1936 பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர், 4*100 மீட்டர் மற்றும் நீளம் தாண்டுதல் என ஒரே ஒலிம்பிக் போட்டியில் நான்கு தங்கங்களை வென்று உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு, ஹிட்லரையும் திகைப்படைய செய்தார் “ஜெசி ஓவன்ஸ்”. இந்த பெயரினை ஒலிம்பிக் போட்டிகள் என்ற வானம் இன்றும் பெருமையுடன் சுமந்து கொண்டிருக்கின்றது. அந்த அளவுக்கு ஒலிம்பிக் வரலாற்றில் பல சாதனைகளை நிகழ்த்திய கருப்பினத்தை சேர்ந்த ஒரு வீரரின் வாழ்க்கை வரலாற்றினை சுருக்கமாக பார்க்க இருக்கின்றோம்.
BIRTH AND FAMILY OF JESSE OWENS
1913 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் ஏழ்மையான கறுப்பின குடும்பத்தில் பிறக்கிறார் ஜேம்ஸ் கிளீவ்லன்ட் ஓவன்ஸ் (James Cleveland Owens). இவரின் தாத்தா கொத்தடிமையாக இருந்தவர் ஆவார்.
ஜேம்ஸ் கிளீவ்லன்ட் ஓவன்ஸ் என்பதன் முதல் எழுத்துக்களை கொண்டு எல்லோரும் ஓவன்ஸ் ஐ ஜே. சி (J.C) என்று அழைப்பார்கள். ஓவன்ஸ் பள்ளிக்குச் சென்ற முதல் நாள் அவரது பெயரை ஆசிரியர் கேட்டபோது ஜே. சி என்று சொல்ல அதனை ஆசிரியர் ஜெசி (Jesse) என எழுதிக் கொண்டார். அன்றிலிருந்து அவரது பெயர் ஜெசி ஓவன்ஸ் என மாற்றம் பெற்றது.
ஓவன்ஸின் குடும்பமானது மிகவும் ஏழ்மையானதாக இருந்தது. அதனால் அவர்களின் வாழ்க்கை மிகவும் சிரமமாக காணப்பட்டது. ஓவன்ஸ் குடும்பத்திற்கு உதவுவதற்காக மளிகைப் பொருட்களை வினியோகம் செய்வது, காலணிகளை பழுது பார்ப்பது, மின் தூக்கிகள் இயக்குவது போன்ற பல்வேறு வேலைகளைச் செய்தார்.
அவர் அந்த வேலைகளை செய்யும் போதுதான் ஓடுவது என்பது தனக்கு மிகவும் பிடிக்கும் என்பதை உணர்கிறார். ஜெசி ஓவன்ஸின் அந்தத் தெளிவுதான் அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.
OHIO UNIVERSITY
அவர் கல்வி கற்கும் பாடசாலையில் ஒரு நாள் 60 மீட்டர் தூரம் ஓடும் பயிற்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ஓடிய ஜெசி ஓவன்ஸின் திறமையை பார்த்து அவருக்கு நல்லதொரு எதிர்காலம் இருப்பதை உணர்ந்தார் அவரின் பயிற்சியாளர் சார்லி ரைலி. அத்தோடு ஜெசி ஓவன்ஸ்க்கு பயிற்சி அளிக்கவும் விரும்பினார்.
ஆனால் பள்ளி முடிந்ததும் பல வேலைகளை பார்க்கின்ற கட்டாயமானது ஜெசி ஓவன்ஸ்க்கு இருந்ததால் எப்படி தான் பயிற்சியில் ஈடுபடுவது என்று தயங்கினார். ஜெசி ஓவன்ஸின் நிலையினை புரிந்துகொண்ட பயிற்சியாளர் ரைலி, காலை நேரங்களில் தனியாக பயிற்சி அளிப்பதாக கூறவே அதனை ஏற்றுக்கொண்டார் ஜெசி. அதிலிருந்து அவர் பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்க தொடங்கினார்.
ஜெஸ்ஸி ஓவன்ஸ்க்கு 19 வயதான போது கல்லூரி திடல்திட போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டத்தில் அப்போதிருந்த உலக சாதனையை சமன் செய்தார். அவரது இந்த அபார திறமை கண்டு அமெரிக்காவின் பல்கலைக்கழகங்கள் அவரை தங்களுடைய மாணவன் ஆக்கிக் கொள்வதற்காக அடித்துக்கொண்டு போட்டி போட்டனர். அப்படி முன்வந்த 28 பல்கலைக்கழகங்களிலிருந்து ஓஹியோ பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுத்தார் ஜெசி ஓவன்ஸ்.
THE TRIBULATIONS SUFFERED BY JESSE OWENS
அந்தக் காலகட்டத்தில் பல இன்னல்களை சந்தித்தார் Jesse Owens. அவர் கறுப்பர் என்பதால் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே தங்க அனுமதி மறுக்கப்பட்டது. திடல்திட விளையாட்டு குழுக்களோடு பயணம் செய்யும்போது கருப்பர்கள் என்று ஒதுக்கப்பட்ட உணவகங்களிலும், ஹோட்டல்களில் மட்டும் தான் அவர் உணவு உண்ண முடியும், தங்க முடியும் அல்லது உணவை பொட்டலமாக வாங்கி வெளியில் சாப்பிட வேண்டும்.
ஒரு சில தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் ஹோட்டலில் தங்குவதற்கு அனுமதி கிடைத்தாலும் பின் கதவாக நுழைய வேண்டிய நிர்ப்பந்தம் ஜெஸ்ஸி ஓவன்ஸ்க்கு ஏற்பட்டது. மேலும் ஹோட்டலுக்குள் மின்தூக்கி (Electrical Lift) பயன்படுத்தக்கூடாது, படிகளில் ஏற வேண்டும் என பல்வேறு இன்னல்களை தன் வாழ்வில் தான் ஒரு கருப்பர் என்பதற்காக சந்தித்தார்.இப்படி பெரும்பான்மையினரால் எல்லாவிதங்களிலும் ஒதுக்கப்பட்ட ஜெசி ஓவன்ஸ் அவரது ஓட்ட திறமைக்காக மட்டுமே விரும்பப்பட்டார்.
JESSE OWENS RECORDS
தனக்கு இழைக்கப்படும் சமூக அநீதிகளுக்கு, தன் கால்களை கொண்டு பதிலடி கொடுத்தார் ஜெசி ஓவன்ஸ். 1935 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி ஒரு அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினார். அன்று ஒரே நாளில் மூன்று உலக சாதனையை நிகழ்த்தியதோடு மட்டுமன்றி நான்காவது சாதனையை சமன் செய்தார் ஜெசி ஓவன்ஸ்.
அதற்கு அவர் எடுத்து கொண்ட நேரம் எவ்வளவு தெரியுமா? வெறும் 45 நிமிடங்கள்தான். விளையாட்டு உலகில் அதற்கு முன்னும் அப்படி ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டது இல்லை. அதற்குப் பிறகும் அந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை. அந்த அதிசயத்தை நிகழ்த்திய அடுத்த ஆண்டே உலகை வியப்பிலும் ஹிட்லரை வெறுப்பிலும் ஆழ்த்தினார் ஜெசி ஓவன்ஸ். 1936 ஆம் ஆண்டு பெர்லினில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அவர் பிரகாசமாக மின்னினார்.
ஹிட்லர் அப்போது ஆட்சியில் இருந்த காரணத்தினால் அந்த ஒலிம்பிக் போட்டிகள், ஹிட்லர் ஒலிம்பிக் போட்டிகள் (Hitler Olympics) என்று அழைக்கப்பட்டன. ஹிட்லரின் கண்களுக்கு முன்னே ஒன்றல்ல, இரண்டல்ல மூன்று உலக சாதனைகளோடு ஒரே போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்று குவித்தார் ஜெசி ஓவன்ஸ்.
100 மீட்டர், 200 மீட்டர், 4*100 மீட்டர் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகியவற்றில் ஜெசி ஓவன்ஸ்க்கு தங்கம் கிடைத்தது. ஒரே ஒலிம்பிக் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமை அவருக்குக் கிட்டியது. அப்படிப்பட்ட சாதனையை செய்தும் அவர் கருப்பர் என்ற ஒரே காரணத்திற்காக, எந்த விளம்பர நிறுவனமும் அவரை ஒப்பந்தம் செய்ய முன் வரவே இல்லை.
LIFE AFTER THE OLYMPICS
தனக்கு நன்றாக பேசும் திறன் உண்டு என்பதை உணர்ந்த ஜெசி ஓவன்ஸ் பொது நிகழ்ச்சிகளில் பேசவும், விரிவுரை வழங்கவும் தொடங்கினார். அவரது சுபாவம் பலருக்குப் பிடித்த காரணத்தினால் சொந்தமாக பொது உறவு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்.
அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து மதம், நேர்மை, கடும் உழைப்பு ஆகிய மூன்றைப் பற்றியும் அவர் பேசினார். வசதி குறைந்த பகுதிகளில் வசிக்கும் சிறுவர்களுக்காக பல விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஆதரவளித்து ஊக்கமூட்டினார்.
1976 ஆம் ஆண்டு ஓவன்ஸ்க்கு Presidential Medal Of Freedom எனப்படும் தனிநபருக்கான அமெரிக்காவின் உயரிய விருதை வழங்கி கௌரவித்தார் அப்போதைய அமெரிக்காவின் அதிபர் ஜெரால்ட் போர்ட்.
JESSE OWENS FAMILY AND HIS DEATH
தான் காதலித்த ரூத் சாலமன் என்ற பெண்ணை மணந்து கொண்டு குளோரியா, பெவர்லி, மார்லீன் என்ற மூன்று பெண் குழந்தைகளுக்கு தந்தையானார் ஜெசி ஓவன்ஸ். அவரது மனைவியும் மகள் மார்லீன் ம் இன்று வரை Jesse Owens Foundation என்ற அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர்.
FINALLY
வறுமை, நிற வெறி, இன ஒதுக்கல் என பல சமூக அநீதிகளை தாண்டி ஜெசி ஓவன்ஸால் உலகம் போற்றும் அளவுக்கு உயர்ந்து நிற்க முடியும் என்றால், நமக்குத் தடையாக இருப்பவை எவை? கொத்தடிமையாக வாழ்ந்த ஒருவரின் பேரன் விளையாட்டு உலகில் உச்சத்தை தொட்டது அதிர்ஷ்டத்தாலோ, மந்திரத்தாலோ, ஊக்கமருந்தினாலோ அல்ல.
பயிற்சி தடங்களில் அவர் சிந்திய வியர்வையும், தன் தோலின் நிறம் ஒரு குறை இல்லை என்ற நம்பிக்கையும், கடும் உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் உலகம் எப்போதுமே தலைவணங்கும் என்ற தைரியமும் தான் ஜெசி ஓவன்ஸ்க்கு Olympics என்ற வானத்தை வசப்படுத்தியது.