ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் பணம் என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. கொடுக்கல் வாங்கல்களுக்காக பணம் என்னும் அச்சிடப்பட்ட காகிதங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நாட்களில் இருந்து இன்று வரை, ஏன் உலகம் அழியும் வரை அதற்கான மதிப்பும், அதற்கான தேவைப்பாடும் அதிகரித்துக் கொண்டே போகும்.
இன்று பலரும் பணத்தை அடைய வேண்டும். நானும் ஒரு பணக்காரன் ஆக வேண்டும் என்பதற்காக பல வழிகளை தேர்ந்தெடுத்து கொண்டு முன்னேறிச் செல்வதுடன் சிலர் அதற்காக தவறான வழிகளையும் தேர்ந்தெடுக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் தவறான வழியினை தேர்ந்தெடுப்பதற்கான காரணம் , தான் எவ்வளவுதான் முயற்சி செய்தும் தான் அடைய நினைக்கின்ற பணமானது எனக்கு கிடைப்பதில்லை என்கின்ற மன ஆதங்கம் தான்.
உண்மையிலேயே பணமானது எல்லோரிடமும் அடைக்கலம் போவதில்லை. ஏனெனில் பணத்தை பற்றிய தெளிவான அறிவு மற்றும் சிந்தனையுள்ள பணத்தை தக்கவைப்பதற்கான ரகசியங்களை புரிந்த ஒருவரிடம் மட்டுமே பணம் நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கும்.
பணத்தை பற்றிய போதுமான அறிவில்லாத பணத்தின் ரகசியங்களை அறிந்திராத ஒருவரிடம் பணம் ஒருபோதும் நிலைத்து நிற்பதில்லை.
அதனால்தான் இன்று ஒரு சில குறிப்பிட்ட தரப்பினர்கள் மாத்திரமே பணத்தை தன்வசப்படுத்தி பணத்தின் மூலம் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
அதை தவிர்த்து பணம் பற்றிய போதுமான அறிவு இல்லாத கோடிக்கணக்கான மக்கள் இன்னும் அதே நிலையில் தான் உள்ளனர். இந்த நிலை மாறி எல்லோரும் அவர்கள் நினைக்கின்ற பணத்தினை அடைய வேண்டுமென்றால் பணம் பற்றிய பொருளாதார அறிவும், பணத்தை அடைவதற்கான ரகசியமும் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும்.
இந்தப் பதிவில் நீங்கள் அடைய நினைக்கின்ற பணத்தை சரியாக அடைந்து கொள்வதற்கு தேவையான ஆறு திட்டவட்டமான நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை அதில் குறிப்பிட்டுள்ளவாறு நீங்கள் சரியாக நடைமுறைப்படுத்தி வந்தால் நிச்சயமாக நீங்கள் அடைய நினைக்கும் பணத்தை வெகு விரைவிலேயே அடைந்துகொள்ள முடியும்.
6 TIPS TO GET THE MONEY YOU WANT TO ACHIEVE
பணம் பற்றிய உங்களது கொழுந்து விட்டெரியும் ஆசையினை நிறைவேற்றி அதனை உங்களுக்கு தேவையான பணம் ஆக மாற்ற தேவையான ஆறு வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை நீங்கள் சரிவர செயற்படுத்தும் போது நீங்கள் அடைய நினைக்கின்ற பணத்தினை மிக விரைவிலேயே பெற்றுக்கொள்ள முடியும்.
1. மனத்தை நிலைப்படுத்துதல்
இந்த வழிமுறை மூலம் நீங்கள் துல்லியமாக எவ்வளவு பணத்தினை அடைய வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அதனை உங்கள் மனதில் நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
எனக்கு ஏராளமான பணம் தேவைப்படுகின்றது என்று பொதுவாக கூறி கொள்ளாமல் உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படுகின்றது என்பதனை துல்லியமாக நீங்கள் உங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு நீங்கள் பதிய வைத்துக் கொள்ளும் போது அந்த குறிப்பிட்ட தொகை உங்கள் ஆழ்மனதில் சரியாக பதியப்பட்டு ஒவ்வொரு நாளும் உங்கள் நினைவில் தோன்றி அந்த பணத்தினை அடைவதற்கான வழியினை உங்கள் முன் கொண்டு வரும்.
ஏனெனில் இவ்வாறு உங்களுக்குத் தேவையான பணத்தினை துல்லியமாக உங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்வதன் மூலம் அப்பணத்தினை அடைவதற்கு பின்னால் உளவியல் ரீதியான காரணங்களும் உள்ளது.
எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதனை நம் மனதில் ஆழ்மனப் பதிவு செய்துவிட்டோம் என்றால் அது இயற்கையாகவே நடப்பதற்கான அனைத்து வழிகளையும் இந்த பிரபஞ்சம் செய்து கொடுக்கும் என்பதே மறுக்க முடியாத ஒரு உண்மையாகும்.
2. பதிலீடாக கொடுத்தல்
அதாவது நாம் எந்த ஒரு விடயத்தையும் அடைய வேண்டும் என்று நினைத்தால் நிச்சயமாக அதற்கு பதிலாக கொடுப்பதற்கு ஏதாவது ஒன்று இருக்கும். எதனையும் பதிலீடாக கொடுக்காமல் நாம் நினைக்கின்ற எந்த ஒரு விடயத்தையும் அடைந்து கொள்வது என்பது கடினமான ஒன்றாகும்.
அவ்வாறே நீங்கள் அடைய நினைக்கின்ற பணத்திற்காகவும் பதிலீடாக எதையாவது கொடுக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் எதனை பதிலீடாக கொடுக்க விரும்புகின்றீர்கள் என்பதை துல்லியமாக தீர்மானித்துக்கொள்ளுங்கள். ஒன்றைக் கொடுக்காமல் வேறொன்றை ஒருபோதும் பெற முடியாது.
3. நேரத்தை தீர்மானித்தல்
நீங்கள் உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை என்பதை தீர்மானித்த பின்னர் அதற்கு எதனை பதிலீடாக நீங்கள் கொடுக்கப் போகிறீர்கள் என்பதை தீர்மானித்து கொள்வீர்கள். அடுத்ததாக நீங்கள் செய்ய வேண்டியது நீங்கள் அடைய நினைக்கும் குறிப்பிட்ட தொகை பணத்தை எப்போது அடைந்து கொள்ள வேண்டும் என்பதை மிகத் துல்லியமாக தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
அதாவது எனக்கு அடுத்த இரண்டு வருடத்தில் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை என்று நீங்கள் நினைத்துக் கொண்டால் அந்த இரண்டு வருடம் உங்களுடைய கால எல்லையாகும்.
4. சீரான திட்டத்தினை உருவாக்கல்
நீங்கள் அடைய நினைத்த பணத் தொகையினை அடைந்து கொள்வதற்கு தேவையான ஒரு சீரான திட்டத்தை உருவாக்கி உடனடியாக செயலில் இறங்க வேண்டும். அவ்வாறு செயற்படுவதற்கு நீங்கள் தயாராக இருந்தாலும் சரி , தயாராக இல்லாவிட்டாலும் சரி.
உடனடியாக திட்டத்தினை செயல்படுத்தி ஆக வேண்டும். இங்கே நீங்கள் அமைக்கின்ற திட்டமானது மிகத் திட்டவட்டமானதாகவும், சீரானதாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் அடைய நினைக்கும் பணத்தினை அடைய முடிவதுடன், நீங்கள் சீரான திட்டம் ஒன்றை உருவாக்கிய அடுத்த கணமே அதனைச் செயற்படுவதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
என்னிடம் இதனை செயற்படுத்துவதற்கு போதுமான வசதி இல்லை. இன்னும் நாட்கள் சென்று நான் இதை செயல்படுத்த போகின்றேன் என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருக்காமல் உடனடியாக அதனை உங்களிடம் தற்போது உள்ளதை வைத்து செயற்படுத்துவதற்கு தயாராக இருங்கள். அப்போதுதான் நீங்கள் அடைய நினைக்கும் பணத்தினை அந்த குறிப்பிட்ட கால எல்லைக்குள் அடைந்து கொள்வதற்கு முடியும்.
5. எழுத்து வடிவம் ஆக்குதல்
நீங்கள் அடைய நினைக்கின்ற பணத்தை மற்றும் அதற்கான திட்டம் என்பவற்றை இப்பொழுது தெளிவான முறையில் எழுத்தில் வடியுங்கள். நீங்கள் துல்லியமாக எவ்வளவு பணத்தை பெற விரும்புகிறீர்கள்?, எப்போது பெற விரும்புகிறீர்கள்?, அந்த பணத்திற்கு பதிலீடாக நீங்கள் எதை கொடுக்க இருக்கின்றீர்கள்? என்பனவற்றை ஒரு தெளிவான மற்றும் சுருக்கமான வாக்கியமாக ஒரு காகிதம் ஒன்றில் எழுதிக்கொள்ளுங்கள்.
இதனை எந்த திட்டத்தின் மூலம் நீங்கள் பெற இருக்கின்றீர்கள்? என்பதையும் தெளிவாக அதில் விவரியுங்கள். நீங்கள் இவ்வாறு செய்வது உங்களுடைய அந்த இலக்கிலிருந்து உங்கள் எண்ணத்தை திசை திருப்பாமலும், எதிர்மறையான எண்ணங்கள் உங்களுக்குள் ஊடுருவாமல் இருப்பதற்கும் இது உதவும்.
6. தினமும் உரக்கப் படித்தல்
இவ்வாறு நீங்கள் எழுதியுள்ள வாசகத்தை தினமும் இருமுறை உரக்க படியுங்கள். இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பு ஒரு முறையும் அதே போல் காலையில் எழுந்தவுடன் ஒரு முறையும் படியுங்கள்.
நீங்கள் இவ்வாறு இதனை தொடர்ச்சியாக படித்து வரும் போது ஏற்கனவே அந்த பணம் உங்கள் வசமாகி விட்டதாக உங்கள் மனக்கண்ணில் பாருங்கள்... அவ்வாறு உணருங்கள்... அதனை நம்புங்கள்.
FINALLY
மேலே கூறப்பட்ட இந்த நடவடிக்கைகளில் உள்ள ஆறு அம்சங்களையும் நீங்கள் வரிசையாக பின்பற்ற வேண்டியது முக்கியமானதாகும். அதிலும் ஆறாவது நடவடிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலை நீங்கள் தவறாமல் பின்பற்றுவது மிக மிக முக்கியமாகும்.
நீங்கள் நினைக்கின்ற பணமானது உங்கள் கையில் வருவதற்கு முன்னே அது உங்கள் உங்கள் வசம் ஆகிவிட்டதாக கற்பனை செய்வது இயலாத காரியம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உங்கள் ஆழ்மனதிற்குள் உள்ள கொழுந்து விட்டெரியும் ஆசையானது இங்கு உங்களுக்கு மிகவும் துணையாக இருக்கும்.
உங்களுடைய விருப்பமானது உங்களை முழுமையாக ஆட்கொண்டு இருக்கும் அளவுக்கு நீங்கள் உண்மையிலேயே பணத்தை மிக ஆழமாக விரும்பினால் அதனை நீங்கள் உண்மையிலேயே கைவசபடுத்துவீர்கள் என நம்புவது என்பது மிகவும் கடினமான செயலாக இருக்காது.
மனத்தின் உடைய செயல்பாடுகள் குறித்து நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றால் இந்த நடவடிக்கைகள் உங்களுக்கு நடைமுறைக்கு சாத்தியமற்றவையாக தோன்றலாம். ஆனால் தோமஸ் அல்வா எடிசன் போன்ற மிகப்பெரும் சாதனையாளர்கள் இந்த ஆறு நடவடிக்கைகளையும் கவனமாக ஆராய்ந்து அவற்றை அங்கீகரித்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இங்கே மேலே குறிப்பிட்ட இந்த ஆறு நடவடிக்கைகளும் பணத்தினை தன் வசப்படுத்துவதற்கு இன்றியமையாதவை என்பதோடு மட்டுமல்லாது எந்த ஒரு இலக்கினை அடைவதற்கும் இவை உதவும் என்பதே தோமஸ் அல்வா எடிசனின் கருத்தாகும்.
இந்த நடவடிக்கைகளில் எந்தவித கடின உழைப்பும் தேவை இல்லை. நீங்கள் எதையும் தியாகம் செய்ய வேண்டியதும் இல்லை. இவற்றைச் ஏற்படுத்துவதற்கு பெருமளவான கல்வியறிவும் தேவைப்படுவதில்லை.
ஆனால் பணத்தினை தன் வசப்படுத்துவது என்பது தற்செயலானது அல்லது அதிர்ஷ்ட வசமானது என்று நம்மால் இருந்து விட முடியாது என்பதனை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பணத்தினை குவிப்பது தொடர்பாக தீராத ஆசை கொண்டு, அதனை நீங்கள் கைவசபடுத்துவீர்கள் என்று உண்மையிலேயே நீங்கள் நம்புகின்ற வரையில் செல்வங்களை உங்களால் ஒருபோதும் பெருமளவில் குவிக்க முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
-END-