எந்தவித எதிர்பார்ப்புமின்றி நாம் செய்கின்ற எந்தவொரு உதவியும் வீண்போவதில்லை. நிச்சயமாக அவை நமது இக்கட்டான சூழ்நிலைகளில் பெருமளவில் உதவி செய்யும் என்பதை மறந்து விடாதீர்கள். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம். 1892 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிகப் பிரபலமான பல்கலைக்கழகமான ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த ஏழை மாணவன் அவன். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் மிகுந்த வறுமைக்கு மத்தியில் அவன் அந்த நிலையை அடைந்திருந்தான். ஆனாலும் மேற்கொண்டு அவனது படிப்பினை தொடர்வதற்கு அவரிடம் போதுமான பணம் இருந்திருக்கவில்லை. இந்நிலையில் அவன் அவனது உயிர் நண்பனோடு சேர்ந்து ஒரு திட்டம் ஒன்றினை மேற்கொண்டான். அது யாதெனில், ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சியினை நடத்தி அதன் மூலம் வருகின்ற வருமானத்தை வைத்து தனது மேற்படிப்பை தொடரலாம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்.
அவ்வாறு அவர்கள் திட்டமிட்ட இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் புகழ் பெற்றிருந்த பிரபல இசைக்கலைஞரான இக்னேசி ஜே. பேட்ரெவ்ஸ்கியை சுமார் 2,000 டாலர்கள் கொடுத்து ஒப்பந்தம் செய்தனர். இந்தப் பணமானது அவர்களுக்கு அதிகமாக இருந்தாலுமே வருவதாகச் சொன்னது உலகப்புகழ் பெற்ற இசைக் கலைஞர் என்பதனால் மிகவும் சந்தோஷப்பட்டு கொண்டனர். இந்நிலையில் எப்படியாவது இந்த நிகழ்ச்சியை மிகவும் பிரம்மாண்டமாக செய்யவேண்டும், மக்கள் மத்தியில் பேசப்படக்கூடிய வெற்றிகரமான இசை நிகழ்ச்சியாக மாற்ற வேண்டும் என்பதற்காக இரவு பகலாக அவர்கள் இருவரும் உழைத்தனர். அதன்படியே நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளையும் தயார் செய்து விற்பனை செய்யத் தொடங்கினர். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்கள் நிகழ்ச்சியினை செய்வதாக இருந்த அந்நாளில் நகரின் வேறு சில இடங்களில் முக்கியமான சில நிகழ்ச்சிகள் இருந்தபடியினால் அவர்கள் நினைத்த அளவுக்கு டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை. மிகவும் குறைந்த அளவிலேயே விற்பனை செய்யப்பட்டது. இதனால் அவர்கள் இருவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானர்.
நிகழ்ச்சி முடிந்ததன் பின்னர் பேட்ரெவ்ஸ்கியை சந்தித்த மாணவர்கள், அவரிடம் 1600 டாலர்களை கொடுத்துவிட்டு, இந்தத் தொகைதான் இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த மொத்த வருமானம் ஆகும். பெருந்தன்மையுடன் இதனை ஏற்றுக் கொள்ளுங்கள். மீதி பணத்தினை மிக விரைவில் நாங்கள் கொடுத்துவிடுகிறோம் என்று கெஞ்சிய படியே காசோலை ஒன்றையும் அவரிடம் கொடுக்கின்றனர்.
மாணவர்களின் இந்த பரிதாப நிலையை கண்ட பேட்ரெவ்ஸ்கி, அவர்கள் கொடுத்த காசோலை கிழித்துவிட்டு பணத்தினை அம்மாணவர்களிடமே கொடுத்துவிடுகின்றார். அத்தோடு நீங்கள் எனக்கு தருவதாக இருந்த பணத்தினை நான் உங்களுக்கு முழுவதுமாக தள்ளுபடி செய்கிறேன். உங்கள் கல்விக்கான மேலதிக செலவுகளை மேற்கொள்வதற்காக இந்த பணத்தினை பயன்படுத்துங்கள் என்று மிகவும் பெருந்தன்மையுடன் கூறுகின்றார்.
இதனோடு நிறுத்தி விடாத பேட்ரெவ்ஸ்கி, இசை நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கிற்கான வாடகையினை கூட கொடுக்க முடியாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளான மாணவர்களின் நிலையினை அறிந்து அந்த அரங்கத்திற்கான வாடகையையும் அவரே கொடுத்து விடுகிறார். இவரது இந்த செயல் மாணவர்களை கண்கலங்க வைத்ததோடு அவர்களுக்குள் பெருமிதமான நன்றியுணர்வினையும் ஏற்படுத்தியது.
பேட்ரெவ்ஸ்கி மிகப்பெரும் செல்வந்தராக இருந்த காரணத்தினால் மாணவர்களுக்காக அவர் விட்டுக்கொடுத்த தொகையானது மிகவும் சிறியதாகவே தென்பட்டது. இதனால் அதனை பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவர்களின் படிப்பின் நலன் கருதி அந்த உதவியை அவர் செய்தார். எந்தவித முன் அனுபவமும் இல்லாத அவர்களுக்கு பேட்ரெவ்ஸ்கி செய்த உதவியானது அவருக்குள் இருந்த மனிதாபிமானத்தை எடுத்துக்காட்டுகின்றது எனலாம்.
ஆனால் பேட்ரெவ்ஸ்கி அவ்வாறான ஒருவராக இருந்திருக்கவில்லை. இம்மாணவர்களுக்கு உதவுவதால் நானோ அல்லது என்னுடைய செல்வமோ குறைந்து போவதில்லை, மாறாக அவர்கள் கல்வியில் மேம்பட்டவர்களாக வந்துவிட வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடனேயே அவர் இந்த உதவியை அம் மாணவர்களுக்கு செய்தார்.
இந்நிலையில் இந் நிகழ்வு நடந்து பல வருடங்கள் சென்றன. காலத்தின் போக்கில் பேட்ரெவ்ஸ்கி மேலும் புகழின் உச்சிக்கு சென்று ஒரு கட்டத்தில் போலந்து நாட்டின் பிரதம மந்திரியாகவே மாறிவிட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக அக்காலக்கட்டத்தில் முதலாம் உலகப் போர் தொடங்கியது.
இப்போரின் காரணமாக போலாந்து நாட்டு மக்கள் மிகப்பெரும் வறுமையினை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதோடு, தனது சொத்துக்களை இழந்து நடுத்தெருவில் நின்றனர். அவ்வேளையில் போலாந்து முழுவதும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இது நடந்தது 1918 ஆம் ஆண்டாகும்.
இந்நிலையில் பசியோடும், பட்டினியோடும் இருக்கின்ற தன்னுடைய லட்சக்கணக்கான மக்களின் நிலையினை எவ்வாறு சமாளிப்பது? அவர்களுக்காக யாரிடம் சென்று உதவி கேட்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த பேட்ரெவ்ஸ்கி இறுதியாக வேறு வழியில்லாமல் அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழுவான அராவிடம் சென்று உதவி கேட்கிறார். அப்போது அக்குழுவின் அதன் தலைவராக இருந்தவர் ஹெர்பெர்ட் ஹூவர் என்பவர் பேட்ரெவ்ஸ்கி கேட்டுக்கொண்டதை அடுத்து, அமெரிக்காவின் உதவிக்கரம் தொடர்ச்சியாக அடுத்த சில நாட்களில் போலாந்து நாட்டிற்கு ஆயிரக்கணக்கான டன்கள் உணவு, தானியங்கள் மற்றும் மளிகை பொருட்கள் ஆகியன அனுப்பி வைக்கப்பட்டன. அதன் மூலம் சுமார் 1.5 மில்லியன் போலந்து மக்கள் பசியாறினர். ஒரு மிகப்பெரும் பேரழிவிலிருந்து தன்னுடைய நாட்டு மக்கள் பாதுகாக்கப்பட்டதை நினைத்து நிம்மதி பெருமூச்சு விட்டார் பேட்ரெவ்ஸ்கி. அத்தோடு தான் உதவி கேட்ட உடனேயே தன் நாட்டு மக்களுக்கு பல ஆயிரம் டன் உணவுப்பொருட்களையும் தந்து உதவிய அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவி குழுவின் தலைவரை நேரில் சந்தித்து நன்றி சொல்வதற்காகவும் சென்றார்.
அதன்படி ஹெர்பெர்ட் ஹூவரை நேரில் சந்தித்து கண்கள் பனிக்க நன்றி தெரிவித்தபோது, “வேண்டாம்…. வேண்டாம்… நீங்கள் ஒரு நாட்டின் பிரைம் மினிஸ்டர். நீங்கள் போய் என்னிடம் நன்றி சொல்வதா? என்று கூறியதோடு மட்டுமன்றி இந்த உதவியை நான் உங்களுக்கு செய்தது என்பதே நீங்கள் எனக்கு செய்த மிகப்பெரிய உதவிக்கான நன்றிக்கடனே ஆகும்” என்று ஹெர்பெர்ட் ஹூவர் கூறினார். “உங்களுக்கு நினைவிருக்கிறதா 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே ஸ்டான்போர்டு பல்கலைக்கழகமாணவர்கள் இருவர் அவர்களுடைய வகுப்பு கட்டணத்தை கூட கட்ட முடியாமல் அங்கலாய்த்தபோது நீங்கள் அவர்களுக்கான நிகழ்ச்சியை இலவசமாக நடத்திக் கொடுத்ததோடு மட்டுமன்றி வாடகையையும் செலுத்தி உதவினீர்கள் அல்லவா? அந்த மாணவர்களில் ஒருவன் தான் நான்” என்றார் ஹெர்பெர்ட் ஹூவர். இவ்வாறு ஹெர்பெர்ட் ஹூவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்த பேட்ரெவ்ஸ்கி கண்ணீர் மல்க கண்கள் கலங்கியபடி அவரை கட்டி அணைத்து ஆற்பறிக்கின்றார். பேட்ரெவ்ஸ்கி சிறிதும் நினைத்து பார்த்திருக்கவில்லை, தான் அன்று செய்த மிகச்சிறிய உதவி இன்று இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் பல மடங்காக திரும்பக் கிடைக்குமென்று. ஆனால் இதன் பின்னரும் ஹூவரின் நன்றிக்கடன் முடியவில்லை.
இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் 1946 ஆம் ஆண்டு போலந்து நாட்டுக்கு உதவுவதற்கு என்று ஒரு தனி கமிஷனையே ஹெர்பெர்ட் ஹூவர் அமைத்தார். அதன் சார்பாக போலந்து நாட்டிற்கு நேரடியாகவே சென்று அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு தேவையான உணவு திட்டங்களை வகுத்துக் கொடுத்ததோடு மட்டுமன்றி அவற்றிற்கான அமெரிக்க அரசின் சகல விதமான உதவிகளையும் தயார் செய்துவிட்டு வந்தார்.
இவ்வாறு பல்வேறு உதவிகளை போலாந்து நாட்டிற்காக செய்த ஹெர்பெர்ட் ஹூவரை கௌரவிக்கும் முகமாக அந்நாட்டின் பாராளுமன்றத்தில் ஹூவரை புகழ்ந்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு மட்டுமன்றி, போலந்து நாட்டின் பல்கலைக்கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியும் கௌரவித்தது. இதனால் ஹெர்பெர்ட் ஹூவர் போலாந்து நாட்டின் மக்களின் மனதில் ஹீரோவாகவே இருந்து வந்தார்.
அமெரிக்காவின் 31-ஆவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹெர்பெர்ட் ஹூவர் UNICEF& Care என்று இரண்டு புதிய சர்வதேச தொண்டு அமைப்புகளை நிறுவினார். இந்த அமைப்புக்களின் மூலம் இன்று வரை பல இலட்சக்கணக்கான மக்கள் உலகம் முழுக்க பசியாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த எதிர்பார்ப்புமின்றி தனிநபறொருவருக்கு செய்த உதவியானது எப்படி ஒரு நாட்டிற்கே பன்மடங்கு உதவியாக திரும்ப கிடைத்தது என்பதை இந்த கதையின் மூலம் நீங்கள் அனைவரும் உணர்ந்து இருப்பீர்கள்.
FINALLY
உண்மையிலேயே உதவி என்பது எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி நாம் செய்யும் போது நிச்சயமாக அந்த உதவியானது நாம் கஷ்டப்படுகிற போது அல்லது நம்மைச் சார்ந்து இருக்கின்ற, நாம் நேசம் வைக்கின்றவர்கள் கஷ்டப்படுகின்ற போது நமக்கு திரும்ப கிடைக்கும்.
நாம் எதிர்பாராத, நாம் கஷ்டப்படுகின்ற நேரத்தில் அந்த உதவி கிடைக்கும் போது அதை விட பெரிய பேருதவியாக எதுவும் நமக்குத் தெரியாது. இக்கதையில் வந்துள்ள ஹெர்பர்ட் ஹூவர் மற்றும் இக்னேசி ஜே. பேட்ரெவ்ஸ்கி ஆகிய இரு மேதைகளின் மூலம் இந்த உண்மை உலகுக்கு தெளிவாகின்றது.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்த ஒரு உதவி போலாந்து நாட்டையே வாழ வைத்தது என்றால் நம்மில் எத்தனை பேர் உதவியை எதிர்பாராமல் செய்து கொள்கின்றோம் என்பதை சற்று சிந்திக்க வேண்டும்.
இக்கட்டுரையை படிக்கும் நீங்கள் இனி வரும் காலங்களில் உங்களிடம் யாராவது உதவி கேட்டால் அல்லது யாருக்காவது உங்களால் உதவி செய்ய முடிந்தால் எந்த எதிர்பார்ப்புமின்றி அதை செய்து முடியுங்கள்.
நிச்சயமாக அது உங்கள் வாழ்வில் மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும். நீங்கள் எதிர்பாராத நேரத்தில் நீங்கள் செய்த உதவியானது உங்களுக்கு பன்மடங்காக கிடைக்கும் என்பது இயற்கையின் விதி ஆகும்.