இந்தப் பதிவில் உங்களை சிந்திக்க வைக்கின்ற மற்றும் உங்களை ஊக்குவிக்கின்ற இரண்டு சுவாரசியமான கதையினை பார்க்க இருக்கின்றோம். இக்கதைகள் சாமர்த்தியம் மற்றும் புத்திசாலித்தனத்தின் முக்கியத்துவத்தினை எடுத்துக் கூறுகின்ற மிக சுவாரசியம் நிறைந்த கதைகளாகும்.
நிச்சயமாக இவை உங்களை திருப்திப்படுத்தும் என்று நம்புகின்றோம். அதேபோல் இக்கதையின் மூலம் ஏதாவது ஒரு படிப்பினையை பெற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் வாருங்கள் கதைக்குள் செல்லலாம்.
சிறிய தூண்டிலும் சேல்ஸ்மேனும்
ஒருமுறை தமி ழ்நாட்டிலிருந்து இளைஞர் ஒருவர் வேலை தேடி வெளிநாடு ஒன்றுக்கு சென்றார். அவர் ஓர் திடகாத்திரமான இளைஞரும் ஆவார். அவ்வாறு சென்ற அவர் அந்நாட்டிலுள்ள விற்பனை நிலையமொன்றில் சென்று தனக்கு வேலை தருமாறு அக்கடை முதலாளியிடம் கேட்டார்.
ஆனால் இவ் இளைஞரை பார்த்த கடை முதலாளிக்கு சற்றும் அவர் மேல் நம்பிக்கை வரவில்லை. உடனே அவர் இளைஞரிடம், “நீ இதற்கு முன் சேல்ஸ்மேனாக வேலை செய்த அனுபவம் உனக்கு உண்டா” என கேட்டார். அதற்கு அவ் இளைஞர், “ஆமாம் நான் இதற்கு முதல் தமிழ்நாட்டில் சேல்ஸ்மேனாக தான் வேலை புரிந்தேன்” என்று கூறினார்.
அதற்கு முதலாளி அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடுகின்ற நேரம் நீ எவ்வாறு வேலை செய்து இருக்கின்றாய் என்பதை பார்ப்பதற்காக நான் வருவேன் என்றார். அத்தோடு அப்போது உனது வேலை நன்றாக இருந்தால் மட்டுமே உனக்கு நிரந்தரமாக வேலை தருவேன் என்றும் கூறினார்.
முதலாளி சொன்னது போலவே அவ் இளைஞர் அடுத்த நாள் வேலைக்கு சென்று அக்கடையில் சேல்ஸ்மேனாக தனது முதல் நாள் வேலையையும் செய்தார். அதேபோல் அன்று கடை மூடும் நேரத்திற்கு முதலாளி சொன்னது போலவே வந்தார். கடை மூடும் நேரத்தில் வந்த முதலாளி இளைஞரைப் பார்த்து “இன்று வாடிக்கையாளர்களிடம் எத்தனை சேல்களை செய்தாய்” என கேட்டார். அதற்கு அவர் ஒருவரிடம் மட்டுமே விற்பனை செய்தேன் எனக் கூறினார்.
இதனைக்கேட்ட முதலாளி, என்னது!!! ஒருவரிடம் மட்டும்தானா விற்பனை செய்தாய். உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20 இலிருந்து 30 வாடிக்கையாளர்களும் தனது விற்பனையை மேற்கொள்கின்றனர். ஆனால் நீயோ ஒருவரிடம் மட்டுமே விற்பனை செய்துள்ளாய்.
அப்படியானால் உனக்கு வேலை நிரந்தரமாக கிடைப்பது என்பது மிகவும் சந்தேகத்திற்குரிய விடயமாகும். இவ்வாறு இல்லாமல் இனி வரும் நாட்களில் அவர்களை போல நீயும் அதிகளவு சேல்களைச் செய்ய வேண்டும் எனக் கூறிய முதலாளி, பின்னர் அவ் இளைஞரிடம் “சரி ஒரு சேல்தான் செய்தாய். அதனை எவ்வளவுக்கு செய்தாய்” என கேட்டதும், இளைஞர் முதலாளியிடம் “10 லட்சம் டாலர்களுக்கு” என கூறினார். இதனைக் கேட்ட முதலாளி ஆச்சரியத்தில் திகைத்து போனார். என்னது ஒரு சேலுக்கு இவ்வளவு பணமா? அவ்வாறு அந்த நபரிடம் என்னதான் விற்றாய்? என முதலாளி கேட்டார்.
அதற்கு அவ் இளைஞர், “முதலில் அவரிடம் சிறிய தூண்டில், அதன் பிறகு கொஞ்சம் பெரிய தூண்டில், அதன் அதன் பிறகு அதைவிடப் பெரிய தூண்டில், ஃபிஷிங் ராட், ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன். பிறகு அவரிடம் எங்கே மீன் பிடிக்கின்றீர்கள் என கேட்டேன். அதற்கு அவர் நான் கரையில் அமர்ந்து தான் மீன் பிடிப்பதாக சொன்னார். உடனே நான் நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை அவருக்கு விற்றுக் கொடுத்தேன்.
அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா? என்று தெரியவில்லையே என என்னிடம் கேட்டார். அதற்கு ஒரு வழி உள்ளது என்று கூறி நமது ஆட்டோமேட்டிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4*4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன்.
பின்னர் அவரிடம் நீங்கள் எங்கு தங்கியிருக்கின்றீர்கள் என்று நான் கேட்டேன். அதற்கவர் இப்போதைக்கு எந்த இடமும் இல்லை எனக்கூறினார். உடனே நான் அவருக்கு நான்கு பேர் தங்கக் கூடிய அளவில் டென்ட் ஒன்றும் விற்றுக் கொடுத்தேன் என்று மூச்சுவிடாமல் கூறினார்.
இதனைக் கேட்ட கடை முதலாளிக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய்? என கேட்டார். அதற்கு அவர் இல்லை முதலாளி அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் ஆக இருக்கும். அப்போது உங்கள் தலைவலியும் குணமாகிவிடும் என கூறவே அவர் இதையெல்லாம் வாங்கினார் என கூறினார்.
அவ் இளைஞரின் சாமர்த்தியத்தையும், புத்திசாலித்தனத்தையும் பார்த்து வியந்த முதலாளி அவரை நிரந்தரமாகவே அக்கடையில் நியமனம் செய்தார்.
வியாபார தந்திரம்
முதியவர் ஒருவர் பழக்கூடை ஒன்றினை வைத்துக் கொண்டு பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பேருந்து வரவே அவரும் அப்பேருந்தில் ஏறினார். பேருந்தில் ஏறியதும் முதியவர் 4 பழம் பத்து ரூபாய் என கூறி பழங்களை விற்க முயன்றார்.
ஆனால் பேருந்தில் இருந்த பயணிகள் எவருமே அம்முதியவர் விற்ற பழங்களை வாங்க முன்வரவில்லை. பழங்களை சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், அப்பேருந்தில் இளைஞன் ஒருவன் பழக்கூடையோடு ஏறினான்.
அவ்வாறு ஏறியவன் ஆறு பழங்கள் பத்து ரூபாய் என்று விற்கத் தொடங்கினான். அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் பலர் அவன் விற்ற பழங்களை வாங்கினர். இதனால் அவனுக்கு நல்ல விற்பனை நடந்தது. ஆனால் அம்முதியவருக்கு ஒரு பழம் கூட விற்பனையாகவில்லை.
அதன் பின்னர் மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர், அங்கும் நாலு பழம் பத்து ரூபாய் என விற்பனை செய்ய ஆரம்பித்தார். அப்போதும் எந்தப் பழமும் அவருக்கு விற்காமல் போகவே, மறுபடியும் பேருந்தை விட்டு கீழே இறங்கினார்.
அவ்வாறு முதியவர் பேருந்தை விட்டு இறங்கியதும் முன்னர் நடந்ததைப் போலவே அந்த இளைஞனும் அந்த பஸ்ஸில் ஏறி, ஆறு பழங்கள் பத்து ரூபாய் என கூவியபடி மீண்டும் விற்கத் தொடங்கினான். இந்த முறையும் அவனுக்கு வியாபாரம் அள்ளியது.
அப்போது பேருந்தில் மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகர் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் இக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்து, “அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே.
அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கும் நல்ல விற்பனையாகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி இலாபத்தினை குறைத்து விற்பனை செய்யப் பழகுங்கள்” என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார் அந்த விற்பனை ஆலோசகர்.
இதைக் கேட்ட முதியவர் சிரித்தபடியே, “போயா... அவன் என் மகன் தான். இந்தப் பழமும் அவனது தான். ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால் சட்டுன்னு வாங்குவதற்கு நமது மக்களுக்கு மனசு வராது. அதனால் தான் நாலு பழம் பத்து ரூபாய் என்று கூவியபடி நான் போறேன். அப்புறமா என் மகன் வந்து ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்கிறான்.
அவன் அவ்வாறு சொன்னதுமே அடடே.. இது இலாபமாக இருக்கின்றது என்று நமது மக்கள் அதனை அதிகமாக வாங்குகின்றார்கள்.. அதனால் பழமும் நல்ல விற்பனையாகின்றது. மக்களின் மனசை மாற்றத்தான் என்னை முன்னாடி அவன் அனுப்புகிறான் என்றார் முதியவர். இதனைக்கேட்ட விற்பனை ஆலோசகர், இளைஞரதும், அம்முதியவரதும் சாமர்த்தியத்தைப் பார்த்து வியந்தபடியே பேசுவதற்கு வார்த்தைகள் இல்லாது மௌனியாகி போனார்.
FINALLY
மேலே குறிப்பிட்ட இரண்டு கதைகளும் உங்களுக்கு ஒரு விடயத்தை ஞாபகப்படுத்தி இருக்கும். எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் நிச்சயமாக அதில் சாமர்த்தியம் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்றார் போல நடந்து கொள்வது எவ்வளவு முக்கியமானது என்பதனை.
இவ்விரு கதைகளும் உங்களுக்கு உணர்த்தி இருக்கும். நிச்சயமாக இவ்விரு கதைகளும் உங்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கும் என்ற நம்பிக்கையோடு மீண்டும் ஒரு சுவாரசியமான நல்ல பதிவோடு உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுகின்றோம்.