புரியும்.
FINALLY
இவ்வாறு மேலே குறிப்பிட்ட இந்த 12 பண்புகளையும் உங்கள் வாழ்வில் மிக முக்கியமான குணாதிசயங்கள் ஆக நீங்கள் பின்பற்றி வர வேண்டியவையாகும். இந்த பண்புகளை நீங்கள் பின்பற்றிவரும் வரும்போது காலப்போக்கில் நீங்கள் அடைய நினைக்கின்ற இலக்கினை மிக இலகுவாக அடைந்து கொள்ள முடியும் என்பதோடு மிகப்பெரும் வெற்றியாளராகவும் உங்கள் வாழ்வில் நீங்கள் உருவாக முடியும்.